தில்லியில் நல்ல குளிர். மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஆனாலும் ஒருவர் பின் ஒருவராக மறைந்த பிரதமர் மன்மோகன் சிங் இல்லத்துக்கு வந்து அவருக்கு இறுதி மரியாதை செலுத்திய வண்ணம் இருந்தனர். அவர்களில் ஒருவராக நானும்... என்னுடன் மூத்த நிருபர்கள் சுந்தரேஸ்வரன்,
சரோஜ் கண்பத், புகைப்படக் கலைஞர் சீனிவாசன் ஆகிய மூவரும். பழைய நினைவுகள் திரைப்படப் பின்னோட்டம் போல என் மனதில் ஓடி மறைந்தன.
பிரதமராக அவர் மேற்கொண்ட பதினைந்துக்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கான அரசுமுறைப் பயணங்களின்போது என்னையும் அழைத்துச் சென்றிருக்கிறார். இரண்டு நிகழ்வுகளை என்னால் மறக்க முடியாது.
இரண்டாவது முறையாக 2009-இல் அவர் பிரதமரான ஒரு சில மாதங்கள் கழித்து அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். பொன்னாடை ஒன்றை அவருக்குப் போர்த்தி வாழ்த்தியபோது, அவர் என்னிடம் எதிர்பாராத விதமாக ஒரு கேள்வி கேட்டார். ' 'நீங்கள் எந்த இலாகா வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?'' என்றபோது, எனக்கு எதுவும் புரியவில்லை.
அவரே எனது சந்தேகத்தைப் போக்கினார் - 'பொதுவாக உங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதுபோன்ற பொன்னாடையைப் போர்த்திவிட்டு, அமைச்சரவையில் இந்தத் துறை வேண்டும், இந்த இலாகா வேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள்'' என்று அவர் சிரிக்காமல் சொன்னபோது நான் மட்டுமல்ல, சுற்றி இருந்த அனைவரும் சிரித்து விட்டோம்.
இன்னொரு மறக்க முடியாத நிகழ்வு. 2011 செப்டம்பர் மாதம் ஒரு வெளிநாட்டு அரசுமுறைப் பயணம் முடிந்து பிரதமருடன் நாங்கள் இந்தியா திரும்பிக் கொண்டிருந்தோம். அன்று பிரதமர் மன்மோகன் சிங்கின் பிறந்தநாள். விமானத்திலேயே அவரது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடுவது என்று உடன் சென்ற பத்திரிகையாளர்கள் தீர்மானித்தோம்.
நாங்கள் அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துப் பாட, பிரதமர் மன்மோகன் சிங் கேக் வெட்டினார். அதுமட்டுமல்ல, எங்கள் ஒவ்வொருவருக்கும் தானே கேக் வழங்கி மகிழ்ந்தார். இப்படியொரு அனுபவம் கிடைப்பது சாதாரணமானதா?
அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பிறகும் அவ்வப்போது தில்லி செல்லும்போது அவரை மரியாதை நிமித்தம் சந்திக்க நான் தவறவில்லை. டாக்டர் மன்மோகன் சிங் மறைந்திருக்கலாம். ஆனால், மறைந்துவிடக் கூடியதல்ல அந்த மாமனிதர் விட்டுச் சென்றிருக்கும் நினைவுகள்!
நேர்மைக்கும், திறமைக்கும், சமூக அக்கறையுடன் கூடிய செயல் பாடுகளுக்கும் பெயர் போனவர் களில் குறிப்பிடத்தக்கவர் பெ. கண்ணப்பன் ஐ.பி.எஸ். அவர் 'தினமணி'யில் தொடர்ந்து எழுதிய நடுப்பக்கக் கட்டுரைகள் இப்போது புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன.
'சீர்திருத்தவா? சிறுமைப்படுத்தவா?' என்கிற தலைப்பில் அவரது 44 'தினமணி' கட்டுரைகள் தொகுக்கப் பட்டிருக்கின்றன. காவல் துறையும், சமுதாயமும் ஒரே மையப்புள்ளியில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகள் இந்தக் கட்டுரைகளில் அலசப்பட்டிருக்கின்றன.
சிறார் சீர்திருத்தம் எதிர்கொள்ளும் சவால்கள், முதியோர் எதிர்கொள்ளும் குற்ற நிகழ்வுகள், பெண் சிறைவாசிகளின் பிரச்னைகள், தனியார் துப்பறிதலில் உள்ள குறைபாடுகள், தொடரும் ஜாதிய வன்முறைகள், போதைப்பழக்கத்தின் விளைவுகள், காவல் மரணங்கள், என்கவுன்ட்டர்கள், கையூட்டுக் கலாசாரத்தின் தாக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் விவரமாக விவாதிக்கப்படுவதுடன் அதற்கான தீர்வையும் வழங்குகிறது இதிலிருக்கும் கட்டுரைகள்.
' 'குற்றங்கள் தொடர்ந்து நிகழும்போது பொதுமக்களிடையே அச்ச உணர்வும், குற்றங்கள் நடைபெறுவதைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல் துறையினர் மீது வெறுப்புணர்வும் வெளிப்படுகின்றன. ஆனால், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், குற்றப் புலன் விசாரணை ஆகியவற்றில் காவல் துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை'' என்கிற அவரது ஆதங்கம் நியாயமானது.
குற்றத் தடுப்பு, சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு ஆகியவை குறித்த களநிலவரத்தை அறிந்துகொள்ள இந்த நூல் பயனுள்ளதாக இருக்கும். சமூக ஆர்வலர்கள், குற்றவியல் ஆய்வாளர்கள், காவல் துறையினர், மத்திய - மாநிலத் தேர்வாணையங்களின் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்பவர்கள் ஆகியோர் கட்டாயம் படிக்க வேண்டிய, தெரிந்து கொள்ள வேண்டிய பல தகவல்களை இந்தக் கட்டுரைத் தொகுப்பு வழங்குகிறது.
மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் 'தினமணி'யின் மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழா முடிந்து நான் கிளம்பிக் கொண்டிருந்தேன்.
கவிஞர் ஜெயபாஸ்கரன் அங்கு வந்திருந்த கவிதாயினி பா.மகாலட்சுமியை அறிமுகப்படுத்தினார். அவர் தனது மூன்றாவது கவிதைத் தொகுதியான 'இருட்டிலிருந்து முனகும் வெளிச்சம்' நூலை எனக்குத் தந்தார். அணிந்துரை வழங்கி இருப்பவர் கவிஞர் பிருந்தா சாரதி.
'ஒரு மூன்றாம் பிறையின் பேரழகைப்போல வந்திருக்கிறது எனது மூன்றாம் கவிதைத் தொகுப்பு. ஒரு பிரசவத்தையொத்தது ஒரு நூலைத் தயார் செய்வது; எவ்வளவு பேரிடர்களுக்கு மத்தியிலும் ஒரு பூ பூப்பது போலக் கவிதை அழகாக்கி விடுகிறது நம்மை; அல்லது கவிதைகள் தங்களை அழகாக்கிக் கொள்கின்றன'' என்கிற கவிதாயினி பா. மகாலட்சுமியின் என்னுரை வரிகளை நான் ரசித்தேன்.
அந்தத் தொகுதியில் இடம் பெற்ற கடைசிக் கவிதை 'மரக்கால் அளவுச் சொற்கள்'. அதன் கடைசி சில வரிகள் இவை- என் கவிதைகள் என்பது
வேறொன்றுமில்லை
மரக்கால் அளவு
பத்திரமாய் வைத்துவிட்டுப்போன
என் முன்னோர்களின்
விதைச் சொற்கள்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்த வாரம் கலாரசிகன் - 12-04-2026

இந்த வாரம் கலாரசிகன் - 29-03-2026
அசோகன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 51

இந்த வாரம் கலாரசிகன் - 08-03-2026
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


