சிற்றுயிர்க்கு உற்ற துணையாக இருப்பது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் தரும் கல்விதான். கல்வியைக் காட்டிலும் மிகச்சிறந்த துணை வேறில்லை என்று கூறும்(நீ.நெ.வி.1) குமரகுருபரர், துன்பமாகத் தோன்றிப் பின்பு மிக்க இன்பம் பயக்கவல்லது கல்வி. அது மடமையை (அறியாமை) அழித்து அறிவினை அகலப்படுத்தும். கல்வி எந்த அளவுக்கு மிகுதியாகக் கற்பினும் அதன் பொருளாழத்தையும் நுண்மையையும் ஆராய்ந்து அறியாவிடின் அது பெருமை உறாது(4); பிரம்மன் படைக்கும் உயிர்கள் இறந்துபோகும். ஆனால், கலைமகள் அருள்பெற்ற புலமைச் சான்றோர் படைக்கும் நூல்கள் இறந்து போகாமல் நிலைபெறும்; கல்வியே உயர்ந்தது; கல்வியைவிட சிறந்த அழகு வேறு ஒன்றுமில்லை என்று கூறுபவர், அறிவு முழுவதையும் பெற்றவர்கள் எவரும் இல்லை; அதனால் மிகுதியாகக் கற்றுவிட்டோம் என்று மகிழ்ச்சி (செருக்கு) அடைதல் கூடாது' என்கிறார்.