இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நிஜ ஜேம்ஸ்பாண்ட்

சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன் என்று திரைப்படங்களில் அதி சூர கதாபாத்திரங்கள் தோன்றியதற்கு முன்பே, "ஜேம்ஸ்பாண்ட்  007' கதாபாத்திரம் உருவாகியிருந்தது.  

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:49 pm

கண்ணம்மா பாரதி


சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன் என்று திரைப்படங்களில் அதி சூர கதாபாத்திரங்கள் தோன்றியதற்கு முன்பே, "ஜேம்ஸ்பாண்ட் 007' கதாபாத்திரம் உருவாகியிருந்தது. "ஜேம்ஸ்பாண்ட் 007' கதாபாத்திரம் சாகச வீரனாகவும், பிரமிக்க வைக்கும் சகலகலா வல்லவனாகவும் அனைத்து நாட்டு ரசிகர்களை வளைத்துப் போட்டிருந்தது.

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் ஷான் கானரி. ஆறு அடிக்கும் மேற்பட்ட உயரம், ஜிம் உடல்கட்டுக்குச் சொந்தக்காரராக இருந்தார். உடலில் மட்டுமல்ல அவரது குரலிலும் ஆண்மை ஆட்சி செய்தது. ஷான் கானரியின் ஜேம்ஸ்பாண்ட் படங்களைப் பார்த்து தமிழிலும், கன்னடத்திலும் ஜேம்ஸ்பாண்ட் பாணி படங்கள் வெளிவந்து ஜெய்சங்கரை தமிழிலும், ராஜ்குமாரை கன்னடத்திலும் "உள்ளூர் ஜேம்ஸ்பாண்ட்' நடிகர்களாக நாமகரணம் செய்தது.

ஸ்காட்லாந்தின் எடின்பர்க்கில் 1930 ஆகஸ்ட் 25 -இல் பிறந்த ஷான் கானரி தன் 90-ஆம் வயதில் இறந்தார். ஷான் கானரியின் ஆரம்ப கால வாழ்க்கை வறுமை நிறைந்தது. தந்தை ஜோசப் கானரி லாரி டிரைவர். அம்மா ஈயூபாமியா மெக்லின் தூய்மைப் பணியாளர். வாழ்க்கை நடத்த மிகவும் சிரமப்பட்டதால்

கானரி தனது பள்ளிப் படிப்பை கூட நிறைவு செய்ய முடியாமல் தொழிலாளியாக மாறினார்.

""நாங்கள் ஏழைகள்தான். ஆனால் எந்த அளவுக்கு மோசமான ஏழைகள் என்பதை எனக்கு விவரிக்கத் தெரியவில்லை'' என்று ஷான் கானரி பின்னாளில் பதிவு செய்திருந்தார். 17-ஆவது வயதில் ராயல் கடற்படையில் சேர்ந்தாலும், வயிற்றில் அல்சர் வந்ததால் அந்தப் பணியில் தொடர இயலாமல் போனது. அது பின்னாளில் ஒரு மாபெரும் திருப்பத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டது என்று அப்போது ஷான் கானரிக்குத் தெரியவில்லை.

வயிற்றுப் பிழைப்பிற்காக பால் விநியோகம் செய்வது போன்ற, எடுபிடி வேலைகளைச் செய்து வந்தார். 1950-இல் "மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டி'யில் பங்கேற்று மூன்றாவதாகத் தேர்வு செய்யப்பட்டார். இவரது கட்டுடலைக் கண்டு, அப்போதே இளம் பெண்கள் கானரியைச் சுற்றிச் சுற்றி வந்தனர். மாடலாகத் தனது பயணத்தைக் தொடங்கிய ஷான் கானரி தொலைக்காட்சி தொடர்களில், திரைப்படங்களில் சின்னச் சின்னப் பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். ஷான் கானரியின் முதல் படமான"நோ ரோட் பேக்'கில் திக்குவாய் அடியாளாக நடித்திருந்தார். படத் தயாரிப்பாளர்களான ஆல்பர்ட் புரோக்கோலி, ஹாரி சால்ட்ஸ்மேன் நடிகர் கேரி கிராண்ட்டை மாற்றி விட்டு கானரியை ஜேம்ஸ்பாண்டாக நடிக்க ஒப்பந்தம் செய்தனர்.

"ஷான் கானரி நடந்து போகும் ஸ்டைல் அவர் ஜேம்ஸ்பாண்டாக நடிக்கப் பிறந்தவர் என்பதை உறுதி செய்தது. அதனால் ஒருவரை நடிகராக அறிமுகம் செய்வதற்கு முன்பாக எடுக்கப்படும் ஸ்கிரீன் டெஸ்ட் கூட கானரியை வைத்து நடத்தவில்லை. ""கானரியின் தோற்றமே எங்களுக்கு நம்பிக்கை அளித்தது. அந்த நம்பிக்கை வீண் போகவில்லை'' என்றார் தயாரிப்பாளர் ஆல்பர்ட் புரோக்கோலி.

Story image

"டாக்டர். நோ' படத்தின் மூலம் ஜேம்ஸ்பாண்டாக ஷான் கானரி அறிமுகமானார். படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 20 ஆண்டுகளில் "ஃபிரம் ரஷ்யன் வித் லவ்', "கோல்டு ஃபிங்கர்', "தண்டர் பால்'. "யூ ஒன்லி லிவ் டுவைஸ்', "டைமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர்', "நெவர் சே நெவர் அகேன்' என ஏழு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்து உலகின் உச்ச நட்சத்திரமாக ஷான் கானரி ஜொலித்தார். 1988-இல் வெளியான "தி அன்டச்சபிள்ஸ்' படத்தில் ஐரிஷ் போலீஸ் அதிகாரியாக நடித்ததற்காகத் துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது ஷான் கானரிக்கு வழங்கப்பட்டது. 3 கோல்டன் குளோப் விருதுகள், பாஃப்தா விருதுகளும் கானரிக்கு வழங்கப்பட்டுள்ளன. கவர்ச்சியான மனிதர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரது வயது 59.

1962-இல் நடிகை டயானா கிளிண்டோவை காதலித்துத் திருமணம் செய்த ஷான் கானரி, டயானாவை 1973 -இல் விவாகரத்துச் செய்துவிட்டார். 1975- இல் மேக்லைன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஷான் கானரிக்கு ஒரு மகன். பெயர் ஜாசன் கானரி. நெய்ல் கானரி, கானரியின் இளைய சகோதரர். அவரும் பல படங்களில் நடித்துள்ளார். தம்பியுடன் கானரி அலாதிப் பிரியம் கொண்டிருந்தார்.

நடிப்பதில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டாலே நடிகர், நடிகைகளை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள். 1971 -இல் ஜேம்ஸ்பாண்டாக நடிப்பதை நிறுத்திவிட்டு கிட்டத்தட்ட சந்தடியில்லாமல் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருந்த ஷான் கானரியைத் தேடிப்பிடித்து 1983-இல் "நெவர் சே நெவர் அகேன்' என்ற படத்தில் நடிக்க வைத்தனர். படமும் மகத்தான வெற்றிப் பெற்றது. ஜேம்ஸ்பாண்ட் அல்லாத இதர படங்களிலும் நடித்து முத்திரை பதித்து வந்தவர் ஷான் கானரி. 1990-இல் ரஷ்யாவில் இருந்து தப்பி வந்த நீர்மூழ்கிக் கப்பலின் கேப்டனாக நடித்த. "தி ஹன்ட் பார் ரெட் அக்டோபர்' படம் சர்வதேச அளவில் 2000 கோடி டாலர்களை வசூல் செய்தது. 2003 -இல் தனது 80 -ஆவது வயதில் நடிப்பிற்குப் பிரியா விடை அளித்தார்.

கானரி தம்பதியர் பகாமாஸ் தீவில் நிரந்தரமாகத் தங்கினர். 2008-இல் கானரி தனது சுயசரிதையை "பீயிங் எ ஸ்காட்' என்ற பெயரில் வெளியிட்டார். எத்தனையோ நடிகர்கள் ஜேம்ஸ்பாண்டாக நடித்திருந்தாலும் "ஜேம்ஸ்பாண்ட்' என்றதுமே நினைவுக்கு வருவது ஷான் கானரிதான்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.