நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

தானத்தில் சிறந்த அன்னதானம்!

இறைவன் அருளால் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், மலர் மாலை அணிவித்தும் மகிழ்ச்சி அடைகிறோம்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 10:45 am

கி.ஸ்ரீதரன்

இறைவன் அருளால் நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்தும், மலர் மாலை அணிவித்தும் மகிழ்ச்சி அடைகிறோம்.

அன்னாபிஷேகம்:

சிவனை "அபிஷேகப்பிரியர்' என்று அழைத்துப் போற்றுவார்கள். நாள்தோறும் பல முறை அவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். அவர் தனது சடையில் கங்கையைத் தாங்கி இருக்கிறார் என்பது ஐதீகம்.

மாதம்தோறும் வரும் பெளர்ணமி நாள் சிவனுக்கு உகந்த நாளாகும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பொருள்களால் அபிஷேகம் செய்ய வேண்டும் என "புட்ப விதி' என்ற நூல் கூறுகிறது. ஐப்பசி மாதத்தில் அன்னத்தினால் அபிஷேகம் செய்யவேண்டும் எனக் கூறுகிறது. அவ்வாறு அபிஷேகம் செய்வதால் அரச வாழ்வு கிடைக்கும் எனக் கூறுகிறது.

கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் நடைபெறும் அன்னாபிஷேகம் மிகச் சிறந்ததாக விளங்குகிறது. பச்சரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும் சுத்த அன்னத்தினால் இறைவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். இவ்வாறு செய்யப்படும் அன்னத்தின் ஒவ்வொரு பருக்கையும் சிவலிங்கம் போன்றே காட்சி அளிக்கிறது. மனிதன் மற்றும் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் தடை இல்லாது உணவு கிடைக்க வேண்டி இத்தகைய சிறப்பான அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

இறைவனுக்கு நடைபெறும் அந்த அபிஷேகத்தை தரிசிப்பவர்கள் இப்பிறப்பில் எல்லா நன்மைகளையும் அடைவதுடன் பிறவிப் பிணியில் இருந்து விடுபடுவார்கள் என்று "பேரூர்ப் புராணம்' கூறுகிறது. இறைவழிபாடு முடிந்தவுடன் அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை மக்களுக்கும் வழங்கி விடுவார்கள்.

சிதம்பரம் கோயில் அன்னம் பாலிக்கும் "தில்லைச் சிற்றம்பலம்' என சிறப்பித்துப் போற்றப்படுகிறது. இங்கு வழிபாட்டில் இருக்கும் ஸ்படிக லிங்கத்துக்கு நாள்தோறும் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இறைவனுக்கு நாம் பல்வேறு அமுதுகள் செய்து படைத்து வழிபடுகிறோம். ஆனால் இறைவனது அடியார்களுக்கு அன்னம் படைப்பது மேலும் சிறந்ததாகும்.

அன்னதான திட்டம்:

தமிழகத்தில் இன்று பல கோயில்களில் மதியம் அன்னதான திட்டத்தின்படி அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பண்டைக்காலத்தில் கோயில்களுக்குத் தலயாத்திரையாக வந்து வழிபட வருவோருக்கு உணவு அளிக்கப்பட்டது. இதனை "சட்டிச் சோறு" என கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கோயில்களில் அனைவருக்கும் அமுது படைப்பதற்காக நெற்களஞ்சியங்கள் இருந்திருக்கின்றன. திருவரங்கம், தஞ்சை அருகே பாபநாசம், திருஆனைக்கா, மதுரை அழகர் கோயில் போன்ற திருக்கோயில்களில் பண்டைய நெற்களஞ்சியங்களை இன்றும் காணலாம். இது கொட்டாரம் - ஸ்ரீபண்டாரம் (கருவூலம்) என அழைக்கப்பட்டது. திருவரங்கம் கோயிலில் சித்திரை, ஐப்பசி, மாசி, பங்குனி திருவிழாக்களின்போது நம்பெருமாள் இங்கு எழுந்தருளுகிறார்.
இங்குள்ள நெல் அளவை மண்டபத்தில் நெல் கொட்டி வைக்கப்படும். நம்பெருமாள் முன்பு காரளப்பான் என்பவர் "திருவரங்கம் பெரிய கோயில் என்று என நான்கு முறைத் திரும்பத் திரும்பக் கூறி நெல் அளப்பது வழக்கம். அதாவது பெருமாள் உலகத்து உயிர்களுக்கெல்லாம் உணவு தடையின்றி கிடைக்க அருளுவதாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது.

வள்ளலார் பெருமானின் அறப்பணி பசியென்னும் நெருப்பை அணைப்பதே மோட்ச வீட்டின் திறவுக்கோல்" என்பதை கொள்கையாகக் கொண்ட வள்ளலார் பெருமான் சத்திய தர்மச்சாலையை நிறுவி உயிர்களின் பசிப்பிணியைப் போக்கினார். எந்தவித வேறுபாடும் பார்க்காமல் உணவு அளிப்பதற்காக ஏற்படுத்திய சத்திய தர்மச்சாலையில் அணையா நெருப்புடன் பசிப்பிணி போக்கும் அறப்பணியை இன்றும் செய்து வருகிறது.

அமுது படைத்த அடியார்கள் நமது சமய வரலாற்றில் அடியவர்களுக்கும், இறைவனுக்கு அமுது படைத்து சிறப்புப் பெற்றவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம். ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் நாள்தோறும் பல வைணவ அடியார்களுக்கு அமுது படைத்து இறையருள் பெற்றதை அவர் வரலாறு மூலம் அறிகிறோம்.

சைவ நாயன்மார்களில் இளையான்குடி மாறநாயனார், அமர்நீதிநாயனார், அப்பூதி அடிகள், மூர்க்கநாயனார், கலிகம்பநாயனார், இடங்கழி நாயனார் போன்றவர்கள் இறைவனதுஅடியார்களுக்கு அன்னம் படைத்து இறையருள் பெற்றனர். ஒருமுறை பஞ்சம் வந்துதுன்பப்படும் பொழுது திருவீழிமிழலை கோயிலில் இறையருளால் பலிபீடத்தில் வைக்கப்பட்ட காசினை எடுத்து ஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அடியவர்களுக்கு அமுது படைத்ததாக தல வரலாறு குறிப்பிடுகிறது.

இறைவனுக்கே அமுது படைத்துப் புகழ் பெற்றவர்கள். கண்ணப்ப நாயனார், சிறுத்தொண்டர், அரிவாட்டாய நாயனார் ஆகியோர் இறைவனுக்கே அமுது படைத்து மங்காப் புகழ் பெற்று விளங்குகின்றனர்.

இறைவன் தனது அடியவர்கள் பசியால் துன்பப்படும்பொழுது தானே அவர்களுக்காக உணவு பெற்று வழங்கியதும் உண்டு.

திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி கோயிலுக்கு நாவுக்கரசர் வருகிறார். களைப்பு பசியால் மிகவும் துன்பப்படுகிறார். அவருக்காக சிவன் உணவு பெற்று அளித்தார். இறைவனின் எல்லையில்லா கருணைக்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்ச்சி விளங்குகிறது. சித்திரை மாதத்தில் கோயிலில் "அப்பர் கட்டமுது விழா' சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இதுபோன்று சுந்தரர் பெருமானுக்கும் சீர்காழிக்கு அருகில் உள்ள திருக்குருகாவூர் என்ற தலத்தில் அமுதும் நீரும் இறைவன் அளித்தார் என தல வரலாறு கூறுகிறது.

சென்னைக்கு அருகே உள்ள திருக்கச்சூர் கோயிலிலும் பசியால் வாடிய சுந்தரருக்கு இறைவன் வீடு வீடாக சென்று அமுது கேட்டுப் பெற்று அவரது பசியைப் போக்கினார். தனது பக்தனுக்கு ஏற்பட்ட துன்பத்தினைப் போக்கிய பெருமை உடையது திருக்கச்சூர் கோயிலாகும்.

இந்நிகழ்ச்சியை வள்ளலார் பெருமானும் போற்றுகின்றார். அவரது சிற்ப வடிவமும் இங்கு உள்ளது.

சுந்தரருக்கு இறைவன் அமுது பெற்று வழங்கியதால் இங்கே இறைவன் "விருந்திட்ட விருந்திட்ட ஈசன்', "இரந்திட்ட ஈசன்' எனச் சிறப்பாக அழைத்து போற்றப்படுகின்றார்.

ஐப்பசி பெளர்ணமி நவ. 8-இல் அனைத்து சிவாலயங்களிலும் நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.