/

இந்த வாரம் கலாரசிகன் - 06-10-2024

நாகாலாந்து ஆளுநர் மேதகு இல.கணேசன் சென்னை வந்திருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது. அவரை சந்தித்து நீண்ட நாள்களாகிவிட்டன.

News image
இந்த வாரம் கலாரசிகன்
Updated On :17 டிசம்பர் 2025, 1:39 pm

கலாரசிகன்

நாகாலாந்து ஆளுநர் மேதகு இல.கணேசன் சென்னை வந்திருக்கிறார் என்கிற தகவல் கிடைத்தது. அவரை சந்தித்து நீண்ட நாள்களாகிவிட்டன. வடகிழக்கு மாநிலங்களின் நிலைமை எப்படி இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆவலில் தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள அவரது இல்லத்துக்கு நேற்று சென்று சந்தித்தேன்.

அவரிடம் நீண்ட நேரம் இலக்கியமும், ஆன்மிகமும் சிறிது நேரம் நடப்பு அரசியலும் பேசிவிட்டுத் திரும்பினேன். மெட்ரோ ரயில், மேம்பாலப் பணிகள் நடந்துகொண்டிருப்பதால், இப்போதெல்லாம் தி.நகருக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து வெளியேறுவது என்பது, மகாபாரத சக்ர வியூகத்துக்குள் நுழைந்து வெளிவருவது போன்றது. குறைந்தது அரை மணிநேரமாவது சுற்றிவர வேண்டும்.

அப்படி சுற்றி வரும்போது, பாண்டி பஜாரில் நுழைந்து, தி.நகர் தபால்நிலையம் வழியாகப் பயணிக்க நேர்ந்தது. இடதுபுறம் திரும்பினால் தீனதயாளு தெரு. தீனதயாளு தெருவின் அடையாளம் (லேண்ட் மார்க்) வானதி பதிப்பகம். அதுவரை போய்விட்டு வானதி பதிப்பகத்துக்குள் நுழைந்து வானதி ராமநாதனிடம் சற்று அளவளாமல் எப்படி மேலே பயணிப்பது?

டாக்டர். சுதா சேஷய்யன் எழுதிய 'அந்தக் கால மருத்துவர்கள்' புத்தகம் இருந்தால் இரண்டு பிரதிகளை வாங்கிச் செல்ல வேண்டும் என்றும் நினைத்திருந்தேன். அதுவும் நிறைவேறியது.

ராஜாஜி எழுதிய புத்தகங்கள் பலவற்றைப் பதிப்பித்தது வானதி பதிப்பகம்தான். அந்தப் புத்தகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. ராஜாஜியின் கடைசி காலங்களில், அவர் சொல்லச் சொல்ல மீ.ப.சோமு எழுதி வெளிவந்த புத்தகங்கள் பல. அவை ராஜாஜி - சோமு என்கிற பெயருடன் வானதி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டன.

அங்கிருந்த புத்தகங்களில், ராஜாஜி எழுதி முதலில் 1960-ஆம் ஆண்டு நவம்பரில் வெளிவந்த 'ஆற்றின் மோகம்' என்கிற புத்தகமும் இருந்தது. ஏற்கெனவே நான்கு பதிப்புகள் கண்டுவிட்ட புத்தகம் அது. ராஜாஜி எழுதிய புத்தகம் என்பதால், படிப்பதற்கு வாங்கி வந்தேன். இரவோடு இரவாகப் படித்து முடித்தேன்.

ராஜாஜி எழுதிய 19 கட்டுரைகளின் தொகுப்புதான் 'ஆற்றின் மோகம்'. இரண்டாவது கட்டுரையின் தலைப்பே, புத்தகத்தின் தலைப்பாக வைக்கப்பட்டிருக்கிறது. கடலில் சங்கமிக்கும் ஆற்றையும், இறைப்பரம்பொருளில் கலக்கும் ஆன்மாவையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருக்கும் அந்தக் கட்டுரை, வேதாந்த சாரத்தைப் பிழிந்து, சாமானியர்களுக்குக் கூறப்பட்டிருக்கும் உபதேசம் என்றுதான் கொள்ள வேண்டும்.

அதேபோலத்தான், 'திருக்குறளைப் படி' கட்டுரையில், தான் ஏன் நாடகம், சினிமா பார்ப்பதில்லை என்பதற்கு விளக்கம் தந்திருக்கிறார். 'நடிகர் கலை' என்கிற கட்டுரையில் உவமைகளாலும், கதை வடிவத்திலும் மிகப் பெரிய தத்துவங்களை சாமானியர்களுக்கும் புரியும் விதத்தில் சொன்னதால்தான் ராஜாஜி ஒரு மூதறிஞர் என்பதைப் புரிந்து கொண்டேன்!

கவிஞர் முத்துலிங்கம் எழுதிய 'காற்றில் விதைத்த கருத்து' என்கிற 'தினத்தந்தி ஆதித்தனார் விருது' பெற்ற நூலின் இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது. அதை எனக்கு அனுப்பித் தந்திருந்தார்.

பல்வேறு நாடுகளிலும், இந்தியாவில் நடந்த பல்வேறு நிகழ்வுகளிலும் கவிஞர் முத்துலிங்கம் ஆற்றிய சொற்பொழிவுகள் இதில் கட்டுரை வடிவம் பெற்றிருக்கின்றன. கவிஞர் ஜீவபாரதியின் வற்புறுத்தலுக்கு இணங்க புத்தக வடிவம் பெற்றிருக்கும் 'காற்றில் விதைத்த கருத்து' பல முக்கியமான பதிவுகளை உள்ளடக்கியது.

'கவிதைத் தமிழ்' என்கிற கட்டுரைக்காக அவருக்கு முனைவர் பட்டம் வழங்கலாம். சங்க இலக்கியத்திலும், சமய இலக்கியத்திலும் நுண்மாண் நுழைபுலத்துடன் மூழ்கி முத்தெடுத்திருக்கிறார் கவிஞர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்த 'ஆன்மிகம் வளர்த்த அரசியலின் ஞானி' கட்டுரையும், கவியரசு கண்ணதாசன் குறித்த 'கலையுலகக் கம்பன்' கட்டுரையும் புதிய பல செய்திகளைத் தருகின்றன. தனது சமகால திரைப்படப் பாடலாசிரியர்கள் பலர் குறித்து சிலாகித்து எழுதியிருக்கும் அவரது பெருந்தன்மையை வியக்காமல் எப்படி இருப்பது!

1964-இல் தூத்துக்குடி போஸ் மைதானத்தில் அரசமைப்புச் சட்டத்தை எரித்ததற்காக புலவர் பொன்னி வளவன் கைது செய்யப்பட்டபோது, நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை கவிதையில் அளித்தார். 'இதுவரை கவிதையிலேயே நீதிமன்றத்தில் வாக்குமூலம் தந்த ஒரே கவிஞர் அவர்தான். அவருக்குரிய சிறப்பை அவர் சார்ந்திருந்த கட்சி அளிக்கவில்லை' என்கிற கவிஞர் முத்துலிங்கத்தின் பதிவையும், அந்தக் கவிதையையும் நான் ரசித்துப் படித்தேன்.

பாரதியார் குறித்தும், பாரதிதாசன் குறித்தும் அவர்களுக்கு இடையே இருந்த நெருக்கம் குறித்தும் பதிவு செய்திருக்கும் கவிஞர் முத்துலிங்கம், தனது திறமையை உணர்ந்து பயன்படுத்திக் கொண்ட எம்.ஜி.ஆர். குறித்தும், இளையராஜா குறித்தும் பதிவு செய்ய மறக்கவில்லை.

சுங்க நெடுஞ்சாலைகள் வழியாக தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம், இருபுறமும் நிழல் கொடுக்கும் புளிய மரங்களும், மாமரங்களும் இருந்த பழைய சாலைகள் நினைவுக்கு வரும். சாலைகள் அமைத்தல், சாலைகளின் இருபுறமும் மரம் வளர்த்தல் என்பன மன்னராட்சி காலத்திலிருந்து அரசின் கடமைகளாகக் கருதப்பட்டன.

ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது சாலையோரங்களில் புளியமரமும், மாமரங்களும் நடுவதன் காரணங்களைச் சுட்டிக்காட்டினார். யாத்திரிகர்கள் வெயிலுக்கு ஒதுங்க; புள்ளினங்கள் கூடு அமைத்துத் தங்க; சுற்றுச்சூழலைப் பாதுகாக்க; பிராண வாயு உற்பத்தி; எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த வழியே செல்லும் சிறார்கள் கல்லடித்து புளியங்காய்களையும் மாங்காய்களையும் பறித்து உண்ண - என்று பயன்களைப் பட்டியலிட்டார்.

புளியங்காயிலும் மாங்காயிலும் இருக்கும் வைட்டமின்-சி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் என்பதால், மருத்துவர்களுக்கு வேலை குறையும் என்றும் சிரித்துக் கொண்டே சொன்னார்.

சாலையில் இருபுறமும் இருந்த மரங்களையெல்லாம் வெட்டிச்சாய்த்துவிட்டு, ஆறு வழிப்பாதை கொண்ட நெடுஞ்சாலை அமைக்கும்போது, நடுவில் செவ்வரளிப் பூஞ்சோலைகள் அமைக்கிறார்கள். அதற்குப் பதிலாக முன்பு போல மரங்கள் நட்டு பராமரித்தால், புள்ளினங்கள் வாழ்த்தும் என்று நான் நினைத்துக் கொள்வேன்.

எனது கருத்தைப் பிரதிபலிப்பதுபோல இருந்தது 'முகமறியா சிற்பி' என்கிற இரா.சிவானந்தத்தின் கவிதைத் தொகுப்பில் காணப்படும் இந்த ஹைக்கூ.

சாலையின் இருமருங்கும்

வெட்டப்பட்டன மரங்கள்

ஆறுதலாய் நடுவில் செவ்வரளி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.