மகளிர் நடத்திய சிறுதானிய கண்காட்சி!
2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, சிறுதானியங்களின் முக்கியத்துவம், நீடித்த வேளாண்மையில் சிறுதானியங்களின் பங்கு, சிறப்பான உணவு


2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக, ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, சிறுதானியங்களின் முக்கியத்துவம், நீடித்த வேளாண்மையில் சிறுதானியங்களின் பங்கு, சிறப்பான உணவு ஆகிய முறைகளில் அதன் பயன்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
அந்த வகையில் சிறுதானியத்தையும், உலக மகளிர் தினத்தையும் (மார்ச் 8) போற்றும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை, அறிவியல் மகளிர் கல்லூரி மனையியல் துறை சார்பில் "மகளிரும், சிறுதானியமும்' என்ற தலைப்பில் கொண்டாட்டத்தை அண்மையில் நடத்தினர்.
விழாவில் பங்கேற்றோர் தெரிவித்த முக்கிய கருத்துகள்:
""இளம்தலைமுறையினருக்கு சிறுதானிய உணவு வகைகள் மறந்துவிட்டன. அதை ஞாபகப்படுத்தவும் விழிப்புணர்வும் ஏற்படுத்துவது அவசியம்.
பாரம்பரியமான உணவு சார்ந்த நடைமுறைகள் ஒவ்வொரு பருவகாலத்துக்கும் ஏற்ற உணவுகளை உண்ண வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளன.
உடலுக்கு எப்பொழுது எந்த வகையான ஊட்டச்சத்துகள் தேவையோ, அந்த நேரத்தில் அவை எளிதில் கிடைப்பதை இந்த நடைமுறையானது உறுதி செய்துள்ளது.
கோடைக் காலத்துக்கு வெள்ளைச் சோளத்தையும், குளிர்காலத்துக்கு கம்பும், மக்காச் சோளமும்;. அதைப்போல கேழ்வரகு எல்லாப் பருவ காலத்துக்கும் ஏற்றது. சிறுதானியங்கள் வறட்சியைத் தாங்கும் பயிர்களாகும். இது வறண்ட கால நிலையிலும் கூட வளர்க்கப்படலாம். இது நார்ச்சத்துகளும், அத்தியாவசிய தாதுகளும் நிறைந்த ஒரு சத்தான தானியமாகும். இந்தக் காரணங்களால், வரும் ஆண்டுகளில் முக்கியமானதோர் உணவுப் பயிராகத் தொடரும்.'' என்றனர்.
இதுகுறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதி கூறியதாவது:
"சிறுதானியத்தில் பாஜ்ரா, பர்ஜரி, சஜ்ஜா, சஜ்தே ஆகிய பெயர்களில் கம்பும், ஜோவார், ஜான்ட்லா, ஜோனா, ஜோல்ரா, ரோட்லா ஆகிய பெயர்களில் சோளமும் அழைக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, குஜராத், மஹாராஷ்டிரம், தமிழ்நாடு, கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமாக விளைகின்றன.
கருவுறுதல் என்பது பெண்களுடைய உடல் அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு, வளரும் குழந்தைக்குத் தேவையான எடை, பிளாஸ்மா, ரத்த உற்பத்திக்கும், பொதுவான வளர்ச்சிக்கும் அதிகக் கூடுதலான ஊட்டச்சத்துகள் தேவைப்படும் காலமாகும். கர்ப்பிணிகள் இரும்புச் சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளாத நிலையில் இரும்புச்சத்து குறைபாடு இரத்தச் சோகையாக வெளிப்படும். மகப்பேறுக்குப் பின்னர் ஏற்படும் ரத்தப் போக்கால் பாலூட்டும் தாய்மார்களுக்கும் இவ்வகையான ரத்தச் சோகை காணப்படும்.
ஆகவே கருவுற்ற பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவில் கலோரி, புரத, இரும்பு, சுண்ணாம்புச் சத்துகள் கொண்டு உணவு அளிக்கப்பட வேண்டும். வரகு போன்ற சிறுதானியங்களும் மிகுந்த ஊட்டச்சத்து மிக்கவை. செரிமானம் எளிதாகிறது. இதில் ஃபைடோ கெமிக்கல் பொருள்களுக்கு புற்றுநோயை எதிர்க்கும் தன்மை உண்டு. நார்ச்சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...