இந்த வாரம் கலாரசிகன்
கும்பகோணத்தில் மாசிலாமணி பதிப்பகம் ரவிசங்கரின் மகன் திருமணம். திருமணம் முடிந்த கையோடு, என் இனிய நண்பரும், நாகை சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான நிஜாமுதீனுடன் தருமபுரம் சென்றிருந்தேன். "தினமணி' நாளிதழ் மீது அளப்
பரிய ஈடுபாடு கொண்டவர் தருமை 26ஆவது குருமகா சந்நிதானம். சைவமும், தமிழும் இரு கண்களாகக் கருதிப் போற்றிப் பாதுகாத்த பெருமை தருமை ஆதீனத்துக்கு உண்டு. சமயச் சிந்தனைக்கு அப்பால் சமுதாயம் பற்றிய அக்கறையும், தமிழ் வளர்ப்பதில் முனைப்பும் காட்டுபவர் குருமகா சந்நிதானம்.
மயிலாடுதுறை அருகில் அமைந்திருக்கும் தருமை ஆதீனத்துக்கு உள்பட்ட அந்த மடாலயத்தைப் பல வகையிலும் ரோமன் கத்தோலிக்கர்களின் வாத்திகன் நகரத்துடன் ஒப்பிடலாம். அந்த அளவுக்குச் செல்வச் செழிப்பு இல்லாததால் ஆதீனம் நாகரிகப் பொலிவுகளுடன் காணப்படவில்லையே தவிர, ஆன்மிகப் பொலிவு சற்றும் குறையாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
ஆதீனங்கள் தமிழ்க் கலாசாரத்தின் அடையாளங்கள். அந்தத் திருமடங்களைப் பாதுகாப்பதன் மூலம் நமது அடையாளங்களைப் பாதுகாக்கிறோம் என்கிற உணர்வு நமக்குச் சற்றும் இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய தவறு? தருமை ஆதீனச் சுவர்களில் காணப்படும் திருவிளையாடற்புராண ஓவியங்கள் உடனடியாகப் படமெடுத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். அங்கே குவிந்து கிடக்கும் ஓலைச்சுவடிகளில் பல இன்னும் படி எடுக்கப்படாமல் இருக்கின்றன. இது பற்றியெல்லாம் அக்கறையேபடாமல், நாம் இன்னும் "தமிழ் வாழ்க' கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறோம்.
குருமகா சந்நிதானம் தனது 85 வயதிலும் சைவத்தையும், தமிழையும் பரப்புவதில் முனைப்புடன் செயல்படுவது பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். ஏறத்தாழ 450 ஆண்டுகளுக்கு முன்பு திருவில்லிபுத்தூரில் அவதரித்த ஸ்ரீலஸ்ரீ குருஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளால் தோற்றுவிக்கப்பட்ட, திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனத்தின் 26-ஆவது குருமகா சந்நிதானமான ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மெத்தப் படித்தவர். சைவ சித்தாந்தத்தின் உட்பொருளை உபதேசிப்பதில் வல்லவர். பன்னிரு திருமுறைகளிலும் கரைகண்டவர். அடியேன் கேட்ட ஓர் ஐயப்பாட்டிற்கு, பதினோராம் திருமுறையை எடுக்கச் சொல்லி திருக்கழுமல மும்மணிக் கோவையிலிருந்து சில வரிகளைப் படிக்கச் சொல்லி விளக்கம் கொடுத்தபோது, அவரது நினைவாற்றலைப் பார்த்து பிரமித்துப் போனேன்.
இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அவருடன் அளவளாவிக் கொண்டிருந்தோம். ஜனநாயகத்தில் ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றி அவர் தெரிவித்த கருத்தை நமது அரசியல்வாதிகளுக்கு யாராவது உபதேசித்தால் நன்றாக இருக்கும். "ஆளும் கட்சியினர் கணவராகவும், எதிர்க்கட்சியினர் மனைவியாகவும், குடிமக்கள் குழந்தைகளாகவும் இருந்து குடும்பம் நடப்பதுபோல நடந்தால் அதுதான் சிறப்பான ஜனநாயக நல்லாட்சி' என்கிற அவரது விளக்கத்தை உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
இரண்டு, மூன்று நாள்கள் அன்றாட அலுவல்களிலிருந்து முற்றிலுமாக விடைபெற்று தருமை ஆதீனத்தில் போய் தங்கிவிட வேண்டும். அங்கிருக்கும் பிரம்மாண்டமான நூலகத்தைப் பார்வையிட வேண்டும். மகாசந்நிதானத்துடன் தங்கி அளவளாவிக்கொண்டு இருப்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். இறைச்சித்தம்போல நடக்கும்!
""அழிந்துபோன ஆலயங்களை மறுபடியும் புதுக்கிக் கட்டிப் பிரதிஷ்டை புரிந்தோர், நெடுங்காலமாக நின்றுபோன அன்ன சத்திரங்களுக்கு மறுபடியும் உயிரளிப்போர், வறண்டு மண்ணேறிப்போய்க் கிடக்கும் தடைகற்களை மறுபடியும் வெட்டி நயம்புரிவோர் இன்னும் பல வகையாலும் மங்கி மறைந்துபோய்க் கிடக்கும் புராதனப் பெரும் காவியங்களைப் பெருமுயற்சி செய்து திரும்ப உலகத்திற்கு அளிக்கும் பெரியோர்கள் புண்ணியத்தில் குறைந்தவர்களல்லர். உ.வே.சாமிநாதையர் மேற்கூறிய தருமம் புரிந்தவர்'' என்பது 1906-ஆம் ஆண்டு "சக்ரவர்த்தினி' இதழில் மகாகவி பாரதியாரின் பதிவு.
""87 ஆண்டுகள் நிறைவு வாழ்வு வாழ்ந்து மறைந்தவர் உ.வே.சா. எழுபதாண்டுகளுக்கு மேல் பழந்தமிழ் நூல்களோடு அல்லும் பகலும் உறவாடி மகிழ்ந்த சாதனையாளர். "சருகரித்த நிலை'யிலேயே தம் வாழ்நாளைப் போக்கி "இறப்பின்றித் துலங்கும்' ஒரு மாபெரும் உழைப்புச் சிகரமாக உயர்ந்தோங்கி நிற்பவர். பொதிகைமலைப் பிறந்த தமிழ்மொழி வாழ்வறியும் காலமெல்லாம் கொண்டாடப்பட வேண்டியவர் அவர்'' என்று தமது முன்னுரையில் உ.வே.சா. பற்றிக் குறிப்பிடும் ப. சரவணன், தமிழுக்குத் தொகுத்து வழங்கி இருக்கும் தனிப்பெரும் கொடை "சாமிநாதம்'.
""உ.வே.சா.வின் "என் சரித்திரம்', "மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்' ஆகியவற்றை வாசித்திருந்தால் போதும் என்பதை முன்னிபந்தனையாகக் கொண்டு ஒருவரை முறையாகத் தமிழ் கற்றவராக ஏற்றுக் கொள்ளலாம்'' என்கிற அணிந்துரை எழுதியிருக்கும் பெருமாள் முருகனின் கூற்று நூற்றுக்கு நூறு சரி. அதுமட்டுமல்ல. "என் சரித்திரம்' முழுமை பெறவில்லை. அதன் பிற்பகுதியை ப. சரவணன் "சாமிநாதம்' என்கிற பெயரில் தொகுத்து வழங்கி இருக்கும் இம் முன்னுரைகள் ஓரளவு நிறைவு செய்யும் ஆக்கம் பெற்றிருக்கின்றன என்கிற கூற்றும் நூற்றுக்கு நூறு சரியே.
"நான் சென்னை மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியர்' என்கிற அறிமுகத்துடன் தனது "அருட்பா மருட்பா' புத்தகத்துடன் முதலில் என்னை வந்து சந்தித்த ப. சரவணன் ஆற்றும் தமிழ்ப் பணி அளப்பரியது. தமிழ் வாழும் காலமெல்லாம் உ.வே.சா.வின் புகழ் வாழுமென்றால், அதுநாள்வரை "சாமிநாதம்' என்கிற தலைப்பில் உ.வே.சா.வின் முன்னுரைகளைத் தொகுத்து வழங்கி இருக்கும் சரவணனின் புகழும் வாழும். "என் சரித்திரம்', "மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள் சரித்திரம்' வரிசையில் "சாமிநாதத்தையும்' சேர்த்துக்கொள்ள வேண்டும்!
கணையாழிக்கு இது பொன் விழா ஆண்டு. 1965-இல் "கணையாழி' இதழைத் தொடங்கிய கி.கஸ்தூரிரங்கன் பின்னாளில் "தினமணி' நாளிதழுக்கு ஆசிரியராக இருந்தவர். அவர் கி.கஸ்தூரிரங்கன் என்ற பெயரிலும், முஸ்தபா என்ற பெயரிலும் "கணையாழி' இதழில் எழுதிய கவிதைகளில் ஒன்று இது.
கடவுளும் கவர்மெண்டும் ஒன்று
அதைத் தூற்றாதே; பழி வந்து சேரும்
உனக்கு. அதற்கு
ஆயிரம் கண்கள்: காதுகள்
ஆனால் குறையென்றால்
பார்க்காது கேட்காது
கை நீளம்; பதினாயிரம்
கேட்கும்; பிடுங்கும்
தவமிருந்தால்
கொடுக்கும்.
கவர்மெண்ட்
பெரும் கடவுள்
அதைப் பழிக்காதே
பழித்தால்
வருவது
இன்னும்
அதிகம்
கவர்மெண்ட்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தோ்தல்: இன்றுடன் பிரசாரம் நிறைவு

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி! - டி.கே.எஸ். இளங்கோவன்
வங்கிக் கடன் மோசடி வழக்கு: ரிலையன்ஸ் முன்னாள் நிா்வாகிகளுக்கு மே 2 வரை நீதிமன்றக் காவல்

நிலுவையில் உள்ள பயங்கரவாதம், போதைப் பொருள் வழக்குகள் எத்தனை? மாநில அரசுகளிடம் விவரம் கோரியது உச்சநீதிமன்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

