தமிழகத்தின் பெருமை காஞ்சிபுரம் தம்பதிகள்!
பட்டுச்சேலைகள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் பட்டு தான். காஞ்சிபுரத்தில் வசிக்கும் 4 தம்பதிகள், கோர்வை ரக பட்டுச் சேலைகளை தயாரித்து மத்திய அரசின் விருதுக்கும் தேர்வாகி இருக்கின்றனர்.


பட்டுச்சேலைகள் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது காஞ்சிபுரம் பட்டு தான். காஞ்சிபுரத்தில் வசிக்கும் 4 தம்பதிகள், கோர்வை ரக பட்டுச் சேலைகளை தயாரித்து மத்திய அரசின் விருதுக்கும் தேர்வாகி இருக்கின்றனர். கடந்த 2014 -ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் சிறந்த பட்டுச்சேலைவடிவமைப்பவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த தம்பதிகளான அ.ஹரி-கெளசல்யா, எஸ்.கணபதி-சரளா,கன்னிவேல்-ருக்மணி,ஹரி-காமாட்சி ஆகிய 4 தம்பதிகளும் தேசிய விருதுக்கு தேர்வாகி தமிழகத்துக்கு பெருமை சேர்த்திருக்கின்றனர். இத்தம்பதிகளுக்கு தாமிரபட்டய விருது, ஒரு விலையுயர்ந்த கைபேசி ரூபாய் 10 ஆயிரம் மதிப்புள்ள விலைமதிப்பு மிக்க காஷ்மீர் சால்வை மற்றும் ரொக்கப்பணமாக ரூபாய் 1.50 லட்சம் இவை அத்தனையும் வழங்கி கெளரவிக்க இருக்கிறது. இத்தம்பதிகளை அவரவர்களது இல்லங்களில் சந்தித்தோம்:
அ.ஹரி-கெளசல்யா

""நாங்கள் இருவரும் இணைந்து மயில் கழுத்துக் கலரில் பட்டுச்சேலை உருவாக்கினோம். சேலையின் உடல் பகுதி முழுவதும் மயிலும், சக்கரமும் இருக்கும் வகையிலும் சேலையின் முந்தானையை ரோஸ்கலரில் அமைத்து அதில் அன்னமும், யாழியும் இருக்கும் வகையில் வடிவமைத்தோம். இந்தியாவின் பாரம்பரிய முறையில் சேலை உருவாக்கப்பட்டிருந்ததால் மத்திய அரசின் விருதுக்கு தேர்வாகியது. விசைத்தறியில் செய்யக்கூடிய சேலையை விட கையால் செய்யக்கூடிய சேலை தான் நீடித்து உழைக்கும். எங்களது உழைப்பை சேலையாக தருவதால் நெசவாளர்களின் நலனுக்காக கைத்தறிச் சேலைகளைத்தான் பொதுமக்கள் வாங்க வேண்டும். '' என்றனர்.
எஸ்.கணபதி-சரளா

""தேசிய விருது பெற அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவுச் சங்கமே வழிகாட்டியது.அவர்கள் கேட்டுக் கொண்டபடி காடுகளுக்குள் மிருகங்கள் வாழ்வது போன்ற உடலமைப்புடைய கறுப்பு நிறச் சேலையை வடிவமைத்திருந்தோம். பாரம்பரிய சேலையாகவும்,இயற்கைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்ததாலும் விருதுக்கு தேர்வானது.
பொதுவாக விருதுக்கு தேர்வு செய்யப்படும் கோர்வை ரக பட்டுச் சேலைகளை தனிநபரால் செய்து விட முடியாது. குடும்பமாக சேர்ந்தால் தான் செய்ய முடியும். நாங்கள் 4 தலைமுறைகளாக நெசவு செய்கிறோம். நாட்டின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகவாவது இத்தொழிலை செய்ய இளைஞர் சமுதாயம் முன்வர வேண்டும்.
சிகரத்தை அடைய எனக்குத் தெரிந்தவரை சுலபமான வழிகள் எதுவுமே இல்லை'' என்றனர்.
அ.கன்னிவேல்-க.ருக்மணி

""ஏலக்காய் நிறக் கலர் சேலையில் ருத்ராட்சம் இருப்பது போன்றும்,சேலை முந்தானை கறுப்பு நிறத்தில் தயாரித்து அதில் யானை, குதிரை, சிங்கம், மயில், மாங்காய் உள்ளிட்டவைகள் அடங்கிய ஒரு வனப்பகுதியே இருக்கும் வகையில் வடிவமைத்திருந்தோம். இது போல வடிவமைக்க ஆலோசனை தந்தது திருவள்ளுவர் பட்டு கூட்டுறவு சங்கம்.அவர்களது வழிகாட்டுதலின்படி சேலையை உருவாக்கினோம். விருதுக்கும் தேர்வானோம்.
அனுபவசாலிகளாக இருந்தால் மட்டுமே கோர்வை ரக பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்ய முடியும். சேலைகளில் உடலையும்,முந்தானையையும் இணைக்கும் இடத்துக்கு பெட்னி என்று பெயர். இந்த "பெட்னி' யை விசைத்தறியில் செய்யப்பட்ட சேலையாக இருந்தாலும் கைத்தறியால் மட்டுமே செய்ய முடியும்.ஒரு சில தொழில் நுட்பங்களை கைத்தறி சேலைகளில் தான் செய்ய முடியும்.விசைத்தறியில் செய்ய முடியாது'' என்றனர்.
வி.ஹரி-காமாட்சி தம்பதி

""சேலையின் உடலை பாக்குகலரில் அமைத்து அதில் தாமரைப் பூக்கள் மலர்வது போலவும், சேலை முந்தானையில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பொய்கையாழ்வாரின் வாழ்க்கை வரலாறு முழுவதும் இருக்கும் வகையில் வடிவமைத்தோம். இது போன்று வித்தியாசமாக செய்தால் தான் விருது பெற முடியும் என காமாட்சி அம்மன் பட்டு கூட்டுறவுச் சங்க டிசைனர் நாராயணன் ஆலோசனை தந்தார். சேலை முந்தானையில் கோயில் கோபுரம், யானை, தெப்பக்குளம்,மீன், மயில், வாத்து இவை அத்தனையும் இருப்பது போன்று வடிவமைத்ததால் விருதுக்கும் எளிதில் தேர்வாகி விட்டது.
காஞ்சிபுரத்தில் மத்திய அரசின் தர நிர்ணய அலுவலகம் உள்ளது. அவர்களிடம் நாமே நேரில் சென்று ரூ.60 செலுத்தினால் பட்டு ஒரிஜினலா ,போலியா எனவும், மற்றும் ஜரிகை விவரங்கள் அனைத்தையும் ரசீதாக கொடுப்பார்கள்.
பட்டுநூலைப் போலவே இருக்கும் பாலியஸ்டர் இழையை வார்ப்பாகவும், தரம் குறைவான நூலையும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலியான பட்டுச் சேலைகள் விற்பனையாகின்றன என்பதையும் பெண்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். காஞ்சிபுரம் ஒரிஜினல் பட்டுச் சேலையை தொடும்போது மென்மையானதாக இருக்கும். போலியானதாக இருந்தால் சேலை கடினமானதாக இருக்கும். போலிகளை வாங்கி ஏமாற வேண்டாம்'' என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...