அஹிம்சை : அகிம்சா சில்க்
தமிழகத்தின் பாரம்பரிய உடைகளில் முக்கியமானது பட்டுச்சேலைகள்.வீட்டில் பீரோ நிறைய பலவகையான புடவைகள் வகை,வகையாக அடுக்கி இருந்தாலும் பெண்களுக்கு பட்டுச்சேலைகள் மீது தான் மோகம் அதிகமாக


தமிழகத்தின் பாரம்பரிய உடைகளில் முக்கியமானது பட்டுச்சேலைகள்.வீட்டில் பீரோ நிறைய பலவகையான புடவைகள் வகை,வகையாக அடுக்கி இருந்தாலும் பெண்களுக்கு பட்டுச்சேலைகள் மீது தான் மோகம் அதிகமாக இருக்கும். பட்டு என்றவுடன் நினைவுக்கு வருவதும் காஞ்சிபுரம் பட்டாகத்தான் இருக்கும். மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் கடந்த 2018- ஆம் ஆண்டுக்கான சிறந்த பட்டுச்சேலை வடிவமைத்தமைக்காக காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளரான பி.கிருஷ்ணமூர்த்தி என்பவரை தேர்வு செய்து அறிவித்திருக்கிறது.
நெசவாளர்களுக்காகவே வழங்கப்படும் மத்திய அரசின் மிக உயரிய விருதான சந்த் கபீர் விருதை சின்னக் காஞ்சிபுரம் மேட்டுப்பாளையம் தெருவைச் சேர்ந்த பி.கிருஷ்ணமூர்த்தி(61) பெறவிருக்கிறார். நெசவுத்தொழில் பல்வேறு சாதனைகள் புரிந்திருப்பதாக இவரைப் பற்றி கேள்விப்பட்டு அவரது இல்லத்தில் சந்தித்து பேசினோம்:
""எங்கள் குடும்பத்தினர் 3 தலைமுறைகளாக நெசவுத்தொழில் செய்து வருகின்றனர்.நான் 42 ஆண்டுகளாக நெசவு நெய்வதுடன் சேலைகளுக்கு தேவையான சிறந்த வடிவமைப்புகளையும் செய்து வருகிறேன்.எனக்கு இத்தொழிலில் ஏதேனும் சாதனைகள் புரிய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. விருது பெறுவதற்காகவே 3 வகையான சேலைகளை தயாரித்தேன்.கைத்தறி தொழில் நுட்பம் பயிலும் மாணவர்கள் பார்த்து வியக்கும்படி ஒரே பட்டுச்சேலையில் 114 வடிவங்களை வடிவமைத்தேன்.இது ஒரு வகை. இரண்டாவதாக காஞ்சிபுரம் பாரம்பரிய ரக கோர்வை ரக பட்டுச்சேலை ஒன்றையும் தயாரித்துள்ளேன். இச்சேலையில் காஞ்சிபுரம் கோயில்களில் உள்ள அற்புதமான சிற்பங்களை தேர்ந்தெடுத்து சேலைகளில் வடிவமைத்துள்ளேன்.மூன்றாவதாக பருத்திப்பட்டு ஒன்றையும் வடிவமைத்து இந்த 3 சேலைகளையும் தேசிய விருது வழங்கும் மத்திய அரசின் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைத்தேன்.காஞ்சிபரத்தில் உள்ள மத்திய அரசின் நெசவாளர் சேவை மையமும் எனது சேலைகளின் வடிவமைப்புகளைப் பார்த்து பாராட்டியதுடன் விருதுக்கும் பரிந்துரை செய்தது.
இந்த 3 சேலைகளையும் நான் செய்து முடிக்க மொத்தம் ரூ.3 லட்சம் வரை செலவானது.எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த சேலைகளை நான் தயாரித்திருப்பதால் இவை மூன்றையும் நான் விற்கப் போவதில்லை.நெசவாளர்களுக்காக மட்டுமே மத்திய அரசு வழங்கும் மிக உயரிய விருதான சந்த் கபீர் விருதை தமிழகத்தில் நான் ஒருவனே பெறுவதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கிறேன்.
நெசவுத்தொழிலில் வேறு ஏதேனும் சாதனைகள் புரிந்திருக்கிறீர்களா...?
பட்டுச்சேலைகளின் வடிவமைப்புகள் தொடர்பான நூலகம் ஒன்றும் என்னிடம் உள்ளது.இதில் மட்டும் 5015 வடிவங்கள் உள்ளன.
இவற்றை நெசவாளர்கள், கைத்தறி தொழில் நுட்பம் பயிலும் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட யாரும் இலவசமாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இது தவிர பட்டுப்புழுக்களை சாகடிக்காமல் புழுக் கூடுகளிலிருந்து நூலை மட்டும் எடுத்து அதில் பட்டுச்சேலையை உருவாக்கி இருக்கிறேன்.இதற்கு அ கிம்சா சில்க் என்று பெயர்.இந்தியாவில் இருக்கிற 20 வகையான விலங்குகளை இச்சேவையில் வடிவமைத்திருக்கிறேன்.
கருப்பு நிற அட்டையில் வெள்ளை நிற மையால் எழுதும் பேனாவில் கோயில்களில் உள்ள சிற்பங்களை வரையும் திறமையும் என்னிடம் உள்ளது.சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களையும் சேலையில் வடிவமைக்க ஏற்றவாறு கோட்டோவியங்களாக வரைந்து வைத்திருக்கிறேன்.கைத்தறி தொழில் நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.
இதற்கு முன்பு ஏதேனும் விருதுகள் பெற்ற அனுபவம் ?
சிறந்த நெசவாளருக்கான இவ்விருதை தமிழகத்தில் நான் ஒருவனே பெற்று தமிழகத்துக்கும், காஞ்சிபுரத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறேன். நான் தேர்வான விவரத்தை காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மைய உதவி இயக்குநர் ஆர்.சசிகலா அதற்கான சான்றிதழை வழங்கிய போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.இந்த விருதை பெறுவதாக இருந்தால் ஏற்கெனவே மத்திய அரசிடமிருந்து ஏதேனும் ஒரு விருது நெசவுக்காக பெற்றிருக்க வேண்டும்.55 வயது பூர்த்தியடைந்தவாரகவும் இருக்க வேண்டும். இந்த இரு தகுதிகளும் இருந்ததாலும் எனக்கு விருது கிடைத்திருக்கிறது.
கடந்த 2010 -ஆம் ஆண்டும் சிறந்த பட்டுச்சேலையை வடிவமைத்தமைக்காக தேசிய விருது கிடைத்தது. தாமிரப்பட்டயத்தில்தான் எழுதப்பட்ட விருதுடன் ரொக்கப்பரிசாக ரூ.ஒரு லட்சமும்,விலை மதிப்பு மிக்க காஷ்மீர் சால்வையும் பரிசாக பெற்றேன்.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மிக உயரிய விருதான சந்த்கபீர் விருதும் தாமிரப்பட்டயத்தில் வழங்கப்படும். அத்துடன் ரொக்கப்பரிசாக ரூ.3 லட்சமும், காஷ்மீர் சால்வையும் மத்திய அரசு வழங்கும்.விருதுகள் பெற விரும்பும் நெசவாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டால் தேவையான உதவிகளை இலவசமாக செய்ய தயாராக இருக்கிறேன். எந்த தொழிலையும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்தால் எதிலும் வெற்றி நிச்சயம்'' என்றார் பி.கிருஷ்ணமூர்த்தி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...