/

கலாசாரத்தைக் காக்கும் தெருக்கூத்துக் கலைஞர்கள்

'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா? சொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமா? சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா?''

News image
தெருக்கூத்துக் கலைஞர்கள்
Updated On :31 ஆகஸ்ட் 2024, 6:30 pm

வ. ஜெயபாண்டி

'கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா? கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா? சொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமா? சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவை ஆகுமா?'' என்று "ஆலயமணி' திரைப்படத்தில் வரும் பாடல் வரிகள் புதுவை மாநிலத்துக்கு உள்பட்ட திருப்புவனை எம்எல்ஏ பி.அங்காளனுக்கு மிகவும் பொருந்தும்.

சட்டப் பேரவையில் அவருடைய பேச்சும், அதை வெளிப்படுத்தும் பாங்கும் தனித்திறன்களுடன் இருக்கும்.

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் பி.அங்காளன் தவறுகளைத் தட்டிக் கேட்கவும், மக்கள் நலனுக்கான திட்டங்களுக்காகவும் குரல் கொடுப்பதில் தவறுவதே இல்லை.

எப்போதும் சர்ச்சைகளும், விமர்சனங்களும் தன்னை சுழன்றடிக்கும் பிரபல அரசியல்வாதியான பி.அங்காளன் ஒரு தெருக்கூத்துக் கலைஞர்.தெருக்கூத்துக்கான சபாவை ஆரம்பிக்க தீவிர முயற்சியில் இருக்கும் அவரிடம் பேசியபோது:

'எனது சொந்த ஊர் செல்லிபட்டு கிராமம். நான் சமூகவியல் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ளேன்.

எனது அப்பா பாவாடை தலையாரியாக இருந்தவர். அம்மா குடும்பத் தலைவி. மூன்று சகோதரிகள். அப்பா வருவாய்க்காக இல்லாமல் திருவிழாக்களுக்காகவே தெருக்கூத்துக் கலைஞராக வேடம் கட்டுவது வழக்கம். அவர் மிருதங்கமும் வாசிப்பார். அவரது தாளம், மிருதங்கம், ஆர்மோனியம் ஆகியன இன்றும் எங்கள் வீட்டில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

அப்பாவின் கலைத் தாக்கமே என்னையும் தெருக்கூத்துக் கலைஞனாக்கியது. எனது 29 ஆவது வயதில் செல்லமுத்து மாரியம்மன் திருவிழாவுக்காக சக நண்பர்களுடன் சேர்ந்து, வழுதாவூர் மாயகிருஷ்ணனை ஆசிரியராகக் கொண்டு "மக்கள் கலைக் கழகம்' எனும் பெயரில் தெருக்கூத்து குழுவை ஆரம்பித்தோம்.

இந்தக் குழுவின் முதல் தெருக்கூத்து "அங்காளபரமேஸ்வரி துர்வாசகர்' எனும் தலைப்பில் நடைபெற்றது. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில் தல வரலாறான அந்தத் த் தெருக்கூத்தை விடிய விடிய நடத்தினோம். நான் கிருஷ்ணர் வேடம் அணிந்து நடித்தேன். தெருக்கூத்துக்கு ஒரு வாரமே பயிற்சி எடுத்தோம். அனுபவம் வாய்ந்த தெருக்கூத்துக் கலைஞர்கள் எங்களது முதல் தெருக்கூத்தை ரசித்துப் பாராட்டினர்.

தெருக்கூத்துக் கலைகளுக்கு இடையே அரசியல் கட்சியிலும் ஈடுபட்டதால், மக்களின் பிரச்னைகளை நன்கு அறிந்தேன். 2001, 2006ஆம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு எம்எல்ஏவாக ஆனேன். இருந்தபோதும் எனது தெருக்கூத்தை விடவில்லை.

2006 ஆம் ஆண்டில் கோனேரிக்குப்பத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், "மாடு பிடி சண்டை' எனும் தெருக்கூத்தில் நடித்தேன். அமைச்சராகச் சில ஆண்டுகள் இருந்தபோதும், கலையின் தாகம் தீரவில்லை. தெருக்கூத்து கலைஞனாகவே என்னை தொகுதி மக்கள் அடையாளம் கண்டனர். அதுவே எனது அரசியல் அடித்தளத்துக்கும் காரணமாகியது. நான்காவது முறையாக எம்எல்ஏவாகியுள்ளேன். அரசியலில் நாம் உழைக்க பிறர் சந்தோஷப்படுவர்.

அதிகாரத்தை மட்டுமே நம்பியிருக்கவேண்டும். ஆனால், கலையானது நம்மையும் சந்தோஷப்படுத்தி, அதைக் காண்போரையும் சந்தோஷப்படுத்தும் என்பதால் தெருக்கூத்து கலைஞனாக என்னைப் பார்ப்பதிலேயே எனக்கு முழுமையான சந்தோஷமாக உள்ளது. பத்துக்கும் மேற்பட்ட தெருக்கூத்துகளில் தொடர்ந்து பங்கேற்றேன். அதில், கிருஷ்ணர், சிவன் வேடங்களில் நடித்துள்ளேன்.

தெருவோரத் தரையில் புராணக் காலத்து கதாபாத்திரங்களின் வேடம் அணிந்து இசையை மட்டும் பின்னணியாகக் கொண்டு நடத்தப்படுவதே தெருக்கூத்து கலையாகும்.

அக்கலையானது நமது மண்ணின் பண்பாடு, கலாசாரத்தை கலைஞர்களின் பாடல்,பேச்சு, முகபாவ நடிப்பு மூலம் வெளிப்படுத்தும் அற்புதக் கலையாகும்.

திருவிழாக்களில் தெருக்கூத்துக் கலை நடத்தினால் ஊர் சுபிட்சமாகும். அமைதி ஏற்படும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

தெருக்கூத்து போன்ற பழந்தமிழ் கலைகள் மூலமே தற்கால திரைப்படம் உள்ளிட்டவை நடத்தப்பட்டுவருகின்றன. ஆனால், தெருக்கூத்துக் கலைஞர்களை ஏளனமாகப் பார்க்கும் போக்கே உள்ளது. அத்தகைய நிலையை மாற்றும் வகையில் தெருக்கூத்துக்கான அங்கீகாரத்தை உயரிய மரியாதையை பெற்றுத்தருவதில் அக்கறையுடன் செயல்படுகிறேன்.

தெருக்கூத்துக் கலைஞர்கள் இன்னும் வறுமையில் வாடினாலும், கலைக்காக தங்களை அர்ப்பணித்தே வாழ்கின்றனர். அவர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தித் தரப் போராடி வருகிறேன்.

ஆண்டுதோறும் கலை, பண்பாட்டுத்துறை சார்பில் ஏப்ரல், மே மாதங்களில் ஊர்கள் தோறும் மாற்றி மாற்றி தெருக்கூத்து நடத்தப்பட்டு, கலைக்கு புத்துயிரூட்டப்பட்டுவருகிறது.

புதுவை மாநிலத்தில் ஐந்து ஆயிரம் கலைஞர்கள் இருக்கும் நிலையில், தெருக்கூத்துக்கு சபா ஏற்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்.

இளம்தலைமுறையினரும் இக்கலைக்கு ஆர்வமுடன் பயிற்சி பெற வருகிறார்கள்.

ஆன்மிகப் பண்பாட்டையும், கலாசாரத்தையும் கிராமங்கள்தோறும் காப்பாற்றிவருவதில் தெருக்கூத்து கலைஞர்களுக்கு முக்கிய பங்குண்டு. எனது அரசியல் ஓய்வு நேரத்தை தெருக்கூத்துக் கலைஞனாகவே கழிக்கிறேன்'' என்கிறார் அங்காளன்.

படங்கள் கி.ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.