பாகவத மேளா: 500 ஆண்டுகால பாரம்பரியம்
முன்னொரு காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மெலட்டூர், சாலியமங்கலம், ஊத்துக்காடு, தேப்பெருமாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் லட்சுமி நரசிம்ம ஜெயந்தியை ஓட்டி பாகவத மேளா நடத்தப்பட்டு வந்தது.


முன்னொரு காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மெலட்டூர், சாலியமங்கலம், ஊத்துக்காடு, தேப்பெருமாநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் லட்சுமி நரசிம்ம ஜெயந்தியை ஓட்டி பாகவத மேளா நடத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் மெலட்டூர், சாலியமங்கலம் உள்ளிட்ட சில கிராமங்களில் மட்டுமே இந்தக் கலையானது இன்றும் தொடர்கிறது.
தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் ஆட்சிக் காலமான 16 ஆம் நூற்றாண்டில் ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த 500க்கும் அதிகமான அறிஞர்கள், கலைஞர்களுக்கு பாபநாசம் அருகேயுள்ள மெலட்டூரில் வீடு, நிலம் வழங்கப்பட்டது. இவர்களில் பாகவதலு என்கிற பாகவதர்கள் இணைந்து அரங்கேற்றிய கலைதான் பாகவத மேளா. தொடக்கத்தில் "பாகவத மேளம்' என அழைக்கப்பட்ட இந்தப் பெயர் காலப்போக்கில் மருவி "பாகவத மேளா' என மாறியது. மக்களிடையே பக்தியை வளர்ப்பதற்காக இந்தக் கலை உருவாக்கப்பட்டது.
இதில், தெலுங்கு மொழியில் நிகழ்த்தப்படும் நாடகங்கள் அனைத்தும் புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது. இரவு முழுவதும் தொழில் முறையல்லாத ஆண்களே நிகழ்த்தும் அரங்கக் கலை இது. பெண் கதாபாத்திரங்களையும் ஆண்களே செய்கின்றனர். மிகவும் தத்ரூபமாக இருக்கும் இந்த நாடகத்தைக் காண ஆண்டுதோறும் ஏராளமானோர் கண்டுகளிக்கின்றனர்.
மெலட்டூரில் நடைபெறும் பாகவத மேளா தனித்துவம் வாய்ந்தது என்பதால், "மெலட்டூர் பாகவத மேளா' என அழைக்கப்படுகிறது. நிகழாண்டும் மெலட்டூர் வரதராஜ பெருமாள் கோயில் முன் மே 18 இல் தொடங்கியது. 10 நாள்களுக்கு நடைபெறுகிறது.
இந்தக் கலை குறித்து பாகவத மேளா நாட்டிய நாடக சங்க நிர்வாக அறங்காவலர் கலைமாமணி எஸ். குமார் கூறியதாவது:
""அக்காலத்தில் மெலட்டூரில் வாழ்ந்த வெங்கட்ராம சாஸ்திரி இதற்கான கதை, வசனம் எழுதி இயக்கி நடத்தி வந்தார். இவர் 12 பாகவத மேளா நாடகங்களை எழுதியுள்ளார்.
இவற்றில் பிரகலாத சரித்திரம், ஹரிச்சந்திரா, மார்க்கண்டேயா, உஷா பரிணயம், ஸ்ரீகிருஷ்ண ஜனனம் கம்சவதம், ருக்மணி கல்யாணம், சீதா பரிணயம், துருவ சரித்திரம், ஹரிஹர லீலா விலாசம் ஹரிஹர புத்ரன் ஜனனம், சதி சாவித்திரி ஆகிய 10 நாடகங்கள் எங்களிடம் உள்ளன. தவிர, பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட வள்ளித் திருமணம் என்கிற தமிழ் நாட்டிய நாடகமும் நடைபெறுகிறது.
இந்த நாடகங்களுக்கு இசையே உயிர்நாடி எனக் கூறலாம். வெங்கட்ராம சாஸ்திரி தன் சாகித்யங்களில் பொதுவான ராகங்களை உபயோகித்திருந்தாலும், மிகவும் அரிதான வழக்கத்தில் இல்லாத கண்டா, ஆகிரி போன்ற ராகங்களையும் பயன்படுத்தியுள்ளார். மெலட்டூர் பாகவத மேளாவில் பயன்படுத்தப்படும் கண்டா ராகம் மெலட்டூர் கண்டா என அழைக்கப்படுகிறது.
முக்கியமாக, வெங்கட்ராம சாஸ்திரியின் உருவாக்கத்தில் பிரகலாத சரித்திரத்தில் அவர் பயன்படுத்தியுள்ள பூர்வரங்க அமைப்பு ஒரு சிறப்பு அம்சமாகும். பாகவத மேளாவில் மட்டுமே இந்த பூர்வரங்க அமைப்பை நடனத்தின் மூலம் சமர்ப்பிக்கிறார். பிரகலாத பட்டாபிஷேகத்துடன் இதை ஒரு கதை சொல்லும் உத்தி என்றே சொல்லலாம்.
ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்த நிகழ்வு பல நேரங்களில் பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளானாலும், அப்படியே நின்று விடாமல் தொடர்ந்து செயல்பட்டது என்பது இதன் தனிச்சிறப்பு. கடந்த நூற்றாண்டிலும் அப்படியொரு நெருக்கடி இந்தக் கலைக்கு நிகழ்ந்தது.
1932 ஆம் ஆண்டு பாகவத மேளாவுக்கு முக்கிய காரணமாக இருந்த பரதம் நடேசய்யர் நோய்வாய்ப்பட்டுக் காலமானார். இதனால், மெலட்டூரில் பாகவத மேளா நாடக நிகழ்வு நின்றுபோனது. இதையடுத்து, 1938 ஆம் ஆண்டு எனது தாத்தா வெ. கணேசய்யர் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம ஜயந்தி பாகவதமேளா நாட்டிய நாடக சங்கம்' என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார். இதில் நடேசய்யரின் சீடர்கள் பலரை தன்னுடன் இணைத்துக் கொண்டு, ஏறத்தாழ 25 கலைஞர்களுக்கு இக்கலையைக் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
மெலட்டூர் ஸ்ரீவரதராஜப் பெருமாள் சந்நிதி முன் 1941 ஆம் ஆண்டு "பிரகலாத சரித்திரம்' என்ற நாட்டிய நாடகத்தை அரங்கேற்றம் செய்தார். இதன் மூலம் இந்த பாகவத மேளா கலை மீண்டும் உயிர்த்தெழுந்தது.
தீவிர நரசிம்ம பக்தரான எனது தாத்தா இந்தக் கலையைத் தெய்வத்துக்காகவே நடத்தினார். ஊர் மக்களிடம் யாசித்து ஸ்ரீலட்சுமி நரசிம்மரின் ஐம்பொன்னால் ஆன உத்ஸவ மூர்த்தியை வடிவமைத்து பிரதிஷ்டை செய்தார். இந்தக் கலையை வளர்ப்பதற்காக அவர் தன்னுடைய 40 ஏக்கர் நிலங்களைச் சிறிது சிறிதாக விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்துக் கொண்டு ஆண்டுதோறும் உற்சவத்தை நடத்தி வந்தார்.
தாத்தாவுக்குப் பின்பு என் தந்தை கலைமாமணி ஜி. சுவாமிநாதன் பாகவதமேளாவின் பொறுப்பையும், "ஹிரண்யகசிபு', "ஹரிச்சந்திரன்' போன்ற வேடங்களையும் ஏற்று மிகச் சிறப்பாக நடத்தி வந்தார். என் தந்தைக்குப் பின்னர் மூத்த அண்ணன் நடராஜன் வசம் இந்தப் பொறுப்பு வந்தது.
இக்கலை உலகம் முழுவதுக்கும் சென்றதற்கு அவர்தான் காரணம். பெண் வேடங்களான "லீலாவதி', "சந்திரமதி' போன்ற கதாபாத்திரங்களை ஏற்று மிக அழகாக, தத்ரூபமாக நடித்து வந்தார். அவர் 2020 ஆம் ஆண்டு மறைந்ததைத் தொடர்ந்து, எனது தலைமையில் இவ்விழா நடைபெறுகிறது.
நாடகங்கள் அனைத்தும் நேரில் நிகழ்வது போன்று இருக்கும். குறிப்பாக பிரகலாத சரித்திர நாடகத்தில் மிக முக்கிய நிகழ்வான ஹிரண்யகசிபுவை ஸ்ரீ நரசிம்மர் வதம் செய்யும் காட்சி அதிகாலையில் நடைபெறும்.
ஏறத்தாழ ஒரு மணிநேரம் நிகழும் இந்தக் காட்சியில் தூணை ஹிரண்யகசிபு அடிப்பது, அத்தூணிலிருந்து உடைத்துக் கொண்டு நரசிம்மர் வெளியே வந்து ஹிரண்யகசிபுவை வதம் செய்வது போன்ற காட்சிகள் தத்ரூபமாக இருக்கும். இதற்காக அணிவிக்கப்படும் நரசிம்ம முகக்கவசம் ஆண்டு முழுவதும் பூஜை செய்யப்படுகிறது. எனவே, இந்த முகக்கவசத்தை அணிவிக்கப்படும்போது நரசிம்மரே நேரில் வந்து காட்சி அளிப்பது போன்று இருக்கும்.
இதில், பங்கேற்கும் கலைஞர்கள் 80 ஆண்டுகளாக எந்தவித சன்மானமும் இல்லாமல், இறைவனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கின்றனர்.
பக்தியும் கலையின் மீதான ஈடுபாடுமே அவர்களை வழி நடத்துகிறது. இதுவே, இக்கலை வடிவம் 500 ஆண்டுகள் கடந்தும் உயிர்ப்புடன் இருப்பதற்குக் காரணம்.
அடுத்த தலைமுறை இளைஞர்கள் இதில் மிகுந்த ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ளனர். ஸ்ரீகாந்த் நடராஜன், விஜய் மாதவன், அரவிந்த் ராமதுரை ஆகியோர் 35 ஆண்டுகளாக நடித்து வருகின்றனர். இதேபோல, திருவையாறு சகோதரர்களான எஸ். நரசிம்மன், எஸ். வெங்கடேசன் தலைமையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இசை நிகழ்த்தப்படுகிறது.
மிகப் பெரிய பொக்கிஷமான இக்கலை இந்த நவீன யுகத்திலும் வணிகமாக்கப்படாமல், பாரம்பரியம் மாறாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தப்படுகிறது. நரசிம்ம சுவாமி மீதான பக்தி காரணமாக எல்லோரும் வருகின்றனர். இதனால் இக்கலை இப்போதும் உயிர்ப்புடன் உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு கதாபாத்திரங்களைச் செய்வதற்கான கலைஞர்களையும் தயார் செய்து வைத்துவிட்டோம். எனவே, இந்தக் கலை அழிந்து போகும் நிலை நேராது என உறுதியாக நம்புகிறேன்'' என்றார் குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...