டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கைந்நிலை கீழ்க்கணக்கு நூலே!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுப்பொறி அறிமுகத்தால் காலம் காலமாக ஓலைச்சுவடியில் இருந்து வந்த தமிழ் இலக்கண இலக்கியங்கள் அச்சில் ஏறத் தொடங்கின.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:25 am

தினமணி


பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அச்சுப்பொறி அறிமுகத்தால் காலம் காலமாக ஓலைச்சுவடியில் இருந்து வந்த தமிழ் இலக்கண இலக்கியங்கள் அச்சில் ஏறத் தொடங்கின. அந்த வகையில் சி.வை. தாமோதரம் பிள்ளை 1887-ஆம் ஆண்டு கலித்தொகையை முதன் முதலில் அச்சில் கொண்டு வந்தார். அவர் சிறந்த பதிப்பாசிரியராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியாளராகவும் விளங்கினார் என்பதற்கு அந்நூலுக்கு எழுதிய பதிப்புரையைக் கொண்டே சுட்டலாம். 

அப்பதிப்புரையின் ஓரிடத்தில் பதினெண் கீழ்க்கணக்குக்குரிய பழைய வெண்பாவை, 
நாலடி நான்மணி நானாற்ப 
                                                      தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி - மாமூல
மின்னிலைசொல் காஞ்சியுட 
                                                    னேலாதி யென்பவே

கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு    என்று சுட்டி, அவ்வெண்பாவிலுள்ள கீழ்க்கணக்குக்குரிய நூல்கள் இன்னின்னவை என விளக்க முற்படுகிறார். 

குறிப்பாக அவ்வெண்பாவிலுள்ள ஐந்திணை என்பது ஐம்பது செய்யுள்கள் இயற்றிய மாறன் பொறையனாரின் ஒரு நூலாக இருக்கக்கூடும் என்றும் இன்னிலைசொல் என்பது இன்னிலை, இன்சொல் ஆகிய இரண்டு நூல்களைக் குறிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

இவ்வாறு கலித்தொகைப் பதிப்பில் கூறிய பின்னர் அவருக்கு த. கனகசுந்தரம்பிள்ளை அக்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்துச் சில கருத்துகளை எழுதித் தெரிவித்தார். அவர் தெரிவித்தவற்றில் தாம் சிதிலமடைந்த உரையுடன் கூடிய கீழ்க்கணக்கு நூலில் கைந்நிலை என்றொரு நூல் கண்டதையும் குறிப்பிட்டிருந்தார். 

இதனைத் தெரிந்து கொண்ட சி.வை. தாமோதரம் பிள்ளை 1889-ஆம் ஆண்டு இலக்கண விளக்கத்தைப் பதிப்பிக்கும்பொழுது அதன் பதிப்புரையில் அவர் ஏற்கெனவே கூறிய கருத்தை மறுக்கும் விதமாக ஐந்திணை என்பது நான்கு நூல்களை மட்டுமே குறிக்கும் என்றும் இன்னிலைசொல் என்பது எந்த நூலையும் குறிக்கவில்லை என்பதோடு கைந்நிலை என்பது தான் கீழ்க்கணக்கில் தனியொரு நூலைக் குறிக்கும் என்றும் கூறினார். இதனால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்னவை என்று தெளிவு பெறாமல் இருந்துள்ளனர் என்பது நன்கு புலனாகும். 

சி.வை. தாமோதரம் பிள்ளையைத் தொடர்ந்து கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து ஆராய்ச்சி செய்தார் தி. செல்வகேசவராய முதலியார். அவர் 1916-ஆம் ஆண்டு ஆசாரக்கோவையை மூன்றாவது முறையாக வெளியிட்டார். அந்நூலின் பதினெண் கீழ்க்கணக்கு விளக்கம் என்ற பகுதியில் கைந்நிலை என்னும் நூலைத் தவிர்த்து இன்னிலையைக் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு கைந்நிலை, இன்னிலை ஆகிய இரு நூல்களும் கீழ்க்கணக்கில் ஒன்றென அறிஞர்கள் கூறி வந்த நிலையில் எம். சேஷகிரி சாஸ்திரி என்பவர் ஐந்திணை என்பது ஐந்து நூலைக் குறிக்கும் என்பதோடு ஐந்தாவது நூலாக வழங்குவது திணைமாலை ஐம்பது என்றும் தாம் எழுதிய தமிழ்க்கவி சரிதம் (1910, பக்.10) என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஏற்கெனவே கூறிவந்த நூல்களோடு இந்நூலும் மூன்றாகச் சேர்ந்து இவற்றில் எந்த நூல் கீழ்க்கணக்குரியது என்ற கேள்விக்கு வித்திடுகிறது. 

இதனைப் போலக் கீழ்க்கணக்குக் குறித்துப் பலரும் ஆராய்ச்சி செய்த காலத்தில் அந்நூலின் சுவடிகளைத் தேடுதலிலும் சிலர் முனைந்தனர். அந்த வகையில் உ.வே. சாமிநாதையர் சுவடி தேடி மந்தைவெளியிலுள்ள அண்ணாசாமி உபாத்தியாயர் வீட்டிற்கு ஒருமுறை சென்றார். அங்குக் கீழ்க்கணக்குரிய முழுவதுமான சிதிலமடைந்த சுவடி ஒன்று அவருக்குக் கிடைத்தது. அந்தச் சுவடியில் கைந்நிலையும் இருந்தது என்பதைத் தாம் எழுதிய என் சரித்திரம் (1950, பக்.907) நூலில் குறிப்பிட்டுள்ளார்.  

இக்கைந்நிலைச் சுவடி கிடைத்ததைத் தொடர்ந்து அவர் 1903-ஆம் ஆண்டு ஐங்குறுநூறு என்னும் நூலை முதல் பதிப்பாகக் கொண்டு வந்தார். அந்நூலின் முகவுரையில் இலக்கணம், இலக்கியம் ஆகிய நூல்களில்  இடம்பெற்ற திணை வைப்பு முறையைக் கூறுமிடத்துக் கைந்நிலைக்குரிய திணை வைப்பு முறையாகக் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகியவை இடம்பெறுவதைக் குறிப்பிட்டுள்ளார். இதனால் கீழ்க்கணக்கு வெண்பாவில் இடம்பெற்றுள்ள கைந்நிலை என்பது தனி நூலைக் குறிக்கும் என்பதோடு அந்நூல் அகப்பொருளைச் சார்ந்தது என்பதையும் கைந்நிலை என்ற சுவடி கிடைத்த நிலையில் மற்றொரு புறத்தில் த.மு. சொர்ணம் பிள்ளை இன்னிலை என்னும் நூலைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் தேடியதன் பயனாக இன்னிலை என்ற நூலும் அவருக்குக் கிடைத்தது. அந்நூலை அவர் வ.உ. சிதம்பரம் பிள்ளையிடம் கொண்டு வந்து கொடுத்தார். அவர் அந்நூலுக்கு முகவுரையும் விருத்தியுரையும்  எழுதியதுடன் அதனை 1917-ஆம் ஆண்டு வெளியிட்டனர். 

இன்னிலைப் பதிப்பு வெளிவந்தவுடன் அதற்கு முன்னர்க் கைந்நிலை கீழ்க்கணக்கில் ஒன்றெனக் கூறி வந்தவர்கள் கூட தன் கருத்தை மாற்றிக் கொண்டனர்.  சிலர் இன்னிலைப் பதிப்பு வெளிவந்திருந்தாலும் அந்நூலைக் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக ஏற்றுக் கொள்ளத் தயங்கினர். அந்த வகையில் இ.வை. அனந்தராமையர் ஓலைச்சுவடியில் இருந்து வந்த கைந்நிலையை 1931-ஆம் ஆண்டு ஐந்திணை எழுபது என்னும் நூலோடு இணைத்து முதன்முதலில் பதிப்பித்தார். அவர் இந்த நூலின் முகவுரையில் கீழ்க்கணக்கினுடைய ஒரு நூலாகக் கைந்நிலையை ஏற்றுக் கொள்வதோடு இக்கைந்நிலையைப் பிறர் ஏற்றுக் கொள்வதில் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். 

இன்னிலை, கைந்நிலை ஆகிய இரண்டு நூல்களும் கீழ்க்கணக்குப் பதிப்புகளாக வெளிவந்தவுடன் அவற்றில் எந்த நூல் உண்மையில் கீழ்க் கணக்கைச் சார்ந்தது என்பதில் ஐயம் எழுந்தது. 

இன்னிலை என்னும் நூலுக்குப் பழைய உரையாசிரியர்கள் மேற்கோள்கள் காட்டவில்லை. அதனால் அந்நூல் கீழ்க்கணக்கைச் சார்ந்ததன்று என்ற ஆராய்ச்சி முடிபினை பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, மயிலை. சீனி. வேங்கடசாமி போன்றோர் கூறியுள்ளனர். ஆனால் அதற்கு மாறாகக் கைந்நிலை என்னும் நூலின் செய்யுள்களைத் தொல்காப்பியத்திற்கு உரையெழுதிய இளம்பூரணர் களவியலில் 21, 22, கற்பியலில் 9, செய்யுளியலில் 114 ஆகிய நூற்பாக்களிலும் அதே நூலுக்கு உரையெழுதிய நச்சினார்க்கினியர் களவியலில் 21, கற்பியலில் 9 ஆகிய நூற்பாக்களிலும் நம்பி அகப்பொருளுக்கு உரையெழுதிய உரைக்காரர் வரைவியலில் 6ஆம் நூற்பாவுக்கும் மேற்கோள்களாக எடுத்துக் காட்டியுள்ளனர். 

எனவே, பழைய உரையாசிரியர்களால் மேற்கோள் காட்டப்பட்ட கைந்நிலையே பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றென உறுதியாக ஏற்கலாம் என்பது தெளிவாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.