டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சிங்கார சிட்லபாக்கம்!

குடியிருப்பு வாசிகள் நினைத்தால் குப்பை கூளங்களுமாய்க் கிடக்கும் ஏரியைக் கூடத் தண்ணீரைத் தேக்கும் நீர்நிலை ஆக்கலாம் . சுற்றுவட்டாரக் கிணறுகளில் நீர் மட்டம்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:48 am

சக்ரவர்த்தி


குடியிருப்பு வாசிகள் நினைத்தால் குப்பை கூளங்களுமாய்க் கிடக்கும் ஏரியைக் கூடத் தண்ணீரைத் தேக்கும் நீர்நிலை ஆக்கலாம் . சுற்றுவட்டாரக் கிணறுகளில் நீர் மட்டம் இருக்குமாறு செய்யலாம். வீட்டு கழிவுகளைப் பொறுப்புடன் அப்புறப்படுத்தி, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளலாம்... என்பதற்கு எடுத்துக்காட்டு "எழும் சிட்லப்
பாக்கம்' அமைப்பு.

சுனில் ஜெயராம், உதயா உத்தண்டி, எழில்தாசன் மூவரின் கூட்டு முயற்சி, இன்று ஓர் இயக்கமாக மாறி, சிட்லப்பாக்கத்தை ஓர் சிங்காரப்பாக்கமாக உருமாற்றியிருக்கிறது. இது எப்படி சாத்தியமானது என்பதை சுனில் ஜெயராம் விளக்குகிறார்:

""சிட்லபாக்கம், சென்னையிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு சுமார் அறுபதாயிரம் பேர் வசிக்கிறார்கள். 2013 வாக்கில் சிட்லபாக்கம் குப்பை கூளங்களால் சூழப்பட்டிருந்தது. இங்குள்ள 40 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியில் தண்ணீர் வற்றி குப்பைகள் கொட்டப்பட்டுப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. இந்த பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டால் சிங்கார சிட்லபாக்கமாகிவிடும் என்று நானும், நண்பர்கள் உதயா உத்தண்டி, எழில்தாசன் முடிவு எடுத்தோம். நாமாக முன்வந்து நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் சுற்றுப்புறம் இன்னும் மோசமாகும் என்பதால் உடனடியாக ஒத்த மனதுள்ளவர்களைத் தொடர்பு கொண்டோம். அதுபோல வீடுகளில் உருவாகும் வீட்டு கழிவுகளையும் உரிய முறையில் அப்புறப்படுத்துவதற்கும், காய்கறி கழிவுகளை உரமாக்கி மொட்டை மாடியில் தோட்டம் போடலாம் என்று முயற்சிகளில் இறங்கினோம். இப்படித்தான் "எழும் சிட்லபாக்கம்' அமைப்பு உருவானது. இன்று சுமார் 6000 பேர்கள் இணைந்துள்ள அமைப்பாக மாறியுள்ளது.

Story image

தொடக்கத்தில் நாங்களே தெருக்களை துப்புரவு செய்தோம். குப்பை கூளங்களை அகற்றினோம். பிறகு குடியிருப்பவர்களிடம் அவர்களின் வீட்டைச் சுற்றிலும் சுத்தமாக வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டோம். சுவரொட்டிகள் இருந்த சுவர்களை சுத்தம் செய்து ஓவியங்களை வரைந்து வைத்தோம். சிட்லபாக்க வாசிகள் எங்களது நடவடிக்கைகளை பார்த்து அவர்களும் எங்களுடன் சேர்ந்து கொண்டார்கள். எங்கள் அமைப்பை அறக்கட்டளையாகப் பதிவு செய்தோம். எங்களது நடவடிக்கைகளை ஊடகங்கள் வெளியிட்டு ஊக்கம் தந்தன. அவை எங்களுக்கு அரசு துறைகளில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தன.

2015-இல் சென்னை இதுவரை காணாத வெள்ளத்தால் சூழப்பட்டபோது, சிட்லபாக்கமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. அந்தப் பாதிப்பு, சுற்றுப்புறத்தைப் பேண வேண்டியதின் முக்கியத்துவத்தை உணர்த்தியது. சிட்லபாக்கம் ஏரியை யாருமே பல ஆண்டுகளாகக் கண்டுகொள்ளவில்லை. ஏரியில் தூர் வாரப்படவில்லை. ஏரிக்கு மழை நீர் வரும் தடம் தூர்ந்து போய் சேதமடைந்து மூடிக் கொண்டது. அதையும் பல ஆண்டுகளாகச் சரி செய்யவில்லை. நாளாடைவில் ஏரி குப்பைக் கிடங்காக மாறியிருந்தது. 2015 -இல் வெள்ளம் சிட்லபாக்கத்தைப் பாதிக்க ஏரி குப்பை மேடாகிப் போய் மழை நீர் தேங்கி நிற்க வழியில்லாமல் போனதுதான் காரணம் என்று சிட்லபாக்கம் மக்களுக்குப் புரிந்தது. சிட்லபாக்கம் ஏரியை சரி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினோம்.

மறுபுறம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏரியை சீர் செய்ய பொதுநல வழக்கு ஒன்றையும் தொடுத்தோம். வழக்கு உடனே முடியவில்லை. 40 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை சீர் செய்வது அத்தனை எளிதாக இல்லை. 2019-இல் 1200 தன்னார்வத் தொண்டர்கள் ஏரிக்குள் இறங்கி ஏரியில் கிடந்த குப்பைகளை அகற்றினோம். பொதுநல வழக்கு காரணமாகவும், எங்களது தூய்மைப் பணி காரணமாகவும் அரசு சிட்லபாக்கம் ஏரியைச் சீர் செய்ய 25 கோடி நிதி ஒதுக்கியது. ஏரியின் சீர் செய்யும் பணியை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ஏரியைச் சுற்றிலும் மரம் நடும் பணியை "நிழல்' என்ற அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. இன்னும் ஏரிக்கரைகளை சரிப்படுத்தும் வேலைகள் முடியவில்லை என்றாலும் ஏரி தூய்மையாகி ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதனால் இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. கிணறுகளில் தண்ணீர் கிடைக்கிறது.

சிட்லப்பாக்கத்தில் பசுமையைப் பரப்ப, சுமார் 1500 பல்வகை மரங்களை நட்டுள்ளோம். நட்டதுடன் நிற்காமல் மரங்களைப் பேணியும் வருகிறோம். தொடக்கத்தில் களத்தில் இறங்கி பணி செய்த நாங்கள், இப்போது ஒவ்வொரு வார முடிவிலும் சில மணி நேரம் சுற்றுப்புறத் தூய்மைப் பணிக்காக ஒதுக்குகிறோம். தொடர்ந்து மரக் கன்றுகளை நட்டு வருகிறோம்.

கரோனா காலத்தில் வீட்டுக் கழிவுகளை உரமாக்கும் பணிகளில் ஈடுபட்டோம். மொட்டை மாடியில் தோட்டம் என்பது வீட்டுக் கழிவுகளுக்குப் பொருத்தமான தீர்வு என்பதை சிட்லபாக்கம் மக்களுக்கு உணர்த்தினோம். வீட்டு சமையல் அறை கழிவுகளாக காய்கறி கழிவுகளை எப்படி கம்போஸ்ட் உரமாக்குவது குறித்தும் விளக்கினோம்.

இப்போது சுமார் 600 வீடுகளில் மொட்டைமாடி தோட்டம் உருவாகியுள்ளது. வீட்டுத் தோட்டம் போட்டிருப்பவர்கள், ஆர்வம் உள்ளவர்களுக்கு "வாட்ஸ் ஆப்' குழு ஒன்றினை உருவாக்கி, அவரவர்கள் வீட்டுத் தோட்டத்தைப் படம் பிடித்துப் பதிவு செய்யச் சொன்னோம். செடி விதைகள், தோட்ட பராமரிப்பு குறித்த அனுபவங்களைப் பரிமாறி, மாடித் தோட்டம் குறித்த சந்தேகங்களுக்கு விடை காணவும் செய்தோம். இப்போது கரோனா பாதிப்பு குறைந்திருப்பதால் அவ்வப்போது மாடித் தோட்டம் போட்டிருப்பவர்களைச் சந்திக்கச் செய்கிறோம்.

சிட்லப்பாக்கத்தில் "மாதிரி பள்ளி' ஒன்றை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். எங்களது நடவடிக்கைகளுக்கு தாம்பரம் மாநகராட்சி, உள்ளூர் பஞ்சாயத்து அரசு அலுவலர்கள் உதவியாக இருக்கிறார்கள்'' என்கிறார் சுனில் ஜெயராம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.