/

கங்கையின் தங்கை..!

புராணக் கால சிறப்பு வாய்ந்த கங்கை வராக நதீஸ்வரர் கோயிலில் ஏப். 21-இல் மகா புஷ்கரணி தொடங்கியது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:54 pm

ஜெயப்பாண்டி

புராணக் கால சிறப்பு வாய்ந்த கங்கை வராக நதீஸ்வரர் கோயிலில் ஏப். 21-இல் மகா புஷ்கரணி தொடங்கியது. குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடம்பெயர்ந்ததை அடுத்து அந்த ராசிக்குரிய நதியான சங்கராபரணியில் மகா புஷ்கரணி பூஜைகள் நடைபெறுகின்றன. 2023-ஆம் ஆண்டு மே 3 வரை நடைபெறும் விழாவானது, புதுவையின் பண்பாடு, கலாசாரத்தின் வெளிப்பாட்டின் வரலாற்று நிகழ்வாகவே நடைபெறுகிறது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேயர்களால் அச்சுறுத்தப்பட்ட அரவிந்தர், பாரதியார் போன்ற தியாகத் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த இடம் புதுச்சேரி. ஆன்மிகத்துடன், தேசிய உணர்வையும் வளர்க்கும் கோயில்கள் நிறைந்த ஊர். கங்கைக்குப் பிறகு, புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் மட்டுமே குரு பெயர்ச்சியை முன்னிட்டு ஆன்மிகக் கலாசாரத் திருவிழாவாக "ஆதிபுஷ்கரணி' நடைபெறுகிறது. சங்கராபரணி ஆற்றை "கங்கையின் தங்கை' என்றே அழைக்கிறார்கள்.

நதிகள் என்பவை இந்தியர்களின் நாகரிகப் பண்பாட்டோடு தொடர்புடையவையாகவே உள்ளதால், நதிகளுக்கும் ராசி, நட்சத்திரங்கள் உண்டு. நதியின் நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி நடைபெறும்போது, அதில் புனித நீராடினால் வாழ்வில் நலமும், வளமும் சிறந்தோங்கும் என்பதே மக்கள் நம்பிக்கை.

தேசிய அளவில் மிக முக்கிய 13 நதிகளில் மேஷ ராசிக்குரிய நதிகளாக கங்கையும், புதுச்சேரியில் உள்ள சங்கராபரணியும் மட்டுமே கூறப்படுகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான மக்கள் அனைவரும் கங்கையில் புனித நீராடி, புண்ணியம் தேடவே விரும்கிறார்கள். அத்தகைய கங்கைக்கு இணையாக புண்ணியம் தரும் புனித நதியாக விளங்குகிறது சங்கராபரணி ஆறு.

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி மலையில் தோன்றி, புதுச்சேரிக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் கலக்கும் சங்கராபரணி ஆறு மொத்தம் 78.5 கி.மீ. தூரம் பயணிக்கிறது. மொத்த பயணத்தில் சுமார் 34 கி.மீ. தூரம் புதுவை மாநிலத்துக்குள்ளேயே உள்ளது.

கங்கை கரையில் வாரணாசியில் காசி விசுவநாதர் கோயில் அமைந்திருப்பதைப் போலவே, சங்கராபரணி ஆற்றின் கரையில் 22 பாடல் பெற்ற சிவத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோயிலும், காசி விஸ்வநாதர் கோயிலிலும் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

Story image

ஆன்மிகத்தில் மட்டுமல்ல; புதுவையின் ஆதிகால சரித்திரத்திலும், வரலாற்றுப் பின்னணியிலும் சங்கராபரணி ஆற்றுக்கும், திருக்காஞ்சிக்கும் முக்கிய இடமிருக்கிறது. அதை சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் "வானம் வசப்படும்' என்ற நாவலில் காணலாம்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம் ஆகியவற்றின் கருவறையை போன்றே கங்கை வராக நதீஸ்வரர் கோயில் கருவறையும் அமைந்துள்ளது.

கருவறையில் உள்ள லிங்கம் 16 பட்டைகளைக் கொண்ட ஷோடச லிங்கமாகும். அபூர்வமான இந்த லிங்கத்தை அகத்தியரே பிரதிஷ்டை செய்துள்ளதாக தல புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புராணக் கால சிறப்பு வாய்ந்த கங்கை வராக நதீஸ்வரர் கோயிலில்தான் ஏப். 21-இல் மகா புஷ்கரணி தொடங்கியது. குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ந்ததை அடுத்து அந்த ராசிக்குரிய நதியான சங்கராபரணியில் மகா புஷ்கரணி பூஜைகள் நடைபெறுகின்றன.

மகா புஷ்கரணியில் பங்கேற்று சங்கராபரணியில் மூழ்கி கங்கை வராக நதீஸ்வரரை வழிபடுவோருக்கு சகல செல்வங்களும், வாழ்க்கையில் அமைதியும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் புனித நீராட வந்து செல்கின்றனர். இதனால், தினமும் திருவிழா என்ற நிலையை எட்டியிருக்கிறது திருக்காஞ்சிப் பகுதி. ஆற்றில் புனித நீராடுவதற்கு 5 படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தங்களது நட்சத்திர நாளில் புனித நீராட வருவோர்தான் அதிகம். பண்பாட்டு கலாசாரம், இலக்கியப் படைப்புகளால் போற்றப்படும் வகையிலேயே சங்கராபரணியின் திருக்காஞ்சி ஆதி புஷ்கரணி விழாவை அரசும் நடத்திவருகிறது.

கடைகள், மேள தாளங்கள், கலை நிகழ்ச்சிகள்,வாணவேடிக்கைகள், குழந்தைகளுக்கான பலூன்கள், பொம்மைகள், ராட்டிணங்கள் என பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன. அதை பார்ப்பதற்கே சுற்றுப்புறப்பகுதி மக்கள், சாதி, மதம், இனம், மொழிகளைக் கடந்து பொதுமக்கள் தினமும் வந்திருந்து புனித நீராடியும், ஆதி புஷ்கரணி மகா தீபாராதனையை கண்டு தரிசித்தும் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகியுள்ளது.

புதுச்சேரி திருக்காஞ்சியில் மாசி மக பிரமோத்ஸவமே பிரதான அடையாள விழாவாக நடத்தப்படுகிறது. அப்போது, 35 ஊர்க்கோயில்களின் உத்ஸவர்கள் சங்கராபரணி ஆற்றுக்கு வந்து தீர்த்தவாரியாடி அருள்பாலித்துச் செல்வர். அந்த வகையில் 12 ஆண்டுக்கு பிறகு நடைபெறும் மகா ஆதி புஷ்கரணியானது திருக்காஞ்சி பகுதியில் ஆன்மிக, கலாச்சார பண்பாட்டில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது என்கின்றனர் அப்பகுதி பெரியவர்கள்.

"காசிக்குப் போகமுடியாதவர்கள் ராமேசுவரம் செல்லலாம்' என்பார்கள். அதன்படியே கங்கையில் புனித நீராட முடியாதவர்கள் சங்கராபரணியை குறிப்பிடும் வகையில் தேசியத் திருவிழாவாக நடக்கிறது "ஆதிபுஷ்கரணி விழா' என்பதே அந்தப் பகுதியினரின் கருத்தாகும்.

படங்கள்- கி.ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.