கிராமமே மாறிப் போச்சு..!
கால் நூற்றாண்டுக்கு முன்பெல்லாம் "செட்டிப்பட்டு' கிராமத்தின் பெயரைக் கூறினாலே, கேட்பவர்கள் அச்சப்படுவர். குற்றச் செயல்கள் அடிக்கடி நடப்பதாகக் கூறி, அந்தப் பகுதிக்குச் செல்லவே அஞ்சுவர்.


கால் நூற்றாண்டுக்கு முன்பெல்லாம் "செட்டிப்பட்டு' கிராமத்தின் பெயரைக் கூறினாலே, கேட்பவர்கள் அச்சப்படுவர். குற்றச் செயல்கள் அடிக்கடி நடப்பதாகக் கூறி, அந்தப் பகுதிக்குச் செல்லவே அஞ்சுவர். தனியார் நிறுவனங்களில் கூட இந்தக் கிராமத்தினருக்கு வேலை தரத் தயங்குவர். கொலை வழக்கில் கிராமத்தின் பெரும்பாலான ஆண்கள் மீது திருக்கனூர் காவல் நிலையத்தில் வழக்கும் பதியப்பட்டது. காவல் துறை ஆவணங்களில் அந்தக் கிராமத்தின் பெயர் கரும்புள்ளியாகவும் காட்டப்பட்டது.
தற்போது அந்தக் கிராமத்தைப் புகழாதவர்கள் யாருமில்லை. அனைத்துத் தரப்பினரும் வழி கேட்டு செல்வது ஆச்சரியத்தையே ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் அந்தக் கிராமத்து இளைஞர்களின் இடைவிடாத முயற்சியும் தடையில்லாத பயிற்சியும்தான் காரணம்.
புதுச்சேரியிலிருந்து வழுதாவூர் வழியாக விழுப்புரம் செல்லும் வழியில் உள்ளது அந்தச் சிறிய கிராமம். திருக்கனூரில் இருந்து வலதுபுறம் சென்றால் 3 கிலோ மீட்டர் தொலைவில் சங்கராபரணி ஆற்றோரம் அந்தப் பசுமை நிறைந்த கிராமத்தை அடையலாம்.
பத்து பெரிய தெருக்கள், பதினைந்து குறுஞ்சந்துகள் என சுமார் 400 வீடுகளுடன் 2,500 பேர் இங்கு வசிக்கின்றனர். அன்றாடம் பணிபுரிந்தால்தான் அவர்கள் சாப்பிடமுடியும். இந்தக் கிராமத்தில் தற்போது 200 பேர் அரசுப் பணியில் அமர்ந்துள்ளனர். அவர்களில் 150 பேர் வரை காவல் துறை உள்ளிட்ட சீருடைப் பணியில் சேர்ந்திருப்பதுதான் ஆச்சரியம்.
கிராமத்தில் தொடக்கப் பள்ளி மட்டுமே உண்டு. மேல்நிலைப் பள்ளிக்கு 3 கிலோ மீட்டர் தொலைவு கூனிச்சம்பட்டுக்குத் தான் செல்லவேண்டும். கல்லூரிக்கு 25 கிலோ மீட்டர் தூரமுள்ள புதுச்சேரிக்குத் தான் செல்லவேண்டும்.
கிராமத்தில் மைதானங்கள் இல்லை. தேர்வுப் பயிற்சிக்கு மையங்கள் இல்லை. ஆனாலும், கடந்த பத்து ஆண்டுகளில் காவலர் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. புதுவையில் மட்டுமல்ல, தமிழகத்தில் நடைபெறும் காவலர் தேர்விலும் இந்தக் கிராமத்து ஆண்கள், பெண்கள் பங்கேற்பதுதான் சிறப்பம்சம்.
புதுவையில் 2021 ஆம் ஆண்டு 5 பேரும், 2022 ஆம் ஆண்டு 7 பேரும், 2023ஆம் ஆண்டு காவலர் தேர்வில் 11 பேரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். மைதானமில்லாததால் தினமும் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள சேணிப்பட்டு, செங்கமேடு ஆகிய பகுதிகளில் சென்று ஒழுங்கற்ற தரையில் ஓடி பயிற்சி எடுக்கிறார்கள். காவல் பணியில் சேர்ந்தவர்களில் 4 பேர் பெண்கள்.
பத்தாம் வகுப்பு முதல் எம்.டெக், பி.ஃபார்ம் பட்டம் பெற்றவர்களாக இருந்தாலும் காவல்துறை பணியில் சேரவே ஆர்வம் காட்டிவருகின்றனர்.
செட்டிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இந்திராகாந்தி கூறியதாவது:
"எங்கள் கிராமத்தின் பெயர் ரொம்பக் கெட்டுப் போய்த்தான் இருந்தது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு சிதைந்த வரதராஜப் பெருமாள் கோயிலை புனரமைத்து சீரமைத்தோம். அன்றிலிருந்து நல்லகாலம் பிறந்துவிட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரத்தினம், வெங்கடேசன், ஞானப்பிரகாஷ் ஆகியோர் காவல் துறையில் முதன்முதலில் சேர்ந்தனர். அவர்களது குடிசை வீடுகள் கல்வீடுகளாகின. அதைப் பார்த்த நாங்கள் பிள்ளைகளை போலீஸானால் வாழ்க்கை வசதி கிடைக்கும் என கூறியே வளர்த்தோம்.
அந்தக் காவலர்களும் கிராமத்து இளைஞர்கள் முன்னேற வேண்டும் என உதவினர். எனது மூத்த மகன் போலீஸாக உள்ளார். இளைய மகனும் போலீஸ் வேலைக்கு முயற்சித்து வருகிறார். இளம்வயதில் கணவரை இழந்து தன்னந்தனியாக பிள்ளைகளைக் கூலி வேலை செய்து காப்பாற்றி இன்று அரசு வேலையிலும் சேரவைத்திருப்பது பெருமையாக உள்ளது'' என்றார்.
காவலர் சுமன் கூறியதாவது:
""கிராமத்தில் போதைப் பொருள் விற்கப்படுவதில்லை. இளைஞர்கள் தவறான பாதைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காகவே நாங்களே கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளோம்.
கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் எந்த வழக்கும் திருக்கனூர் காவல் நிலையத்தில் பதிவாகவில்லை. சிறுசிறு பிரச்னைகளை நாங்களே பேசி சமரசம் அடைகிறோம். ஆகவேதான் ஒரு காலத்தில் கரும்புள்ளிக் கிராமமாக செட்டிப்பட்டுவை சுட்டிக்காட்டிய திருக்கனூர் போன்ற காவல் நிலையங்களில் இன்று ஆய்வாளர், சார்பு ஆய்வாளர், தலைமைக் காவலர் என பல பணிகளில் நாங்கள் அமர்ந்திருக்கிறோம். கடும் உழைப்பும் விடா முயற்சியும் எங்களை இந்த அளவில் கெளரவப்படுத்தியுள்ளது'' என்றார்.
குடிசை வீட்டில் வசித்து வரும் வேணுகோபால் செல்வி தம்பதி கூறியதாவது:
""படிப்பறிவில்லாத நாங்கள் அன்றாட உணவுக்கே அல்லாடி வருகிறோம். ஆனாலும், மகன், மகளைப் படிக்கவைத்தோம். படிக்கும்போதே எனது மகள் எப்படியும் அரசு வேலையில் சேர்ந்து அதிகாரியாகி குடும்ப வறுமையை போக்குவேன் என்றாள். தற்போது புதுவை காவல்துறையில் தேர்வாகியுள்ளார்'' என்றனர்.

"இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜீவா என்பவரது மனைவி பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு அரசு காவல் துறையில் சேர்ந்தார். பின்னர், பணியைவிட்டு விலகி, ஊராட்சி மன்றத் தலைவரானார். பதவிக்காலம் முடிந்தவுடன், காவல் துறையில் மீண்டும் சேர்ந்தார்.
அரசுப் பணியில் சேருவதும், ஒரு வேலையிலிருந்து அடுத்த வேலைக்கு முயற்சித்து செல்வதும் இங்கு சாதாரணமாகவே உள்ளது.
பகலில் கூலி வேலைக்கு பெற்றோருடன் சென்றுவிட்டு, மாலையில் அரசுப் பணிக்கென படித்தோம். வேலைக்குச் செல்லும் பயிற்சிகளை மேற்கொண்டோம்' என்கிறார் இளைஞர் தருண்குமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...