காசிக்கொடை செப்பேடுகள்
தமிழ்நாட்டு மன்னர்கள், சிற்றரசர்கள், மக்கள் கோயில்கட்டுக் கொடை பல தந்து அவற்றைக் கல்வெட்டுகளாகவும் செப்பேடுகளாகவும் எழுதி வைத்தனர்.


தமிழ்நாட்டு மன்னர்கள், சிற்றரசர்கள், மக்கள் கோயில்கட்டுக் கொடை பல தந்து அவற்றைக் கல்வெட்டுகளாகவும் செப்பேடுகளாகவும் எழுதி வைத்தனர். அவ்வகையில் ஹிந்துக்களின் தலைசிறந்த முக்தி தலமான காசியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அன்னபூரணி, விசாலாட்சி சமேத விசுவநாதர் கோயிலுக்கும் கொடை தந்து அவற்றைச் செப்பேடுகளாகவும் பொறித்து வைத்தனர். இதுவரை 12 காசிக்கொடை செப்பேடுகள் கிடைத்துள்ளன.
14.1.1726 அன்று ஒரு மகர சங்கராந்தி புண்ணிய காலத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மை நித்திய பூசை, கார்த்திகை, விசாகம் பூசை, அன்னதானம், வில்வத் தோட்டம் ஆகியவற்றுக்கு மதுரை நாயக்க மன்னர் விஜயரங்க சொக்கநாத நாயக்கர் "சின்னம்பட்டி' என்ற ஊரைக் கொடுத்தார்.
16.9.1728 காசியில் அன்னதானம் மயேசுவர பூசை நந்தவனம் ஆகியவற்றுக்கு அறந்தாங்கி அருணாசல வணங்காமுடித் தொண்டைமானார் "கீழ்ப்பாப்பானூர்' என்ற ஊர் வருவாய் முழுவதையும் அளித்து செப்பேடு தந்தார்.
22.7.1732 புதுக்கோட்டை விசைய ரகுநாதத் தொண்டைமானார் காசி விசுவநாதர், விசாலாட்சி அபிடேகம் நைவேத்தியம் அன்னதானத்துக்கு "துருவாசபுரம்' என்ற ஊரைக் கொடையைக் கொடுத்தார்.
21.2.1763 புதுக்கோட்டை விசைய ரகுநாதத் தொண்டைமானார் காசியில் அன்னதானக் கட்டளைக்கு "வாழைக்குறிச்சி' என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்தார்.
13.4.1763 சிவகங்கை அரசர் அரசு நிலையிட்ட முத்து வடுகநாதப் பெரிய உடையாத் தேவர், காசியில் மடம் கட்டவும், பிராமண போஜனம், அன்னதானம் ஆகியவற்றுக்கும் "வள்ளைக்குளம்', "ஒச்சமதட்டு' என்ற இரண்டு ஊர்களைக் கொடையாகக் கொடுத்தார்.
22.6.1782 சிவகங்கை அரசர் அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர், காசியில் பிராமண போஜனம் அன்னதானம் செய்ய "ஆனையார்கோட்டை' என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்தார்.
25.7.1790 புதுக்கோட்டை விசைய ரகுநாத ராயத் தொண்டைமானார் காசியில் அன்னதானக் கட்டளைக்கு "ஈரவயல்' என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்தார்.
2.5.1796 மேற்கண்ட புதுக்கோட்டை அரசரே காசியில் பல தருமங்களுக்கு "கூடலூர்' என்ற ஊரை சடையப்பத் தம்புரான் வசம் அளித்தார்.
இதேநாள் சிவகங்கை அரசர் அரசு நிலையிட்ட விசைய ரகுநாதப் பெரிய உடையாத் தேவர் விசுவநாதர் - விசாலாட்சி அம்மைக்கு அபிடேகம் நைவேத்தியம் செய்யவும் சத்திரம் கட்டவும் 'புதுக்குளம்', "மாங்குடி' ஆகிய இரண்டு ஊர்களைக் கொடையாகக் கொடுத்தார்.
1.12.1800 புதுக்கோட்டை விசைய ரகுநாத ராய பாதர் தொண்டைமானார் அடப்பன் கூத்தப்பன் பெயரில் சில தருமங்கள் செய்வதற்காக "கூத்தனூர்' வருவாயை அளித்தார். அவை, காசி கங்கா தீர்த்தக் கரையில் சோமேசுவரக் கட்டத்தில் தருமசாலை கட்ட 1,250 ரூபாய்; அபிடேகம், நைவேத்தியம், வில்வார்ச்சனை, திருவிளக்குக் கட்டளைக்கு நாள்தோறும் 1 1/4 பணம்; ஆறு பேருக்கு தினமும் அன்னமிட மூலப்பொருள் 625 ரூபாய்.
1736 தை, பாப்பாநாடு ஜமீன்தார் இராமலிங்க விசையாத் தேவர், காசியில் அன்னதானம் செய்ய "திருமாஞ்சோலை' என்ற ஊரைக் கொடையாக அளித்தார்.
14.12.1765 மைசூர் கிருஷ்ணராச உடையார் ஆட்சியின்போது கோயம்புத்தூர் நிர்வாகி குறிக்கார மாதையன் கீழ் பணிபுரிந்த சங்கரையன் மனைவி லிங்கம்மாள், காசியில் மடம் கட்டினார். மட தர்மத்துக்கு கோயம்புத்தூர் வணிகர்கள் மகமைக் கொடையளித்த செப்பேடு உள்ளது. பின் இந்த மடம் கண்ணப்பசாமி என்பவரால் விரிவுபடுத்தப்பட்டது. இப்போது "கண்ணப்பசாமி மடம்' என்று பெயர் மாறியுள்ளது.
துறையூர் பாளையக்காரர் 21.1.1745 அன்று கிரி தனுஷ்கோடி சாஸ்திரி வசம் ஒரு செப்பேடு அளித்தார். காசி, ராமேசுவரம் இரண்டு தலங்களிலும் அன்னதானம் செய்ய "அபிநவமங்களம்' என்ற ஊரைக் கொடையாகக் கொடுத்த செய்தி அதில் கூறப்பட்டிருந்தது. அந்தச் செப்பேடு கிடைக்கவில்லை. ஒரு கல்வெட்டால் இச்செய்தி உறுதியாகிறது.
"ஊர் கொடை' என்பது குறிப்பிட்ட ஊரின் வருவாய் முழுவதையும் அளிப்பதாகும். கோயம்புத்தூர் செப்பேடு, திருவாவடுதுறை மடத்திலும் பிற செப்பேடுகள் திருப்பனந்தாள் காசி மடத்திலும் உள்ளன.
காசி மடத்து அதிபர் வழியாகவே கொடை கொடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...