/

ஆஸ்கர் விருதும், ஆலமரமும்!

புதுச்சேரியில் சாலையோரங்கள், வயல்வெளிகள், ஓடைகள், கால்வாய்கள்,  ஆறுகள் என பெரும்பாலான இடங்களில் ஆலமரங்கள் அதிகம் உள்ளன.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 7:19 pm

ஜெயப்பாண்டி


புதுச்சேரியில் சாலையோரங்கள், வயல்வெளிகள், ஓடைகள், கால்வாய்கள், ஆறுகள் என பெரும்பாலான இடங்களில் ஆலமரங்கள் அதிகம் உள்ளன. ஆனாலும், கீழூர் அருகிலுள்ள சிவராந்தகத்தில் உள்ள ஆலமரத்துக்குத் தனிச்சிறப்புள்ளது. ஒரு ஏக்கரில் பரந்து விரிந்திருக்கிறது அந்த மரம். மன்னர் காலத்தின் வலுவான மாடத்தைத் தாங்கும் தூண்களைப் போல வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கின்றன அந்த மரத்தின் நூற்றுக்கணக்கான விழுதுகள். சுற்றுப்புறமே வறட்சி படிந்தாலும், பசுமைத் தலையில் பலவித உயிரினங்களுக்கும் அடைக்கலம் தருகிறது அந்த இயற்கைக் குடை. இந்த ஆலமரத்தை நூறாண்டுகள் கடந்தும் மூதாட்டி மகேஸ்வரியின் குடும்பத்தினரே பராமரித்துவருகின்றனர். இதுகுறித்து மகேஸ்வரி கூறியதாவது:

"" பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து இந்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் புதுச்சேரி இணைவதற்கான பொதுமக்கள் இசைவு கீழூரில் வாக்கெடுப்பு மூலமே நிறைவேற்றப்பட்டது. 1954- ஆம் ஆண்டு கூடிய மக்கள் பிரதிநிதிகள் 178 பேர் இட்ட கையெழுத்தே புதுச்சேரியின் வரலாற்றைப் புரட்டிப் போட்டது.

இந்தச் சிறப்புமிக்க கீழூருக்கு வருவோர் சிவராந்தக ஆலமரத்தையும் விரும்பிப் பார்க்க வருகின்றனர். ஆலமரம் பாரம்பரியத்தையும், பழமையையும் யதார்த்தமான இயற்கை அமைப்பையும் வெளிப்படுத்தும் வகையில் வளர்ந்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக, பல திரைப்படங்களில் ஆலமரம் காட்சிப்படுத்தியிருந்தாலும் "லைப் ஆஃப் பை' என்ற ஆங்கிலத் திரைப்படத்துக்குப் பின்னரே மவுசு கூடியது.

இந்தத் திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றது. "லைப் ஆஃப் பைஆங்கிலப் படத்தில் சிங்கத்துடன் தனித்துவிடப்படும் கதாநாயகன் தங்குமிடங்களில் வரும் பல காட்சிகளில் இந்த ஆலமரமும் இடம் பெற்றிருக்கும்.
ஆலமரத்தின் சிறப்பை அறிந்த திருவந்திபுரம், கடலூர், அரும்பார்த்தபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் தங்கள் கோயில்களில் இந்த மரத்தை உருவாக்க, அதன் விழுதுப் பகுதியை விலைக்குக் கேட்கின்றனர். ஆனால், தெய்வத்தைப் போல வணங்கிவரும் ஆல விழுதை சேதப்படுத்துவது பாவம் என்பதால், தர மறுத்துவருகிறேன்.

ஆலமரத்தைப் பராமரித்திட எனது முதியோர் உதவித் தொகையை முழுவதுமாக செலவிடுகிறேன்'' என்றார்.

படம்: கி.ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.