வெள்ளத்தை சமாளிக்கும் வீடு
மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையாத வீடுகள் இப்போது எல்லோரின் கனவாக மாறியுள்ளது.


மழை வெள்ளத்தால் பாதிப்பு அடையாத வீடுகள் இப்போது எல்லோரின் கனவாக மாறியுள்ளது. கேரளம் சங்கனாசேரிக்கு அருகில் வாழப்பள்ளி ஊரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாதவாறு மிதக்கும் வீட்டை வடிவமைத்திருக்கிறார்.
கோபாலகிருஷ்ணன் வெள்ளம் பாதிக்காத வீடு குறித்து விளக்குகிறார்:
""வீட்டைச் சுற்றி வெள்ளக்காடு ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் வடிவமைத்த வீடு வெள்ளத்தின் நீர் மட்டத்திற்கு ஏற்றவாறு தானே மேல் நோக்கி உயரும். அதனால் வீட்டினுள் வெள்ள நீர் நுழையாது. அதே நேரம், வெள்ளம் எத்தனை சக்தியாகப் பாய்ந்தாலும் மிதக்கும் வீட்டை ஒரு அங்குலம் கூட பக்கவாட்டில் நகர்த்தாது... இடம் பெயரச் செய்யாது. அதற்காக அஸ்திவாரத்தில் சில நுணுக்கங்களைச் செய்துள்ளேன். கேரளத்தில் கட்டடம் கட்ட பெரும்பாடு படவேண்டியதிருக்கிறது. கட்டடத்திற்குத் தேவையான மூலப் பொருள்களான செங்கல்கள், மண், ஜல்லி தட்டுப்பாடு உள்ளது. அதிக விலையும் தர வேண்டும். அதனால் வீட்டைக் கட்டுவதில் கொஞ்சம் மாற்றி யோசித்தேன். வீட்டைக் கட்டுகிறோம். வெள்ளத்தால் பாதிப்பு அடையாத வீடாகக் கட்டுவோம்' என்று ஆற அமர யோசித்து மிதக்கும் வீட்டை வடிவமைத்தேன்.
வீட்டின் நான்கு மூலைகளிலும் சக்தி வாய்ந்த பிஸ்டன்களை மண்ணில் பொருத்தியுள்ளேன். இந்தப் பிஸ்டன்களின் தண்டு மேலே கீழே இறங்கும் வண்ணம் அமைத்திருக்கிறேன். கிட்டத்தட்ட "ஸ்பிரிங்' மாதிரி வேலை செய்யும். இந்த நான்கு பிஸ்டன்களைத் துரு பிடிக்காத இரும்புக் குழாய்களால் இணைத்து அஸ்திவாரம் அமைக்கிறேன். இந்த அஸ்திவாரத்திற்குக் கீழ் எல்லாப் பக்கங்களும் வெல்டு செய்யப்ப்பட்ட நான்கு இரும்புப் பெட்டிகளை இணைக்கிறேன்.
இந்தப் பெட்டிகள் மழை அல்லது வெள்ள அபாயத்தின் போது மிதவையாக வேலை செய்யும். வெள்ள நீர் மட்டம் உயரும் போது இரும்பு மிதவை உயரும். மிதவை உயரும் போது பிஸ்டனின் தண்டுகளும் சீராக உயரும். பிஸ்டன் தண்டுகள் உயரும் போது அத்துடன் பொருத்தப்பட்டிருக்கும் வீட்டின் அஸ்திவாரமும் செங்குத்தாக மேல் நோக்கி உயரும்.
அஸ்திவாரத்தின் மேல் இருக்கும் வீடும் உயரும்.இந்த முறையால் வெள்ள நீர் வீட்டிற்குள் நுழையாது. வெள்ள நீர் மட்டம் குறையும் வேகத்திற்கு ஏற்ப மிதவை பூமியை நோக்கி செங்குத்தாக இறங்கும். வெள்ளம் முழுவதும் வடிந்து விடும்போது வீடு பழைய நிலைக்கு வந்து அமரும் . வீட்டின் அஸ்திவாரத்திற்கும் பூமிக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி எப்போதும் இருக்கும்.
பிஸ்டன்களையோ மிதவைகளையோ நாம் இயக்க வேண்டியதில்லை. வெள்ளத்தை அனுசரித்து வீடு தானாக மேலே போகும்.. மிதக்கும் வீட்டின் சுவர்கள் செங்கல்களாலோ, செயற்கை சிமெண்ட் கற்களாலோ கட்டவில்லை. இரும்பு சட்டத்தில் ஈரத்தினைச் சமாளித்து எதிர்கொள்ளக் கூடிய செயற்கைப் பலகைகளைப் பயன்படுத்தியிருக்கிறேன். கூரைக்கு அலுமினிய தகடுகளை வேய்ந்துள்ளேன். பிஸ்டன்களின் உதவியுடன் வீடு தரையிலிருந்து பத்து அடி வரை செங்குத்தாக உயரும். வெள்ளம் வந்தாலும் வீட்டின் அஸ்திவாரத்தைத் தொடாதவாறு ஒடிச் சென்றுவிடும். இன்னும் சக்தி வாய்ந்த பிஸ்டன்களைப் பயன்படுத்தினால் வீட்டை இருபது அடிவரை உயர்த்திக் கொள்ளலாம்.
மிதக்கும் வீட்டின் கட்டமைப்பில் சம்பிரதாய கற்கள், டைல்கள், சிமெண்ட், மரப் பொருள்கள் பயன்படுத்தவில்லை. கட்டமைப்பு முழுவதும் துருப் பிடிக்காத இரும்புக் குழாய்களை வெல்டிங் செய்து இணைக்கப்பட்டுள்ளன. தரை பலகையால் ஆனது. 1300 சதுர அடி கொண்ட இந்த வீட்டை மூன்று மாதத்தில் கட்டி முடித்தேன். ஒரு சதுர அடிக்கு 1700 ரூபாய் வரை செலவாகும். இந்த மிதக்கும் வீட்டை பாறைகள் , சதுப்பு , களிமண் , மணல் பாங்கான பகுதிகளிலும் கட்டிக் கொள்ளலாம். இந்த வீடு குறித்த காணொளி வைரல் ஆனதும் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் வந்து பார்த்துச் சென்றுள்ளார்கள்.
தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து கூடப் பார்வையாளர்கள் வந்துள்ளார்கள். அவர்களில் வீடு கட்டும் பொறியாளர்களும் இருந்தார்கள்'' என்கிறார் கோபாலகிருஷ்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...