எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குன்றுக்கு நன்றி

தலைவனுடன் உடன்போக்கு மேற்கொண்டு அவனையே மணந்து கொண்டாள் தலைவி ஒருத்தி. சில காலம் சென்றபின், பெற்றோரின் சினம் தணிந்த நிலையில் தன்னுடைய பிறந்த வீட்டிற்குக் கணவனுடன் வருகிறாள்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:19 pm

முனைவா் கி. இராம்கணேஷ்

தலைவனுடன் உடன்போக்கு மேற்கொண்டு அவனையே மணந்து கொண்டாள் தலைவி ஒருத்தி. சில காலம் சென்றபின், பெற்றோரின் சினம் தணிந்த நிலையில் தன்னுடைய பிறந்த வீட்டிற்குக் கணவனுடன் வருகிறாள்.

பெற்றோர், தமையன்மார், உற்றார், உறவினர் ஆகியோர் மகளையும், மாப்பிள்ளையையும் அன்புடன் வரவேற்றுப் பேசி மகிழ்கிறார்கள். அந்த நேரத்தில் தலைவியின் உடன்போக்கிற்கு உறுதுணையாக இருந்த தோழியும் அங்கு வருகிறாள். அவள் தலைவியைத் தனியே அழைத்துப் போய், ""நீ தலைவனுடன் உடன்போக்கு சென்றபோது, நின் ஐயன்மார் உங்களைப் பின்தொடர்ந்து  தேடிக்கொண்டு  வந்தார்களே! அப்போது அங்கே என்ன நிகழ்ந்தது? நீங்கள் இருவரும் அவர்களிடமிருந்து எவ்வாறு தப்பிச் சென்றீர்கள்?'' என ஆர்வமாகக் கேட்கிறாள்.

இவ்வாறு கேட்ட தோழிக்குத் தலைவி பதில் கூறுவதாக அமைந்த, புலவர் ஓதலாந்தையாரின் தலைவி கூற்றுப் பாடல் இது.  

"அறம் சாலியரோ! அறம் சாலியரோ!
வறன் உண்டாயினும், அறம் சாலியரோ!
வாள் வனப்பு உற்ற அருவிக்,
கோள்வல் என்ஐயை, மறைத்த குன்றே!' 
 (ஐங்கு.312)

"ஒளியோடு அழகு பொருந்திய அருவிகளைக் கொண்ட குன்று அறத்தால் பொலிக; அறத்தால் நிரம்புக; வறட்சி ஏற்பட்டாலும் அறத்தால் மலையில் மலைவளம் நிரம்புக. அருவியை உடைய அக்குன்று கொல்லுதலில்வல்ல என் தலைவனை மறைத்த குன்று! அது அறத்தால் நிரம்புக'  எனத் தலைவி மலையை வாழ்த்திக் கூறுகிறாள்.

தலைவி மலையை வாழ்த்துவதற்குக் காரணம் இதுதான். தலைவனையும், தலைவியையும் ஐயன்மார் தேடிச் செல்கிறார்கள். அப்போது, தலைவன் அவர்கள் வருவதைக் காண்கிறான். அவன் யாரையும் வெற்றி கொள்ளும் வலிமையுடையவன் எனினும், மைத்துனன்மார்களை எப்படி எதிர்ப்பது? எதிர்த்தால் குடும்பத்தில் பகை ஏற்படுமே... அதனால்,  தலைவியும் வருந்துவாள் எனக் கருதி, அருகிலிருந்த குன்றினுள் மறைந்து கொண்டான். 

அந்தக் குன்று மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், என்ன நடந்திருக்குமோ தெரியாது.  எதுவும் நடைபெறாமல் உதவி செய்த அந்தக் குன்றம் வறட்சிக் காலத்திலும் வளத்தோடு விளங்கட்டும் என வாழ்த்தி, குன்றுக்கு நன்றி தெரிவிக்கிறாள் தலைவி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.