"இதயப் பாட்டில்' கருப்பொருள் சிதைவு!
மணிவாசகப் பெருந்தகையின் திருவாசகத்தில் உள்ள "கோயில் திருப்பதிக'த்தின் 7ஆவது பாடலை "இ(ரு)தயப்பாட்டு' என்று கூறுவர் சான்றோர். அதில், அணுத்தரும் தன்மையின் ஐயோனாகிய சிவபெருமானின் (திருவண்ட-45)


மணிவாசகப் பெருந்தகையின் திருவாசகத்தில் உள்ள "கோயில் திருப்பதிக'த்தின் 7ஆவது பாடலை "இ(ரு)தயப்பாட்டு' என்று கூறுவர் சான்றோர். அதில், அணுத்தரும் தன்மையின் ஐயோனாகிய சிவபெருமானின் (திருவண்ட-45) அளப்பரிய கருணையைக் கூறுமிடத்து, மெய்யியலையும், சைவ சித்தாந்தப் பேருண்மைகளையும், அணுக்கொள்கைகளையும் விரித்துரைத்துள்ளார். இந்த இ(ரு)தயப் பாட்டில் பிற்காலத்தில், கருப்பொருள் சிதைவு ஏற்பட்டுள்ளது என்பது பலரும் அறியாதது! தனித்தனியாகப் பொருள் கொள்வதற்காக இப்பாடலின் சொற்கள் பதம் பிரித்துத் தரப்பட்டுள்ளன. சான்றோர் பொருத்தருள்க!
""இன்று எனக்கு அருளி இருள்கடிந்து உள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று
நின்ற நின் தன்மை நினைப்பு அற நினைந்தேன்
நீ அலால் பிறது மற்று இன்மை
சென்று சென்று அணுவாய்த்
}தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்
திருப்பெருந்துறை யுறை சிவனே!
ஒன்று நீ அல்லை; அன்றி ஒன்று இல்லை
யார் உன்னை அறியகிற்பாரே?''
(கோ.தி. 22:7)
இப்பாடலுக்கு, "திருப்பெருந்துறையில் உறைகின்ற சிவபெருமானே! இன்று எனக்கு அருள் புரிந்தாய். மேல் எழுந்து வருகின்ற ஞாயிறு போன்று, எனது உள்ளத்தில் படிந்து இருந்த அறியாமை இருளைப் போக்கினாய். அவ்வாறு நின்ற உனது தன்மையினை நினைக்கவும் மறந்தேன். பின்னரோ நினைப்பற நினைந்தேன்; உன்னைத்தவிர வேறு ஒரு பொருள்தான் இவ்வுலகில் இல்லை. ஒவ்வொரு பொருளிலும் அணுவணுவாய்ச் சென்று சென்று நீ விளங்கினாய்; அப்பொருள்களினின்றும் விலகி, ஒரே பொருளாகவும் ஆனாய்; உன்னையே ஒரு பொருள் என்றும் கொள்ள இயலாது; நீ அன்றி இவ்வுலகில் எப்பொருளும் இல்லை; உன்னை முழுமையாக அறிபவர் உலகில் எவருமில்லை'' என்பதே பலரும் எழுதியுள்ள பொதுவான விளக்கவுரை.
ஆனால், இப்பாடலுக்கு மறைமலையடிகள், பேராசிரியர் ஆ. சிவலிங்கனார் போன்றோர் நுட்பமான பல அறிவியல் கருத்துகளை (அணுக் கொள்கை) முன்வைத்துள்ளார். அவற்றை விவரிக்கின் விரியும். மேலும், இப்பாடலுக்கு அதிநுட்பமாக விளக்கவுரை எழுதியுள்ளவர் திருவாவடுதுறை ஆதீன சைவசித்தாந்த நேர்முகப் பயிற்சி மையத்தின் முதல் இயக்குநரான கு.வைத்தியநாதன். அவ்விளக்கவுரை இங்குக் குறிப்பிடத்தக்கது - வியத்தற்குரியது!
""உயிர்க்கு உயிராய் நிற்கும் இறைவனது அளப்பரும் கருணையை, பாடலின் முதல் மூன்று அடிகளில் பெருந்தகை அருளிச் செய்துள்ள திருவாசகத்தைப் பாடும்போது நெஞ்சு நெக்குருகுகிறது. இத் திருவாசகத்தின் பின் பகுதியையும் (4-8 வரிகள்) நோக்கும் போதுதான், நம்மையே நாம் இழந்து நிற்பதைக் காண்போம்.
இதன் பொருளாவது: சென்று - மாயா கருவிகள் ஆகிய முப்பத்தாறு தத்துவங்களினின்றும் நீங்கிச் சென்று; சென்று - இருவினைத் தொடக்கினின்றும் நீங்கி; தேய்ந்து - "எனது' என்னும் செருக்கு தேய்ந்து; தேய்ந்து - "நான்' என்னும் முனைப்பு தேய்ந்து; அணுவாய் - ஆன்மா, "தான்' என்னும் ஒரு முதல் புலப்படா வகையில் நின்று; ஒன்றாம் - இறைவனுடன் ஒன்றாகக் கலந்து; நீ அலால் பிறிது -சிவபெருமானை அன்றி வேறு ஒரு; மற்று இன்மை - பொருள் இல்லை என்னும் படியாக; ஒன்று நீ அல்லை - எந்தப் பொருளாகவும் நீ இல்லையாதலால், நீ வேறாகி நிற்கிறாய். ஆயினும், அன்றி ஒன்றில்லை - எல்லாப் பொருள்களிலும் நீ கலந்து நிற்பதால் நீ இல்லாமல் எந்த ஒரு பொருளும் நிலைத்திருப்பதில்லை. எனவே, நின் தன்மை: நீ அவ்வாறு ஒன்றாய்க் கலந்தும் வேறாய்த் தனித்தும், என்னோடு உடனாயும் நின்ற உன் தன்மையை; (ஒன்றாய், வேறாய், உடனாய்) நினைப்பற நினைந்தேன் - எனது உள்ளத்தில் விளங்கும் நினைப்பும் மறப்பும் நீங்கிய மெய்யுணர்வினால் உன்னையே நினைந்தேன்.
இந்தப் பாடலில் உள்ள ""நினைப்பு அற நினைந்தேன்'' என்னும் தொடர், ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. மாயா கருவிகளாகிய மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களைக் கொண்டு நினைக்காமல், இறைவன் திருவருளே கண்ணாகக்கொண்டு நினைப்பதைத்தான் 'நினைப்பு அற நினைந்தேன்' என்று பெருந்தகை அருளிச் செய்துள்ளார்.
துரியாதீத நிலையாகிய முக்தியில், பெருந்தகை அருளுணர்வால் நினைந்து இருந்தபடியே, கீழ் இறங்கி வந்து, துரிய நிலையில் நம்மிடம் அவர் அனுபவத்தைக் கூறியருள்கிறார். "நினைந்தேன்' என்று அவர் அருளனுபவத்தையே நமக்குக் கூறியருள்வதால், முத்தியில் இறைவனோடு இரண்டறக் கலந்த நிலையிலும், தாம் அவனருளால் அவனை நினைந்திருந்தார் என்பது தெளிவாகப் புலப்படுகிறது.
திருவாசகத்தின் இ(ரு)தயப் பாட்டாகிய இப்பாட்டுக்குச் சில மதவாதிகள், சைவ சித்தாந்தக் கொள்கைக்கு முரணாகப் பொருள் கொண்டு, பாட்டின் கருப்பொருளைச் சிதைவு செய்கிறார்கள். ""சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாம்'' என இப்பாடலில் வரும் தொடருக்கு, "ஆன்மா கரைந்து கரைந்து இறைவனோடு கலந்து முத்தியில் ஒன்றாய்ப் போய்விடுகிறது. எனவே, முத்தி நிலையில் ஆன்மா இல்லை' என்று வேதாந்திகள் பொருள் கூறுகிறார்கள்.
முத்தி நிலையில் "நின்ற தன் தன்மை, நினைப்பற நினைந்தேன்' என்று பெருந்தகை கூறியருள்வதால், முத்தி நிலையில் பெருந்தகை இருந்திருக்கிறார் என்பது தெளிவாகிறது. நினைந்தேன் என்று வரும் சொல்லுக்கு, வேதாந்திகள் பொருள் கூறவில்லை. "நினைந்தேன்' என்னும் சொல் நின்று வற்றுவதாக முடியும்.
மணிவாசகப் பெருந்தகை, தாம் பெற்ற முத்தி இன்பத்தை திருவெண்பாவில், "யாவரும் பெற்று அறியா இன்பத்துள் வைத்தாய்க்கு / மற்றறியேன் செய்யும் வகை' (622) என்று அருளியுள்ளார். இதிலிருந்து, முக்தியில் அவர் பேரின்பத்தை நுகர்ந்து கொண்டு இருந்திருக்கிறார் என்பது தெள்ளிதின் பெறப்படுகிறது. அவர் தாம் பெற்ற பேரின்ப அனுபவத்தை நமக்கு அறிவுறுத்தும் பொருட்டு அருளுணர்வால் நினைந்தேன் என்று சொல்கிறார்.
சிவபெருமான், உயிர்களுக்குச் செய்து வரும் உதவிகளில் இது பேருதவியாக இருப்பதால், இந்தப் பகுதியில் முத்தியில் இறைவன் நமக்கு உதவுவதைக் குறித்தும் குறிப்பிடலாயிற்று. இறைவன் வேறு; உயிர் வேறு எனும் சைவ சித்தாந்தக் கொள்கையின் உயிர்நாடியாக இத்திருவாசகப் பாடல் திகழ்கிறது. கடவுள் ஒருவனே உள்பொருள், மற்றையன எல்லாம் வெறும் தோற்றம் எனக் கூறிவரும் வேதாந்திகள், இப்பாடலுக்குத் தங்கள் கொள்கைக்கு ஏற்பப் பொருள் கூறுவது பொருந்தாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
மணிவாசகரின் ஒவ்வொரு சொல்லுமே மிகச் சிறந்ததொரு ஆவணமாகும். திருவாசகம் மட்டுமல்ல, பல ஞான நூல்களிலும் இதுபோன்று கருப்பொருளில் சிதைவை ஏற்படுத்தி, அதைப் பதிப்பித்தும் வருகின்றனர். மணிவாசகத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லும் அதிநுட்பமானவை. அவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும் என்பதை இனிவரும் தலைமுறையினருக்கு அறிவுறுத்த வேண்டியது சான்றோர் கடமையாகும்! குறிப்பாக, மணிவாசகத்தைச் சிந்தை செய்வோரின் மிகப்பெரிய கடமையாகும்!
-இடைமருதூர் கி.மஞ்சுளா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...