/

ஜவ்வரிசி: சுவாரஸ்யமான வரலாறு!

கலப்படம் என்பது இந்தியாவில் எங்கும் எதிலும் உள்ளது. ஜவ்வரிசி மட்டும் விதிவிலக்கல்ல. கலப்படம் குறித்து அதிகபட்சம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுப்பார்கள்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:28 am

சுதந்திரன்

கலப்படம் என்பது இந்தியாவில் எங்கும் எதிலும் உள்ளது. ஜவ்வரிசி மட்டும் விதிவிலக்கல்ல. கலப்படம் குறித்து அதிகபட்சம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுப்பார்கள். ஆனால் தரமற்ற ஜவ்வரிசிக்காக சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வரை போயிருக்கிறார்கள். உயர்நீதிமன்றமும் கடைகளில் விற்கப்படும்ஜவ்வரிசியின் மூன்று மாதிரிகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்பிக்க உணவு பாதுகாப்புத் துறை ஆணையருக்கு ஆணையிட்டது. சமீபத்தில் ஜவ்வரிசி வழக்கு மீண்டும்விசாரணைக்கு வந்த போது, 3 மாதிரிகளை ஆய்வு செய்ததில், ஜவ்வரிசியின் இரு மாதிரிகள் தரமானதாக இருப்பதாகதமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 3-ஆவது மாதிரியும் நுகர்வோருக்குபாதிப்பை ஏற்படுத்தும் வகையில்இல்லை என கூறப்பட்டுள்ளது. அப்படி என்ன ஜவ்வரிசிக்கு திடீரென்று முக்கியத்துவம் வரக் காரணம் ?

ஜவ்வரிசி சுதந்திரம் அடைவதற்கு முன்னும் பின்னும் பல தடைகளைச் சந்தித்துள்ளது.

ஜவ்வரிசிக்கு ஒரு வரலாறே இருக்கிறது. மெட்ரோஸைலான் ஸாகு வகையைச் சேர்ந்த தெற்காசிய சதுப்பு நிலங்களில் விளைகிற ஒருவகைப் பனைமரத்தின் பதநீர் போன்ற ஊறலைக் காய்ச்சுவதால் கிடைக்கும் மாவுதான் úஸகோ. அந்த மாவைக் கோள வடிவில் அரிசி போல் சிறிய உருண்டைகளாக்கி இந்தியாவில் விற்பனை செய்தனர். ஜாவா தீவிலிருந்து இறக்குமதி ஆனதால் "ஜாவா அரிசி' பிறகு ஜவ்வரிசி என்று மாறியது. அங்கு ஜவ்வரிசையை "ஸாகோ' என்று அழைப்பார்கள்.

ஜவ்வரிசியை வைத்து நாம் பாயசம் உண்டாக்குவோம். மகாராஷ்டிராவில் ஜவ்வரிசியில் கிச்சடி செய்வார்கள்.மேற்கு வங்கத்தில் ஜவ்வரிசி ஊட்டச்சத்து உணவாகும். இப்படி இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும் ஜவ்வரிசியின் பிறப்பிடம் இந்தோனேசியா. இப்போது நாம் பயன்படுத்தும் ஜவ்வரிசி ஜாவாவில் இருந்து இறக்குமதி ஆவதல்ல. ஜாவா அரிசி போல இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உருவாக்கப்படுகிறது. தமிழகத்தின் ஜவ்வரிசிதான் ஜாவா அரிசியின் சந்தையை இந்தியாவில் பிடித்துள்ளது.

சென்ற நூற்றாண்டில், இறக்குமதியான ஜாவா அரிசி அகில இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும், எல்லா இறக்குமதி பொருள்களுக்கும் தடை போடப்பட்டது. அதனால் ஜாவா அரிசி இறக்குமதி நிறுத்தப்பட்டது. ஜாவா அரிசி போலவே, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியான "(அ)மரிக்கன் மாவு' என அப்போது அழைக்கப்பட்ட மைதா மாவுக்கும் தடை ஏற்பட்டது.

(அ)மரிக்கன் மாவு, ஜாவா அரிசிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை ஒரு திருப்பமாக சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார் பயன்படுத்திக் கொண்டார். மைதாவுக்கு மாற்றாக மரக்கிழங்கு மாவை விற்கலாம் என முடிவு செய்தார். கேரளத்திலிருந்து மரவள்ளிக் கிழங்குகளை வாங்கி, காய வைத்து பொடியாக்கி சலித்து மாவாக விற்றார். மாணிக்கத்தின் யுக்தி வியாபார ரீதியாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அறிந்த மும்பையைச் சேர்ந்த பொப்பட்லால் ஷாவுக்கு வியாபார மூளையில் பொறி உதித்தது.

பொப்பட்லால் மலேசியாவில் ஜாவா அரிசி வியாபாரம் செய்துவந்தவர். மலேசியாவை ஜப்பான் படைகள் கைப்பற்றியதால், வியாபாரம் செய்ய முடியாமல் இந்தியா திரும்பினார். இந்தியாவிற்கு பொப்பட்லால் வந்தாலும், ஜாவா அரிசியை இறக்குமதி செய்ய முடியாத நிலை. வியாபாரம் தொடங்க, "(அ)மரிக்கன் மா'வுக்கு மாணிக்கம் செட்டியார் ஒரு மாற்று உருவாக்கியதைப் போல முயற்சி செய்யலாம் என்ற முடிவுடன் மாணிக்கம் செட்டியாரைச் சந்திக்க சேலம் வந்தார்.

மாணிக்கம் தயாரித்த மரவள்ளிக் கிழங்கு மாவைத் துணியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் தெளித்து துணியின் ஒரு நுனியைக் கைகளால் பிடித்து மேலேயும் கீழேயும் ஏற்றி

இறக்கிக் கொண்டிருந்தார். துணியில் கிடந்த மாவு குருணையாக மாறியது. அந்தக் குருணைகளை பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து வறுத்தார். சூட்டில் குருணை பொரிந்து உருண்டை வடிவமாக மாறியது. அதுதான் இந்திய ஜவ்வரிசியின் ஜனனம். மாணிக்கமும், பொப்பட்லாலுடன் ஜவ்வரிசி வியாபாரத்தில் இணைந்தார்.

ஜவ்வரிசி வியாபாரம் 1943 முதல் இந்தியாவில் மீண்டும் பிரபலமானது. ஜவ்வரிசி உருவாக்கும் தொழில் சேலத்தை தலைநகரமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. மாணிக்கம் செட்டியாரைத் தலைவராகக் கொண்டு "úஸகோ' உற்பத்தியாளர் சங்கம் தொடங்கப்பட்டது. இவ்வாறாக மரவள்ளிக் கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி பெருகியது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு அமைந்த இந்திய அரசும் இந்த உள்ளூர் ஜவ்வரிசிக்கு ஆதரவாக அசல் ஜவ்வரிசி இறக்குமதிக்குத் தடைவிதித்தாலும் 1950 -களில் அசல் ஜாவா அரிசி. மேற்கு வங்கத்தில் பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்டது.

ஜாவா அரிசி உருண்டை வடிவில், ஆனால் சற்று மங்கலான நிறம் உடையது. ஜவ்வரிசி நல்ல பளீச் வெண்மையாக இருக்கும். ஆனால் சுவை இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும். ஜாவா அரிசி இறக்குமதி ஆவதால் விலை அதிகம். அதனால், மேற்கு வங்க வியாபாரிகள், சேலம் ஜவ்வரிசிக்கு தவிட்டு நிறம் பூசி விற்கத் தொடங்கினர். இதை அறிந்த ஜாவா அரிசி வியாபாரிகள் கல்கத்தா நகராட்சியிடம் புகார் செய்து தடை உத்தரவையும் பெற்றனர்.

"ஜவ்வரிசி உண்ணத் தகுந்ததல்ல' என்ற கொல்கத்தா நகராட்சியின் குற்றச்சாட்டை எதிர்த்து ஜவ்வரிசி உற்பத்தியாளர் சங்கம், பொது ஆய்வு நிறுவனத்தில் தங்கள் ஜவ்வரிசி மாதிரிகளைக் காட்டிச் சோதித்து, உண்ணத் தகுந்தது என்று சான்றிதழ் பெற... கொல்கத்தா நகராட்சி மரவள்ளிக் கிழங்கில் தயாராகும் ஜவ்வரிசியை "ஸாகோ' என்று அழைக்கக்கூடாது என்று அடம்பிடிக்க, சேலம் ஜவ்வரிசி தயாரிப்பவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். ராஜாஜி, டிடி. கிருஷ்ணமாச்சாரி, அன்றைய மேற்கு வங்க முதல்வர் பிதான் சந்திர ராய் தலையிட்டு சமாதானம் செய்து வழக்கை வாபஸ் பெறச் செய்து இரண்டு தரப்பினருக்கும் இசைவான முடிவை எடுக்கச் செய்தனர். அதனால் ஜவ்வரிசி, ஜாவா அரிசிக்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல என்று முடிவானதால், ஜவ்வரிசி தயாரிப்பு, விற்பனை எந்தவித தடங்கல்கள் இல்லாமல் ஜோராக நடக்க ஆரம்பித்தது.

இன்று இந்தியாவில் தயாரிக்கப்படும் மொத்த ஜவ்வரிசியில் 95 சதவிகிதம் தமிழகத்தில் அதுவும் சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள எட்டு மாவட்டங்களில் ஆலை மூலம் தயாராகிறது. கேரளத்திலிருந்து வாங்கப்படும் மரவள்ளிக் கிழங்குகளை சார்ந்திராமல், மரவள்ளிக் கிழங்குகளைத் தமிழகத்தில் பயிரிடுதல் அதிகரித்துள்ளது. விரைவில் ரேஷன் கடைகளிலும் ஜவ்வரிசி விற்பனைக்கு வருமாம்.

ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் தசைகளுக்கு நல்ல வலிமையைத் தருவதுடன் ரத்த சோகையைப் போக்கும். அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் ஆறுவதற்கும், உடல் எடை அதிகரிப்பதற்கும், பசியைத் தூண்டுவதற்கும் பயன்படுத்தலாம். ஜவ்வரிசியை வேக வைத்து குழந்தை உணவாகவும் பயன்படுத்தலாம்.

ரசனைக்கு ஏற்ப ஜவ்வரிசியில், வடை, உப்புமா, அல்வா என்று விதம் விதமாகப் பலகாரங்களைத் தயாரிக்கலாம்.

ஜவ்வரிசி தயாரிப்பில், விற்பனையில் பல மடங்கு லாபம் உள்ளதால் ஆண்டிற்கு 460 கோடி நடக்கும் வியாபாரத்தை 1000 கோடிகளாக உயர்த்த தமிழக ஜவ்வரிசி வியாபாரிகள் முனைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.