டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

'தலைகீழ்' சாதனை!

மாத்தூர் தொட்டிப் பாலத்தில் தலைகீழாக நின்று சாதனை படைத்த ராஜேஷ்!

News image
Updated On :15 ஜூன் 2024, 6:30 pm

சி. சுரேஷ்குமார்

ஓடும் காரின் மேல் தலைகீழாக நிற்பது, குறுகலான கண்ணாடி பெட்டிக்குள் தனது உடலை நுழைத்து படுப்பது. என பல சாகசங்களை உயிரை பணயம் வைத்து செய்து வருகிறார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி.

இந்தச் சாதனைகளுக்குச் சொந்தக்காரர் மார்த்தாண்டம் அருகே உள்ள உதச்சிக்கோட்டை, மறுகண்டான்விளையைச் சேர்ந்த நாற்பது வயதான எஸ். ராஜேஷ்.

அவரிடம் பேசியபோது, எனது தந்தை சுவாமிநாதன், சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் தாய் ரோசிலி சிரமப்பட்டே என்னையும், இரு தங்கைகள், ஊனமுற்ற தம்பியை வளர்த்தார்.

'குடும்பத்தில் மூத்தவன் என்ற நிலையில் வறுமையால், குடும்பப் பாரத்தை சுமக்க வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டேன். எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. சிறு வயதிலேயே எனக்கு, பிறர் செய்ய முன்வராத விஷயங்களில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஆரம்பத்தில் நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று வெற்றி பெற்றேன். பின்னர் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற ஓட்டப் பந்தயப் போட்டியில் பங்கேற்று வெற்றிகளைக் குவித்தேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான, ஆசியாவிலேயே உயரமான 115 அடி உயரம் கொண்ட மாத்தூர் தொட்டிப் பாலத்தின் கைப்பிடிச் சுவர் மீது தலைகீழாக நின்று சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. இதற்காக சிரசாசனம் பயின்றேன். சாதாரண இடங்களிலும், அதிக காற்று வீசும் பகுதிகளிலும் தலைகீழாக நின்று பயிற்சி செய்தேன். 2012- ஆம் ஆண்டு பிப்ரவரியில் அதன் கைப்பிடிச் சுவர் மீது தலைகீழாக நின்று சாதனை படைத்தேன்.

தொடர்ச்சியாக, 2019-இல் ஓடும் காரில் தலைகீழாக நின்று சாதனையையும் நிகழ்த்தினேன். குமரி மாவட்ட சாலைகள் மேடு பள்ளமாக உள்ளதால் 20 கி.மீ. வேகத்தில் ஓடும் காரின் மீது சுமார் 3 கி.மீ. தூரம் தலைகீழாக நின்றேன்.

இதையறிந்த கேரள மாநிலத்துக்கு உள்பட்ட மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெருந்தல்மண் பகுதியைச் சேர்ந்த ஷெரீப் என்ற வாகன ஓட்டுநர் என்னை தொடர்பு கொண்டார். அவர் கண்களை துணியால் கட்டிக் கொண்டு 3 கி.மீ. தொலைவு கார் ஓட்ட அந்த காரின் மீது நான் தலைகீழாக நின்றேன். இந்தச் சாதனையை 'யுனிவர்சல் வேல்டு ரெக்கார்டு' என்ற அமைப்பு அங்கீகரித்தது.

அதன் பின்னர் ஐந்தரை அடி உயரம் கொண்ட நான், மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக 27 இஞ்ச் நீளம், 14 இஞ்ச் அகலம், 16 இஞ்ச் உயரம் கொண்ட கண்ணாடி பெட்டிக்குள் உடலை சுருட்டி வைத்து சாதனை செய்தேன். இந்தச் சாதனையை, 'டேலன்ட் புக் ஆப் ரெக்கார்டு அமைப்பு' அங்கீகரித்தது.

மூன்று பந்துகள் மீது இரு கைகள், தலையை வைத்து அரை மணி நேரத்துக்கும் மேல் தலைகீழாக நின்று சாதனை செய்துள்ளேன்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலின்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற வலியுறுத்தி, சமூக நலத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காரில் தலைகீழாக நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினேன். இதற்காக, நாகர்கோவில் கோட்டாட்சியர் காளீஸ்வரி, சமூக நலத்துறை அலுவலர் சரோஜினி ஆகியோரின் பாராட்டைப் பெற்றேன்.

உயிரை பணயம் வைத்து செய்யும் இதுபோன்ற சாதனைகள் எனது குடும்பத்தினருக்கு கவலையைத் தரும். ஆனால் பார்வையாளர்களின் பாராட்டு இதுபோன்ற சாகசங்களில் தொடர்ந்து ஈடுபட வைக்கிறது. மற்றவர்கள் செய்ய துணியாத சாகசங்களைச் செய்ய வேண்டும்.

இதுவரை உள்ளூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடந்த ஓட்டப்பந்தய போட்டிகளில் பங்கேற்று நூற்றுக்கும் மேற்பட்ட சுழற்கோப்பை, கேடயங்களைப் பெற்றுள்ளேன் எனது ஒவ்வொரு சாதனைகளுக்கும் மனைவி ஷைனியும், எனது நண்பர்கள் ஆதரவாக இருந்து வருகிறார்கள்.

தொடர்ந்து சாதனைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், எனக்கு பொருளாதார நிலைதான் சவாலாக உள்ளது.

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் மனிதனுக்கு எதுவும் சாத்தியம். எதிர்காலத்தில் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் எனது பெயரை பதிக்க ஆசைப்படுகிறேன்' என்கிறார் ராஜேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.