இந்த வாரம் கலாரசிகன் - 08-12-2024
காலை 8.30 மணிக்கு எட்டயபுரம் மகாகவி பாரதியார் இல்லத்தில் டிசம்பர் 11-ஆம் தேதி கூடும் அந்த நாளை எதிர்நோக்கி, தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பாரதி அன்பர்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.


காலை 8.30 மணிக்கு எட்டயபுரம் மகாகவி பாரதியார் இல்லத்தில் டிசம்பர் 11-ஆம் தேதி கூடும் அந்த நாளை எதிர்நோக்கி, தமிழகத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பாரதி அன்பர்களைப் போலவே நானும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். தமிழகம் செய்த தவப்பயனால் நமக்குக் கிடைத்த ஒப்பாரும் மிக்காரும் இல்லா ஆளுமையான தேசியக்கவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த தினத்தை, அவர் பிறந்து வளர்ந்த மண்ணுக்குச் சென்று கொண்டாடுவது என்பது எல்லோருக்கும் வாய்த்துவிடாது.
பாரதியார் பிறந்த இல்லத்தில் தங்களது கவிதைத் தொகுப்பை வெளியிடக் காத்திருப்போர்; மகாகவிக்கு மலர்மாலை சூட்டி மரியாதை செலுத்தத் தொலை தூரத்திலிருந்து வருவோர்; சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிக்கூடங்களிலிருந்து மாணவச் செல்வங்களை அழைத்து வரும் ஆசிரியப் பெருமக்கள்; தங்கள் குழந்தைகளுடன் மகாகவிக்கு மரியாதை செலுத்த வரும் பெற்றோர்கள் - இப்படி ஆண்டுதோறும் அங்கே கூடும் பாரதி அன்பர்களைச் சந்திப்பதும், அளவளாவி மகிழ்வதும், பாரதி தரிசனம் கிடைத்த பரவசத்தை ஏற்படுத்தும் சுகானுபவம்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், அகில இந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், திருவையாறு பாரதி இயக்கம், நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கம், உதயம் ராமின் பாரதி உலா குழுவினர் உள்ளிட்ட அமைப்புகள் இந்த ஆண்டும் பாரதியின் பிறந்தநாளைக் கொண்டாட எட்டயபுரத்தில் கூடுவார்கள். நூற்றுக்கணக்கான பாரதி அன்பர்களைக் காணும் பெரும்பேறு கிடைக்கும் என்பதைவிடப் பெரிய பிறவிப் பயன் என்னவாக இருந்துவிட முடியும்?
எட்டயபுரம் மண் ஒரு புண்ணிய பூமி. மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், "சீறாப் புராணம்' எழுதிய உமறுப் புலவர் ஆகியோர் பிறந்த மண்ணல்லவா அது.... கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் தனது இறுதிக் காலத்தைக் கழித்த இடமும் எட்டயபுரம்தான். இப்போது சொல்லுங்கள், அது ஒரு புண்ணிய பூமிதானே!
எப்போதும் நான் வெளிப்படுத்தும் எனது ஆதங்கத்தை இந்த ஆண்டும் வெளிப்படுத்த விழைகிறேன். எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தைச் சுற்றி, பூக்கள் பூத்துக் குலுங்கும் ரம்மியமான பூங்கா அமைய வேண்டும்; பாரதியியல் ஆய்வுகளுக்காக ஒரு பிரம்மாண்டமான நூலகம் வேண்டும்; பாரதியார் குறித்த கண்காட்சிக் கூடம் வேண்டும்; நெல்லை, தூத்துக்குடி, கோவில்பட்டியில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் நிலைக்கு எட்டயபுரம் ஓர் இலக்கியச் சுற்றுலாத்தலமாக உயர வேண்டும்.
மகாகவி பாரதியார் கனவு கண்டதுபோல, இவையெல்லாம் நான் காணும் கனவுகள். கனவு மெய்ப்பட வேண்டும்!
------------------------------------------------------------------------------------------------------------
காலையில் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் மரியாதை செலுத்திய கையோடு, மாலையில் அவர் ஆசிரியராகப் பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் "தினமணி' நாளிதழ் ஆண்டுதோறும் வழங்கும் "மகாகவி பாரதியார் விருது' வழங்கும் நிகழ்வு.
மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரையில் நடைபெற இருக்கும் நிகழ்வில் மகாகவி பாரதியார் விருது வழங்கி கௌரவிக்க இருப்பவர் உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன். விருது பெறுபவர் 99 வயது இளைஞர் திரு.லட்சுமிகாந்தன் பாரதி.
ஓர் இளைஞருக்கு இருக்கும் சுறுசுறுப்புடன் காந்தியப் பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் விடுதலை வேள்வித் தியாகியான அவரைவிட, மகாகவி பாரதியார் விருதுக்குப் பொருத்தமான இன்னொருவர் இருந்துவிட முடியாது.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பள்ளித் தோழரும், அவருடன் எட்டயபுரம் சமஸ்தானத்தால் "பாரதி' என்கிற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவருமான "நாவலர்' சோமசுந்தர பாரதியாரின் மகள் வழிப் பேரன் திரு.லட்சுமிகாந்தன் பாரதி.
அவரது தாய், தந்தை இருவருமே காந்திஜியின் அறைகூவலை ஏற்று விடுதலைப் போராட்டத்தில் குதித்த தியாகிகள்; மூதறிஞர் ராஜாஜியின் அணுக்கத் தொண்டர்கள்.
ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக தந்தை வழக்குரைஞர் கிருஷ்ணசாமி பாரதியும், தாயார் லட்சுமி பாரதியும் கைது செய்யப்பட்டபோது, மாணவரான மகன் லட்சுமிகாந்தன் பாரதி, எந்த மதுரையில் கைவிலங்குடன், தெருத்தெருவாக அழைத்துச் செல்லப்பட்டு, அன்றைய ஒருங்கிணைந்த மதுரை - ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அடைத்து வைக்கப்பட்டாரோ, அதே அலுவலகத்தில் சுதந்திர இந்தியாவில் மாவட்ட ஆட்சியரான பெருமை, அவருக்கு உண்டு.
நூற்றுக்கணக்கான மாணவர்களைத் திரட்டி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டது; அரசியல் கூட்டங்களை நடத்தியது; மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தேசியக் கொடி ஏற்றியது; அலிப்பூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது உள்ளிட்ட சுதந்திரத்துக்கு முந்தைய வரலாறும், மாவட்ட ஆட்சியராகப் பல மாவட்டங்களில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டது; முதல்வரின் தனிச் செயலர்; திட்டக்குழு உறுப்பினர்; சித்த மருத்துவ ஆணையர் உள்ளிட்ட பல பதவிகளுக்குப் பெருமை சேர்த்தது என்று சுதந்திரத்துக்கு பிந்தைய வரலாறும் உடையவர் லட்சுமிகாந்தன் பாரதி.
எட்டயபுரம் வருபவர்களும், அங்கே வர இயலாதவர்களும் டிசம்பர் 11, புதன்கிழமை மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் மதியம் 3 மணி முதல் 4.30 மணி வரை நடக்கும் "தினமணி' மகாகவி பாரதியார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள வேண்டும் என்று அன்புடனும், உங்களைச் சந்திக்கும் ஆவலுடனும் அழைக்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------------------
தில்லி தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலாளராக இருந்த சத்யா அசோகன் என்று பரவலாக அறியப்படும் சத்ய சாரதாமணி, மத்திய வர்த்தக அமைச்சகத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். தென்கிழக்காசிய தமிழ் நேயர்களுக்கான வானொலி சேவை அறிவிப்பாளர். எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கவிஞர்.
கவிதாயினி சத்யா அசோகன் எழுதிய கவிதைகளின் தொகுப்பு "கடவுளும் கடம்பரவாழ்க்கை சாலையும்'. அதிலிருக்கிறது இந்தக் கவிதை வரிகள்
வாழ்க்கை என்பது
வேடந்தாங்கல்
வருவது
போவதற்கே...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...