இராமானுஜர் இல்லறந் துறந்து 'முக்கோல் பிடித்த முனி'யான பின்னர், பிரம்மசூத்திரத்திற்கு உரையெழுதுகையில் ஐயமெழுந்த இடங்களிலெல்லாம் திருவாய்மொழிப் பாசுரங்களைக் கொண்டே ஐயமகற்றி அறுதியிட்டதாகக் கூறுகிறது 'ஆசார்ய ஹிருதயம்' (சூ.65) என்னும் நூல். இப்படி அருளிச் செயல்கொண்டு தெளியாத மறைநிலங்களைத் தெளியச் செய்தது போலவே, தமிழுக்கே உரிய அகத்திணை மரபு கொண்டு ஆழ்வார் பாசுரங்களுக்கு அவர் விளக்கம் தந்ததைக் காணலாம்.
''மாறில் போர் அரக்கன் மதிள்நீறு எழச் செற்றுகந்த
ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் என்மின்களே''
என்பது நாயகி நிலையில் நம்மாழ்வார் பாடிய (தி.வா.மொ.6-1-10) பாசுரமாகும். 'தன்னைப் பிரிந்தவர் எவரும் உயிர் தரித்திருக்கமாட்டார்கள் என்று கருதியே எம்பெருமான் மீண்டு வரவில்லை. இந்நிலையில் நான் ஒருத்தி உயிருடன் இருப்பதை அவனுக்கு நினைவூட்டுங்கள்' என்று பராங்குச நாயகி கூறுவதாக இதற்கு ஆளவந்தார் பொருள் கொண்டார்.
இராமானுஜர் இதனைக் கேட்டு, 'இப்பொருள் அழகியதுதான்' என்று பாராட்டிவிட்டு, தமிழ் நூல்கள் கூறும் 'இன்றியமையாமை' என்னும் தொடர்கொண்டு, 'என்னையும் உளள் என்மின்களே' என்பதற்கு மேலும் சால அழகியதாகப் பொருள் விரித்தார். அவ்விரிவுரை வருமாறு:
''உத்தமநாயகனும் நாயகியும் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் ஒருவர் உயிரோடு இருந்தால் மற்றொருவரும் உயிருடனே இருப்பார்கள்; ஒருவர் இறந்து விட்டால் மற்றொருவர் அதை அறியாவிட்டாலும் அவர்களுடைய உயிர் தானாகவே பிரிந்து விடும். இதனைத் தமிழ்ப் புலவர்கள் 'இன்றியமையாமை' (ஒருவர் இன்றி ஒருவர் உயிர் வாழாமை) என்பர். எம்பெருமான் தான் உளனாகையால், நாயகியும் உளள் என்பதை அறிந்தே இருப்பான். அவன் வாலி, இராவணன் முதலிய பகைவர்களை அழித்து, சுக்கிரீவன், வீடணன் முதலான அடியவர்களுக்கு முடிசூட்டிவிட்டுச் 'செய்ய வேண்டிய யாவும் செய்து முடித்து விட்டோம். இனிச் செய்யத்தக்கது ஒன்றுமில்லை' என்று நினைத்திருக்கிறான். (அந்த நினைப்பில் என்னை மறந்திருக்கிறான்) எனவே அவனிடம் சென்று, இன்னும் அவனால் காப்பாற்றப்பட வேண்டியவளாய் நானும் ஒருத்தி இருக்கிறேன் என்பதைச் சொல்லுங்கள் - என்கிறாள் பராங்குசநாயகி.''
இங்ஙனம் அவர் நயம்பட உரைத்ததற்கு 'இறையனார் களவியல்' கூறும், ஒருவரை ஒருவர் இன்றியமையாமை என்பது அவருக்குக் கைகொடுத்திருக்கிறது. அன்றியும், கலித்தொகைப் பாடல் ஒன்றில் தலைவி கூற்றாக வரும் ஒரு தொடரும் உடையவரின் இவ்விளக்கத்திற்கு அரணுக்கு அரண் இட்டது போல் அமைகிறது.
தலைவி சொல்கிறாள்: ''இன்னுயிர் போன்ற என் தலைவனுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படவில்லை; இது, உறுதி. இதற்கு நான் உயிருடனிருப்பதே சான்றாகாதோ?'' என்கிறாள்.
''இன்னுயிர் அன்னாற்கு எனைத்தொன்றும் தீதின்மை
என்னுயிர் காட்டாதோ மற்று?'' (கலித்.143: 20-21)
என்பது பாடலடி. முன்னைத் தமிழ் இலக்கிய இலக்கணங்களில் அவருக்கிருந்த பயிற்சியின் அடையாளம் இது. இனி, அகப்பொருள் மரபிலேயே செய்யுள் செய்யும் திறன்மிக்கவராக இராமானுஜர் விளங்கினார் என்பதற்கும் சான்று உண்டு. குலசேகர ஆழ்வாரின் 'பெருமாள் திருமொழி'க்கு இராமானுஜர் பாடிய தனியனில் (சிறப்புப் பாயிரம்), தான் வளர்க்கும் பச்சைப் பசுங்கிளியைப் பார்த்து தன் இச்சைக்குகந்த நாயகன் குலசேகரனின் பெயரைக் கூறுமாறு 'இராமானுஜநாயகி' கெஞ்சிக் கேட்கிறாள். இத்தனியன் முன்னை அகத்தமிழ் மரபின் தொடர்ச்சியையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது. அதற்கு மூலமாவது தலைவி கூற்றாகவுள்ள ''செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி'' என்னும் அடியினைக்கொண்ட அகநானூற்றுப் (34) பாடலே.
தலைமகளுடன் உடன் போக்கில் செல்லும் தலைமகன், தன் வண்ணச் சீறடி வருந்துமாறு நடந்து வரும் தலைமகளை நோக்கி, 'இதோ நம் ஊருக்கு அணிமையில் வந்து விட்டோம்' என்று தேற்றுகிற அகத்துறை ஒன்று உண்டு. 'தலைமகன் தன்பதி அடைந்தமை சாற்றல்' என்று தஞ்சைவாணன் கோவை இதனைக் குறிப்பிடும். திருக்கோவையாருரையிலும், 'தனது நகரைக் காட்டி அணிமை தோன்றக் கூறுதல்' என்று இத்துறைக் குறிப்பு காணப்படுகிறது. நம்மாழ்வாரின் திருவிருத்தத்தில் 'நானிலம் வாய்க் கொண்டு' என்னும் பாசுரமும் இத்துறையின் பாற்பட்டதே.
கூடல் மாநகரிலிருந்து புறப்பட்டு, சீடர்களுடன் வில்லிபுத்தூர் நோக்கி நடந்து செல்கிறார் இராமானுஜர். சிற்றஞ்சிறுகாலை தொடங்கிக் கால்கடுக்க நடந்த முதலிகள் - மேலும் நடக்க மாட்டாதவர்களாய், 'கோதை பிறந்தவூர் இன்னும் எத்தனைக் கல் தொலைவு இருக்கும்?' என்று வினவ, அவர்களைத் தேற்று முறையில் 'இதோ வந்து விட்டோம்; அருகில்தான் இருக்கிறது; இரண்டு செய்த்தூரம்' என்றாராம். தலைமகன், தலைமகளுக்குக் கூறுவது போன்ற அகப்பொருள் மொழியில் அதனை ஒரு பாடலாகவே வெளியிடுகிறார்.
''முத்தூரும் வெண்ணகை யாய்கடந் தோம்முது பாலைநிலம்;
எத்தூரம் போரும்முன் செல்கின்ற தூரம்? எனிலிரண்டு
செய்த்தூரம் போரும்; திருமல்லி நாட்டு றைந்தவில்லி
புத்தூரும் பச்சைத் துழாய்மணம் நாறிய பொய்கையுமே''
பிள்ளைலோகஞ்சீயர் இயற்றிய 'ராமாநுஜார்ய திவ்ய சரிதை'யில் இடம்பெறும் இப்பாடல், முன்னை அகப்பொருள் மொழியில் அமைந்திருப்பதோடு, கோவை நூல்கள் கூறும் அதே யாப்பில் - விருத்தக் கலித்துறையில் (பின்னாளில் இதற்குத் கட்டளைக் கலித்துறை என்று பெயர்) பாடப்பட்டிருக்கிறது. இவற்றை நோக்க 'உடையவர்' நல்ல 'தமிழ்' அறிவு உடையவர் என்று கொள்ளத் தடையேதுமில்லை.
'தமிழ்' என்னும் போது, 'இந்நூல் தமிழ் நுதலிற்று' எனவும், ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் 'தமிழ்' அறிவித்தற்குப் பாடியது எனவும் உள்ள முன்னைத் தமிழ் வழக்குகளை (குறிஞ்சிப் பாட்டு) நினைக.
-முனைவர் ம.பெ.சீனிவாசன்
நாளை: இராமானுஜரின் ஆயிரமாவது
திருவவதாரப் (1.5.2017) பெருநாள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக 20 இடங்களில் வென்றாலே ஆச்சரியம்தான்: இபிஎஸ் பேச்சு

கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெயிண்ட் விலை அதிகரிப்பு!

வைத்தீஸ்வரன் கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு: திரளானோர் பங்கேற்பு!
நானும் திராவிடன்தான்! சென்னையில் சந்திரபாபு நாயுடு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


