ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சாதனை விவசாயி!

செம்மை நெல் சாகுபடித் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு 14,451.25 கிலோ நெல் மகசூல் செய்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருதையும் ரொக்கப் பரிசையும் வென்ற பெண் விவசாயிக. வசந்தா.

Published On :7 பிப்ரவரி 2024, 12:02 pm IST


தமிழ்நாடு அரசின் செம்மை நெல் சாகுபடித் திட்டத்தில் ஒரு ஹெக்டேருக்கு 14,451.25 கிலோ நெல் மகசூல் செய்து மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து, குடியரசு தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருதையும் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசையும் வென்றிருக்கிறார் பெண் விவசாயிக. வசந்தா.

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட பொன்னமராவதி அருகேயுள்ள ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ப. கணேசனின் மனைவி வசந்தா. 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள இருவரும் தங்களது 6 ஏக்கர் பரப்பளவுள்ள வயலில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில், 2021-22-ஆம் ஆண்டுக்கான சி. நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது வசந்தாவுக்கு கிடைத்திருக்கிறது.

விருதுக்கான போட்டியில் 38 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். 2022-ஆம் ஆண்டு ஜனவரி 24-இல் இவரது நிலத்தில் அறுவடைக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேளாண் அலுவலர்கள், பார்வையாளர்களாக கலந்துகொண்ட அறுவடையில், இரண்டரை ஏக்கர் (ஒரு ஹெக்டேர்) நெல் மகசூல் கணக்கிடப்பட்டது. 14451.25 கிலோ என இருந்தது. அதுவே மாநிலத்தின் முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர், சென்னையில் நடைபெற்றகுடியரசு தின விழாவில், வசந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருதையும், பரிசுத் தொகையையும் வழங்கிப் பாராட்டினார்.

இதுகுறித்து க. வசந்தா கூறியது:

""சிறுவயதிலேயே குடும்பத்தோடு சேர்ந்து விவசாயப் பணிகளை மேற்கொண்டேன். திருமணத்துக்குப் பிறகும் விவசாயப் பணிகள்தான்.

வேளாண் விரிவாக்க மையத்தில் இருந்து ஐ.ஆர். 1009 ரக நெல் விதைகளை வாங்கி 2 கிலோ அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா கலந்து நிழலில் உலர்த்தினோம். அதன்பிறகு மேட்டுப்பாத்தியில் 150 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் தயார் செய்யப்பட்டது.

அதன்பிறகு 2.50 ஏக்கர் நிலத்தில் 16 டன் ஆட்டு எரு, தொழுவுரம் இடப்பட்டு, தக்கைப்பூண்டு, சணப்பை, நவதானிய விதைகள் 60 கிலோ விதைத்து பூப்பூக்கும் தருவாயில் 45 நாள்களுக்குப் பிறகு வயலில் மடக்கி உழுதோம். அதன்பிறகு 5 கிலோ டிஏபி, 20 கிலோ ஜிப்சம், 20 கிலோ பொடித்த வேப்பங்கொட்டை கலந்து நிலத்தில் நீர்ப்பாய்ச்சி மெழுகுபதத்தில் நிலத்தை தயார் செய்த பிறகு, நாற்றங்கால் பறித்து ஒற்றை நாற்று முறையில் நடவு செய்யப்பட்டது.

பூச்சிகளைக் கட்டுப்படுத்த வரப்பில் உளுந்து, தட்டைப் பயிர்கள் பயிரிடப்பட்டன. தொடர்ந்து பூச்சித் தாக்குதலை சமாளிக்க வேப்பங்கொட்டையை அரைத்து பூச்சிக்கொல்லியாகப் பயன்
படுத்தினோம்.

பாய்ச்சலும், காய்ச்சலும் முறைப்படி நீர்ப்பாசனம் மேற்கொள்ளப்பட்டது. கோனோவீடர் கருவியின் மூலம் களைகள் அகற்றப்பட்டன. அறுவடைக்கு 30 நாட்கள் முன்பே வேளாண் அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தோம்.

வேளாண்மை லாபகரமான தொழில் இல்லை எனப் பலரும் இத்தொழிலை விட்டுவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கும் சூழலில் எனக்குக் கிடைத்த இந்த மகசூலும் அதனைக் கடந்து மாநில அளவில் கிடைத்த முதலிட விருதும் மிகுந்த மகிழ்ச்சியையும் கூடுதல் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.