இலங்கை யாழ்ப்பாணக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் அ. சதாசிவம் பிள்ளையால் 1886-இல் பாவலர் சரித்திர தீபகம் எனும் நூல் இயற்றப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழ்த்தாய்க்கு மணிமகுடமாகவும் பாக்கள் படைத்த பாவலர்களின் பாசறையாகவும் இந்நூல் திகழ்கிறது.
இந்நூலைப்பற்றிக் குறிப்பிடும் பாலியர்நேசன் பத்திராதிபர் சி.உ. சின்னத்தம்பி, 'யாழ்ப்பாணக் கல்லூரிச் சுபாசாரியாரும் உதயதாரகராதியாருமாகிய சதாசிவம் பிள்ளை அமைத்த பாவலர் சரித்திர தீபகம் என்னும் இந்நூலைப் படிக்கப் படிக்கச் சொல்லும் பொருளும் அமிழ்தெனச் சுவைத்தன' என்று கூறியிருப்பது நோக்கத் தகும். பாவலர் சரித்திர தீபகம் நூல் பாவலர்களின் வரலாறுகளை ஆய்ந்தறிந்து எடுத்துரைக்கிறது.
தொல்தமிழாசான் அகத்தியர் தொடங்கி, பெருங்கவி கம்பர் பெருமானின் புதல்வர் அம்பிகாபதியை உள்ளடக்கி, திருவண்ணாமலையிலே திருத்தொண்டராய்த் திகழ்ந்த குகை நமச்சிவாயருக்கு மாணாக்கரான பெண்ணை நதியோரத்தில் தவஞ்செய்து நிஷ்டானுபூதி எனும் நூல் படைத்தவருமான க. ஆறுமுகசுவாமிகளையும் அறிமுகப்படுத்தி, பலரும் அறியாத வேதாந்த கணித சாத்திரங்களின் நிறைகுடம், புலவரேறு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இராமசாமி ஐயனையும் எடுத்துக்காட்டி, 'நாமும் ஓர் ஆசிரியரை இழந்தோம், தமிழ் ஒரு வித்துவானை இழந்தது' என ஆன்றவிந்த அறிஞர்களால் போற்றப்பட்ட செய்தியோடு, இராமானுச கவிராயர் நன்னூலுக்கு உரைவரைந்ததையும் அறிய இயலுகிறது.
திருவல்லிக்கேணி எம்பெருமான் பேரில் அவர் இயற்றிய 'பார்த்தசாரதி பாமாலை'யும், திருவேங்கடத்தான் பேரிலான 'திருவேங்கடவனுபூதி'யையும், கச்சியம்பலத்தான் அருளாலான பெருமான் வரதராசரின் பேரிலமைந்த 'பதிற்றுப்பத்தந்தாதி'யையும் விளக்கியுரைத்து அதனாற்றான் அரிய செய்திகளையும் காட்டுகிறது பாவலர் சரித்திர தீபகம். சிதம்பரத்தில் வாழ்ந்து நின்ற ஆன்மிக அறவாசி, ஒழுக்கத்தால் தசநிகண்டுகளுள் ஒன்றான அகராதி நிகண்டை (இரேவணாத்தியர் சூத்திரம்) உருவாக்கிய இரேவணாத்தியரை அறிமுகப்படுத்தியும், உலக நீதி கண்ட உலகநாதர் தம் விவேகத்தால் புலவர் எனும் பெரும் பெயர் பெற்றவர், சாதிபேத விளக்கம் என்னும் பாடலையும் இயற்றினார் எனும் செவிமடல் படாத செய்தியையும் நம் சிந்தைக்குட்படுத்தியுள்ள பாங்கு மெச்சத்தகும்.
ஒüவையார் பற்றி நூலாசிரியர் கூறும் பல்வகைக் கருத்துகள் ஆய்வுக்குட்பட்டாலும் அவை சிந்தித்தலுக்குரியதாகவும் சிறப்புக்குரியதாகவும் உள்ளன.
ஒüவை என்றால் மூத்தவள் எனும் பொருளைத் தருகிறது என்றும், மேலும் இவர் பாடிய பனுவல்களாக ஆத்திசூடி, பழமொழி மாலை, மூதுரை, நல்வழி பற்றி நாம் அறிந்திருந்தாலும் கல்வியொழுக்கம், ஆசாரக்கோவை, நன்னூற் கோவை, நான்மணிக்கோவை, அருந்தமிழ்மாலை, தரிசனப்பத்து, ஞானக்குறள், பந்தனந்தாதி எனும் வேறுசில பாடல் பனுவல்களையும் இயற்றியுள்ளார் எனும் அரிதான தகவல்களை இந்நூல் மூலம் பெறச் செய்கிறார் நூலாசிரியர்.
ஆங்கிலேய அறிஞர்கள் டாக்டர் ஜோன் பிஸ்ட், சட்சென் ஆகியோர் ஆத்திசூடியையும், கொன்றை வேந்தனையும் நுண்ணிதின் ஆய்ந்து, பொருளுற்றுப் புரிந்து மகிழ்ந்து பாராட்டி ஆங்கிலத்திலும், டச்சு மொழியிலும் மொழி பெயர்த்தனர் எனும் செய்தியும் வியப்பூட்டுகிறது.
கணபதிதாசர் எனும் புலவர் நெஞ்சறி விளக்கம் யாத்துள்ளார். நூறு விருத்தம் கொண்டு இப்பாடல் விளங்குகிறது. இப்பாடலில் ஒன்றாக நூலாசிரியர் சுட்டுகிறார். நெஞ்செமெல்லாம் நெகிழ்கிறது. அறநெறிச் சாரத்தோடு ஆன்மிக உணர்வும் நமக்குள் மேலிடுவதையும் காணலாம்.
தந்தைதாய் நிசமுமல்லச் சனங்களு நிசமல்ல
மைந்தரு நிசமுமல்ல மனையவ ணிசமுமல்ல
இந்தமெய் நிசமுமல்ல இல்லற நிசமுமல்ல
சுந்தரநாகை நாதர்துணை யடிநிசம்பார் நெஞ்சே
இப்பாடலைப் பாடியவரின் ஊர்ப்பெயர் குறிப்பிடப்படவில்லை.
பனுவலில் நாகை நாதர் எனும் திருப்பெயர் பயின்று வருவதால் நாகையம்பதியில் (நாகப்பட்டினம்) அருளும் காயாரோகணேசுவரர் ஆக இருத்தல் கூடும். புலவரது வாழ்விடமும் அச்சுற்றத்தே அமைந்திருத்தலாகும் என்பது தெளிவு.
கருணை ஐயர் என்பவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் மரபில் வந்தவர். ஆனால், இவரது வரலாறு இதுவரை யாரும் அறிந்திலர். ஆசிரியரோ, இவர் தமிழில் தகைமை கொண்ட புலவர் என்றும், இவர் பாடிய சிதம்பரநாதர் பதிகமும், சிதம்பரநாதர் பஞ்சரத்தினத்துறையும் சான்றாகும் என்கிறார்.
இது போன்று எத்தனையெத்தனை தமிழ்ப் புலவர்களையும், தமிழ்கூறு நல்லுலகத்தில் அவர்தம் வரலாறுகளையும், இலக்கியச் சமூகத்தில் மறந்தவர்களையும் மறைக்கப்பட்டவர்களையும் தேடித்தேடி ஆய்ந்து ஆசிரியர் எடுத்துரைப்பது ஒரு பக்கம் வியப்பாகயிருந்தாலும், அவர் தம் படைப்புகளான பனுவல்களையும் தேடிக் கண்டு அச்சிட்டிருப்பது இதுகாறும் எவரும் செய்யாத அருஞ்செயலாகவே எண்ணலாகிறது.
தேவாரப் பெருமான்களும், தேன்தமிழ் ஆழ்வார்களும் அருளி நிற்கும் ஆன்மிக அருட்டுறைத் தடாகம், தமிழிசைப் பாவலர்களும், தெள்ளுதமிழ்ப் பாணர்களும் வாழும் நூலகம் பாவலர் சரித்திர தீபகம். தீபகத்தின் கருமான் யாழ்ப்பாணக் கல்லூரித் தமிழாசிரியர் தமிழ்த்திரு அ. சதாசிவம் பிள்ளையின் இப்படைப்பினை எவரும் சங்கப் பலகையிலேறிய துங்க நூல்களில் ஒன்றெனக் கொண்டு மடியிடை வைத்துத் தாராட்டி மனசிடை வைத்துப் பாராட்டி மதித்துத் துதிப்பாராக.
பாவலர் சரித்திர தீபகம் கற்று முடிக்கும்போது தமிழ்த்தாய் எல்லா வகையின அணிகலன்களை எவ்வாறு அணிந்தார்; யார்யாரெல்லாம் அணிவித்தார்கள் என்ற 410 பாவலர்களின் தமிழ்த்தொண்டினை, தன்னிலைக் குறிப்பினை நாம் முழுவதும் உணர்ந்திட்ட உள்ளநிறைவு ஏற்படுகிறது. இருப்பினும், நூலாசிரியர் பேராசிரியர் தரும் கீழ்வரும் கூற்றோடு நிறைவு செய்வதுதான் பாவலர் சரித்திர தீபகத்திற்குப் பெருமையாக அமையும் என்பது திண்ணம்.
'இப்பாவலர் சரித்திர தீபத்தை ஏற்றி அந்தகாரக் குப்பாயம் போர்த்து அஞ்ஞாதவாசஞ் செய்த பாவலர் நாமங்களைத் தனித்தனி ஒன்றொன்றாய்த் துருவிப் பொறுக்கி அரிவரிப்படுத்தி, மொத்தம் 410 பாவலர் நாமங்களைத் தந்தோம். தந்துமென்ன? பூரணப்படுத்தினம் என்று புளுகுவமா? பூரணமாக்கல் முடிந்த காரியமா? விளங்காதிருப்பதை விசாரிப்பதுதான் யாரிடம்? பார்ப்பதுதான் எவ்விடம்?
உமது முன்னோருட் புலவராயிருந்தாரது சரித்திர விவரம் தாரும் என்றாற் கரிசனை கொண்டு தந்தார் எத்தனை பேர்? சீவிய சரித்திரம் எழுதும் வழக்கம் எம் ஊர்க்கு இன்னும் பழக்கமாகவில்லை என்றாலும் பிரயாசை கொண்டு அங்குமிங்கும் தேடி அகப்பட்டவற்றைத் தப்பவிடாது சேர்த்து விளக்கி, நெய் பெய்து, திரியிட்டு இத்தீபத்தை ஏற்றினம்' என்ற தமிழ்ப்பேராசான் அ. சதாசிவம் பிள்ளையின் கூற்று நம்மை இந்நூலைத் தேடச் செய்கிறதல்லவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் 90.10 சதவீதம் வாக்குகள் பதிவு

ஜனநாயக கடமையாற்றிய மலைவாழ் மக்கள்

விஜய் தமிழகத்தை ஆளப்போவது நிச்சயம்: கோபி தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்

பேருந்துகளில் பொங்கல், தீபாவளி நேரங்களைக் காட்டிலும் அதிக கூட்டம்: மாவட்டத் தோ்தல் அலுவலா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


