உயரத்தை எட்டுமா ஓ.டி.டி?
கரோனா காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் பொழுதுபோக்கு தளமாக மாறியிருப்பது (ஆன் தி டாப்) எனப்படும் ஓ.டி.டி தளம்.


கரோனா காலத்தில் உலகம் முழுவதும் உள்ள மக்களின் பொழுதுபோக்கு தளமாக மாறியிருப்பது (ஆன் தி டாப்) எனப்படும் ஓ.டி.டி தளம்.
வானொலியில் ஒலிச் சித்திரம் கேட்பதே அபூர்வமாக இருந்த காலம் மாறி தொலைக்காட்சி பெட்டிகள் வந்தன. அதிலும் 35 எம்.எம், திரைப்படம் 75எம்.எம் என திரைப்படத்தின் வளர்ச்சி மாறிமாறி ஒரு கட்டத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் வந்தது. இப்போது புது வரவான ஓ.டி.டி போன்ற தளங்கள் உலகத்தையே ஆட்டுவித்துக் கொண்டு இருக்கின்றன. இதனால் திரையரங்குகளின் நிலை இனி என்னவாகும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஏற்கெனவே திருட்டு விசிடி போன்ற விஷயங்களால் பாதிக்கப்பட்ட திரையுலகம் இன்று ஓ.டி.டி போன்ற தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் எந்த திசையில் பயணிப்பது என்று திக்குமுக்காடி வருகின்றன. ஓ.டி.டியின் சிறப்பம்சம் என்னவென்றால் டி.வி, செல்போன், லேப்டாப் போன்றவற்றில் நாம் விரும்பிய நேரத்தில் புதுப்படங்களை பார்க்கலாம். தியேட்டருக்கு சென்று ஆகும் செலவை விட இதில் மிகவும் குறைவு. எத்தனை பேர் வேண்டுமானாலும் ஒரே நேரத்தில் கண்டுகளிக்கலாம். மக்களிடம் கிடைத்த வரவேற்பையடுத்து நெட்பிளிக்ஸ், அமேசான், சோனி போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் ஓ.டி.டி தளத்தில் போட்டி போட்டுக் கொண்டு பயணிக்கின்றன.
அதிர்வலையை ஏற்படுத்துமா?
தமிழ் சினிமாவை பொருத்தவரை "விஸ்வரூபம்' படத்தை டைரக்ட் டூ ஹோம் என்கிற முறையில் வெளியிடப் போவதாக அறிவித்தார் கமல். அந்த அறிவிப்பு உச்சகட்ட பஞ்சாயத்து வரை போய் முடிவுக்கு வந்தது. கடைசியாக திரையரங்குகளிலேயே வெளியிட்டு லாபம் பார்த்தார் கமல். கரோனா பொது முடக்கத்துக்கு இடையே ஓ.டி.டி. வெளியீட்டு சர்ச்சையை ஜோதிகாவின் "பொன்
மகள் வந்தாள்' தொடங்கி வைத்தது. இதுவும் சின்ன சின்ன சிக்கல்களை சந்தித்து நேரடியாக ஓ.டி.டி. யில் வெளியானது. இதைத் தொடர்ந்து ஓ.டி.டி தளத்துக்கான காலம் தமிழ் சினிமாவில் கனிந்துவிட்டது. அடுத்ததாக சூர்யாவின் "சூரரைப் போற்று' படம் ஓ.டி.டி.யில் வெளியானது.
சினிமா, கேளிக்கை என்பதைத் தாண்டி இரண்டு விஷயங்களில் முக்கியப் பங்காற்றுகிறது. நம் மக்கள் வெளியே செல்வது என்றால் பெரும்பாலும் சினிமாவாகத்தான் இருக்கும். குடும்பத்தோடு, நண்பர்களோடு வெளியே செல்ல வேண்டும் என்றால், சுலபமான தேர்வாக சினிமா தியேட்டர்கள்தான் இருக்கின்றன. தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பது என்பது ஒரு அனுபவம். பிரம்மாண்டமான திரையரங்கில் நிறைய மக்களோடு அமர்ந்து பெரிய திரையில் பார்ப்பது ஒரு நல்ல அனுபவம். கைதட்டல், விசில் அடித்தல் என தனி மனித உணர்வுகளைத் தாண்டி ஒரு கூட்டத்தின் உணர்வோடு தன்னையும் இணைத்துக்கொண்டு படம் பார்ப்பது என்பது எப்போதுமே சிறப்பு.
இங்கே உருவான ஸ்டார்களின் பிம்பங்களைத்தான் ஓ.டி.டி யில் விற்க முடியும். சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஜோதிகாவின் "பொன் மகள் வந்தாள்' படத்தை நல்ல விலைக்கு அந்த நிறுவனம் வாங்கி இருக்கலாம்.
ஆனால், அந்தப் படம் தியேட்டரில் வெளியாகி இருந்தால், அதற்குக் கிடைக்கும் மதிப்பு அல்லது அந்தப் படத்தின் தாக்கம் ஓ.டி.டி மூலம் கிடைக்காது. ஓ.டி.டி நிறுவனங்கள், தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள ஆரம்ப கட்டத்தில் இதைப்போல அதிக விலை கொடுத்து வாங்கும். ஆனால் குறிப்பிட்ட லாப நஷ்டக் கணக்கைப் பார்த்து, அடுத்த முறை ஓ.டி.டி நிறுவனங்கள் குறைந்த விலைக்குப் படங்களை விலை பேசலாம். இதுவே விஜய், அஜித் போன்ற முன்னணி கமர்ஷியல் நடிகர்களின் படங்கள் ஓ.டி.டி யில் வெளியானால் வேண்டுமானால் பெரிய அதிர்வலையைக் கிளப்ப முடியும்.
தனிக் கலைஞர்கள்: ஓ.டி.டி யில் பார்ப்பதற்கு என்று சில வகைப்படங்கள் உள்ளன. அவை தனி. அந்த மாதிரி படங்களை தியேட்டருக்காக தயாரிக்கவே முடியாது. அதேபோல வீட்டில் அமர்ந்துகொண்டு ஓ.டி.டி தளத்தில்தான் சினிமா படங்களையும் பார்ப்போம் என்கிற ரசிகர்களும் இங்கே இருக்கிறார்கள். இவர்கள், ஓ.டி.டி யில் படம் வெளியாகவில்லை என்றால் பெரும்பாலும் சினிமா தியேட்டர்களுக்குப் போய் படம் பார்க்க மாட்டார்கள். வரும் காலங்களில் ஓ.டி.டி க்கு என்றே படம் எடுக்கும் தயாரிப்புக் கம்பெனிகள் அதிகம் ஆகலாம். ஓ.டி.டி நடிகர்கள் நடிகைகள், இயக்குநர்கள் என்று தனிக் கலைஞர்கள் உருவாகலாம்.
ஆனாலும் இவர்களின் கடைசி இலக்கு தியேட்டர் வெளியீட்டு சினிமாவாகவே இருக்கும். அனுராக் காஷ்யப் போன்றவர்கள் செய்வது அதைத்தான். ஆனால், இவர்களும் தொடர்ந்து ஓ.டி.டி யிலேயே இயங்கிக்கொண்டிருந்தால் மதிப்பு போய்விடும். மீண்டும் தியேட்டர் ரிலீஸ் சினிமாவுக்குத் திரும்பி, தன்னை நிரூபித்து விட்டுத்தான் மீண்டும் ஓ.டி.டி க்குத் திரும்பவேண்டியிருக்கும்.
சினிமா எப்போதுமே சினிமாதான்:
இன்னொன்று, இதுவரை ஓ.டி.டி யில் பெரும் வரவேற்பைப் பெற்றவை தொடர்கள்தான். வெப் சீரிஸ் என்கிறார்கள். சினிமா போல ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரை ஓடக்கூடியவை. இதில் எதுவும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. பழங்காலத்தில் தொடர்கதைகளைப் படிக்க ஒரு பெரும் கூட்டம் இருந்தது. அதைப்போன்ற ஒரு மனநிலைதான் இப்போது காட்சி வடிவத்தில் ஏற்பட்டிருக்கிறது. நாவல் என்றைக்கும் நாவல்தான். சினிமா என்றைக்கும் சினிமாதான் என்கிறார்கள் பார்வையாளர்கள்.
இது பற்றி எழுத்தாளரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான பா. ராஜநாராயணனிடம் கேட்டோம்.
""ஓ.டி.டி தளம் என்பது இனி வரும் காலங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். இது ஒரு தனி டிஸ்ட்ரிபூசன் நெட்வொர்க் . சினிமா மற்றும் மீடியாவின் அடுத்த கட்ட வளர்ச்சி தான் இதுபோன்ற தளங்கள். எப்படி சினிமாவுக்கு தனி உலகம் உள்ளதோ, டி.விக்கு தனி உலகம் உள்ளதோ, அதே போன்று ஓ.டி.டி தளத்திற்கென தனிஉலகம் உள்ளது. இனி வரும் காலங்களில் எப்போது வேண்டுமானாலும் பொது முடக்கம் என்பது நடைமுறைக்கு வரலாம். அதனால் மற்ற தளங்களை ஓ.டி.டி நிச்சயம் பின்னுக்கு தள்ளும். இதில் வெப்சீரியஸ்முக்கிய அங்கம் வகிக்கின்றன. ஆங்கிலம், ஹிந்தி என வெப்சீரியஸ் பார்ப்பதற்கு என தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இதில் யதார்த்தமான வாழ்க்கையை அழகாக பதிவு செய்கிறார்கள். இரண்டரை மணி நேரம் நாம் பார்க்கும் திரைப்படத்தை பல பாகங்களாக பிரித்து பார்த்த சுவாரஸ்யம் இதில் உள்ளது.
ஆனால் இதில், சில தவறான வார்த்தைகளும் சில படுக்கையறைக் காட்சிகளை வைப்பது சற்று பின்னடைவு தான். இதற்கு முறையான தணிக்கை வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை கரோனா தான் ஓ.டி.டி தளத்தின் தொடக்க மையமாக இருந்தது. இன்று இதற்கென தமிழகத்தில் தனி ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள்'' என்றார்
ஒவ்வொரு காலத்திலும் கலை தன் இருப்பை அழியாது பாதுகாத்து கொள்ளும். தற்போது திரையரங்கம் ஓ.டி.டி இரண்டிலும் சினிமாவை கொண்டாட வேண்டியகட்டாயத்தில் இருக்கிறான் தமிழ் சினிமா ரசிகன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...