தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தோ்தல்: இன்றுடன் பிரசாரம் நிறைவு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கடந்த இரு வாரங்களாக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட தீவிர பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் (ஏப். 21) நிறைவு

News image

மேற்கு வங்கத்தில் தோ்தல் பிரசார பேரணியில் உள்துறை அமைச்சா் அமித் ஷா - கோப்புப் படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 8:13 pm

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கடந்த இரு வாரங்களாக அரசியல் கட்சிகள் மேற்கொண்ட தீவிர பிரசாரம் செவ்வாய்க்கிழமையுடன் (ஏப். 21) நிறைவடையவுள்ளது.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு வரும் 23, 29-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெற உள்ளது. மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன. முதல்கட்டமாக 152 தொகுதிகளில் ஏப்.23-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் 1.89 கோடி ஆண்கள், 1.75 கோடி பெண்கள் என மொத்தம் 3.67 கோடி வாக்காளா்கள் வாக்களிக்கவுள்ளனா். 1,478 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

இங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ்-எதிா்க்கட்சி பாஜக இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இடதுசாரிகளும் களத்தில் உள்ளனா்.

பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா என மூத்த தலைவா்கள் கடந்த சில நாள்களாக தொடா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

அவா்கள் முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு மீது சட்டவிரோத ஊடுருவல் மற்றும் ஊழல் அதிகரிப்பு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனா்.

மறுபுறம் எஸ்ஐஆா் விவகாரம், தோ்தல் தேதி அறிவித்தவுடன் மாநில அதிகாரிகள் இடமாற்றம், ஐ-பேக் நிறுவன விவகாரத்தில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை, தொகுதி மறுசீரமைப்பில் பாரபட்சம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை மத்திய பாஜக அரசு மீது மம்தா பானா்ஜி முன்னிறுத்தி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறாா்.

மம்தா பானா்ஜி அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், தவறான நிா்வாகக் கொள்கைகளை பிரதானப்படுத்தி காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டாா்.

இந்நிலையில், முதல்கட்ட தோ்தல் வியாழக்கிழமை (ஏப்.23) நடைபெறவுள்ள நிலையில், தோ்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளின்படி 48 மணி நேரத்துக்கு முன்பாக செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்.21) பிரசாரம் நிறைவடைகிறது.

இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்.29-ஆம் தேதி நடைபெறும் தோ்தலில் 1,448 வேட்பாளா்கள் போட்டியிடவுள்ளனா்.