கடந்த திங்கள்கிழமையே தலைநகர் தில்லி வந்துவிட்டேன்; இன்னும் இங்கேதான் இருக்கிறேன். இடையில் ஒருநாள் சண்டீகர் சென்றிருந்தேன்.
தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் இப்போது பஞ்சாப் மாநில ஆளுநர். சண்டீகர் ஒன்றிய பிரதேசத்தின் நிர்வாகியும்கூட. தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது அவருக்கு தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் ஏற்பட்ட ஈர்ப்பு எத்தகையது என்பதை அவரது சமீபத்திய செயல்பாடு தெரிவிக்கிறது.
சண்டீகர் தமிழ்ச் சங்கத்தின் வளர்ச்சிக்காக, அந்த ஒன்றிய பிரதேசத்தின் நிர்வாகி என்கிற முறையில், ரூ. 50 லட்சம் வழங்கியிருக்கிறார். அதைக் கேள்விப்பட்ட பிறகும் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்காமல் இருக்க என் மனம் ஒப்பவில்லை.
தமிழ்நாட்டிற்கு வெளியே செயல்படும் தமிழ்ச் சங்கங்களில் மிக முக்கியமானது சண்டீகர் தமிழ்ச் சங்கம். பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கெல்லாம் தாங்கள் வெளி மாநிலத்தில் வாழ்கிறோம் என்கிற எண்ணமே ஏற்படாவண்ணம் அவர்களை ஒரே குடும்பமாக இணைத்து வைத்திருப்பதற்காக அதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
எட்டயபுரம் பாரதி விழா குறித்த அவரது இனிமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டபோது, மகிழ்ச்சியாக இருந்தது.
------------------------------------------------------------------
அடுத்த மாதம் பணி ஓய்வு பெற இருக்கிறார் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் வெ. ராமசுப்பிரமணியன். கடந்த வியாழக்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும், தனது நண்பர்களான ஏனைய உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் தனது அரசு பங்களாவில் அவர் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நான் தில்லியில் இருக்கிறேன் என்பதால் அதில் கலந்துகொள்ள எனக்கும் அழைப்பு விடுத்தார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளிலிருந்து அத்தனை நீதிபதிகளும் வந்திருந்தனர். முன்னாள் தலைமை நீதிபதி சிக்ரியைகூட அங்கே சந்தித்தேன். உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞர்கள், இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் (அட்டர்னி ஜெனரல்) வெங்கட்ரமணி உள்ளிட்ட நீதித்துறையுடன் தொடர்புடைய அத்தனை பேரையும் அங்கே பார்க்க முடிந்தது. வராதவர்கள் யார் என்பதை விரல்விட்டு எண்ணிவிடலாம் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.
தமிழகத்திலிருந்தும் ஆந்திரத்திலிருந்தும் நீதியரசர் ராமசுப்பிரமணியனுடன் பணியாற்றிய பலரும் வந்திருந்தனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெüல், எம்.எம். சுந்தரேஷ், உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், மகாதேவன், ஜி.ஆர். சுவாமிநாதன் உள்ளிட்ட பலரை சந்திக்கவும் அளவளாவவும் அந்த விருந்து எனக்கு வாய்ப்பளித்தது.
என்னை நெகிழவைத்தது நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள் வந்திருந்தனர் என்பதல்ல. நீதியரசர் வெ. ராமசுப்பிரமணியனின் உதவியாளர்களும், வழக்குரைஞர் காலத்தில் அவரது அலுவலகத்தில் பணியாற்றியவர்களும் அவரவர் குடும்பத்தினருடன் அந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர் என்பதுதான் சிறப்பு. அவரது பெருந்தன்மையை என்னவென்பது...
நீதியரசர் வெ. ராமசுப்பிரமணியன் உச்சநீதிமன்ற அளவில் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறார் என்பதை அந்த விருந்துக்குச் சென்ற என்னால் உணர முடிந்தது. இந்திய நீதித்துறை வரலாற்றில் தனது முத்திரையை அழுத்தமாகப் பதிவு செய்த ஒரு நீதிபதி பணி ஓய்வு பெறுகிறார் என்று அந்த விருந்துக்குப் பிறகு எனது டைரியில் நான் அவர் குறித்து எழுதி வைத்தேன்.
------------------------------------------------------------------
குடும்பத்துடன் மதுரை சென்றிருந்தபோது அமெரிக்கன் கல்லூரியில் எனது பேராசிரியரான சாலமன் பாப்பையாவை சந்திக்க அவரது இல்லத்துக்குச் சென்றிருந்தேன். என்னுடன் எங்களது மதுரைப் பதிப்பின் தலைமை நிருபர் எம். சங்கர், தலைமை உதவி ஆசிரியர் என். செந்தில்குமார், திருப்பரங்குன்றம் நிருபர் எம். மது உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர்.
தனது புறநானூற்று உரை நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்த எனது பேராசிரியர், இப்போது வெளியிட்டிருக்கும் அகநானூறு உரைத் தொகுப்பை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். குறிஞ்சித்திணை, பாலைத்திணை, முல்லை, மருதம், நெய்தல் திணைகள் என்று மூன்று தொகுதிகளாக சாலமன் பாப்பையாவின் அகநானூற்று உரை தொகுக்கப்பட்டிருக்கிறது. புறநானூறும் அகநானூறும் முடிந்த கையோடு இப்போது பதினெண்கீழ்க்கணக்குக்கு உரை எழுதும் பணியில் இறங்கியிருக்கிறார் பேராசிரியர்.
"இன்று அவரது பட்டிமன்றங்களையே சிறப்பித்துப் பேசும் பலருக்கு, அவரது எழுத்துவன்மை பற்றி எதுவும் தெரிவதில்லை. ஆனால், அவரின் கட்டுரைகளை, நூல்களை படித்தவர்களுக்கு, பழத்தின் இனிப்பைப்போல எழுத்திலும் இனிமை சேர்த்தவர் என்ற உண்மை விளங்கும்' என்கிற பேராசிரியர் ம.பெ. சீனிவாசனின் அணிந்துரைக் கூற்று உண்மையிலும் உண்மை. பேராசிரியராக மாணாக்கர்களுக்கு அவர் தமிழ் இலக்கியம் கற்றுக்கொடுக்கும் சிறப்பையும் அத்துடன் சேர்க்க வேண்டும் என்பது எனது அனுபவக் கூற்று.
"நமக்குக் கிடைத்திருக்கும் 2,381 சங்கப் பாடல்களில் 1,862 பாடல்கள் அகப்பொருள் பற்றியன. ஏனையவை புறப்பொருள் பற்றியன. சங்க இலக்கியங்களில் ஏறக்குறைய 80% பாடல்கள் அகம் பற்றியும், 20% பாடல்கள் புறம் பற்றியும் அமைந்துள்ளன' என்று தனது அணிந்துரையைத் தொடங்கும் முனைவர் அரங்க. ராமலிங்கம், பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் அகநானூற்று உரை குறித்துப் பதிவு செய்திருப்பதை நான் மிகவும் ரசித்தேன்.
"அகநூனூற்றுப் பாடல்களுக்கு உரையாசிரியரால் வைக்கப்பட்டிருக்கும் தலைப்புகள் ஹைக்கூ கவிதை போல உள்ளன. பாடலைப் பலமுறை படித்து அதன் உள்ளடக்கத்தை ஒற்றை வரி அல்லது இரண்டு வரியில் தலைப்பாகத் தந்திருப்பது உரையாசிரியரின் நுட்பத்திறனுக்குச் சான்று' என்பதுதான் அவரது பதிவு.
மூன்று தொகுதிகளையும் நான் முழுமையாகப் படித்து முடிக்கும்போது, வாழ்க்கையில் இன்னொரு முறை பேராசிரியர் சாலமன் பாப்பையாவிடம் தமிழ் கற்ற நிறைவு எனக்கு ஏற்படக்கூடும்.
------------------------------------------------------------------
யாழினி முனுசாமியின் "உதிரும் இலை' என்கிற தலைப்புடனான கவிதை இது
உதிரும் இலைகள் குறித்து
எந்தக் கவலையும் இல்லை
துளிர்த்துக் கொண்டே இருக்கின்றன
புதிய பதிய தளிர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


