எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கரோனாவினால் மலர்ந்த கரிசன ஓவியங்கள்

கரோனா தீநுண்மி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கரிசனத்தோடு சாலைகளில் வரையப்படும் ஓவியங்கள் புதிய தரிசனத்தை ஏற்படுத்தியுள்ளன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:35 pm

கே.வாசுதேவன்

கரோனா தீநுண்மி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கரிசனத்தோடு சாலைகளில் வரையப்படும் ஓவியங்கள் புதிய தரிசனத்தை ஏற்படுத்தியுள்ளன. மனித சமூகம் தாங்கள் கடந்து வந்த பாதையை நீண்ட காலத்துக்கு பின்னர் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
சொல்ல மறந்த கதைகளையும், தங்களது நினைவுகளையும் அசை போட்டபடி பேசும்மனிதர்களைக் காண முடிகிறது. நம்மிடம் இருந்து சிறிது, சிறிதாக விலகிச் சென்று கொண்டிருந்த சில கலைகளும், பாரம்பரிய விளையாட்டுகளும் இப்போது உயிர் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் ஓவியக்கலை மறுமலர்ச்சி பெற்று, வெகுஜன மக்களையும் நீண்டநாள்களுக்குப் பின்னர் பேச வைத்துள்ளது.


கரோனாவினால் புத்துயிர்: சுவரொட்டி, பிளக்ஸ் பேனர் வருகைக்குப் பின்னர் வெகுஜன மக்களிடமிருந்து மெல்ல விடைபெற்றுக் கொண்டிருந்த ஓவியக்கலை, கரோனாவால் புத்துயிர் பெற்றுள்ளது. ஏனெனில் ஓவியக்கலையை பிரதான தொழிலாகச் செய்து வந்த ஓவியர்கள்கூட, தங்களது வாழ்வாதாரத்துக்காக வேறு தொழிலைத் தேடும் கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர்.

தங்களுக்குச் சரியான வாய்ப்புக் கிடைக்காமலும் அங்கீகாரம் கிடைக்காமலும், இருந்த ஓவியர்களுக்கு கரோனா தீநுண்மி மூலம் சாலைகளில் பிரம்மாண்ட ஓவியங்களை வரைவதற்குரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இதற்கு முன்பு வரை சாலைகளில் இப்படிப்பட்ட ஓவியங்கள் வரையப்பட்டதில்லை.

திருவிழாக்கள், புத்தகக் கண்காட்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் அவ்வப்போது இப்படிப்பட்ட ஓவியங்கள் சிறிய அளவில் வரையப்பட்டு ஓரிரு நாள்களிலேயே அழிக்கப்பட்டு விடும். ஆனால், மாநிலம் முழுவதும் ஒன்றுசேர சாலை சந்திப்புகள், சிக்னல்கள், பிரதான சாலைகள், சந்தைகள் ஆகியவற்றை தேடித் தேடி பிரம்மாண்டமான ஓவியங்கள் வரையப்படுவது தமிழகத்தில் இதுவே முதல்முறையாகும்.

ஓவியர்களின் ஒப்பற்ற உழைப்பு: வாகன நெரிசலும், மக்கள் நெருக்கடியும் மிகுந்த நமது சாலைகள், ஒரு காலத்திலும் போக்குவரத்து இல்லாமல் இருந்ததில்லை. ஆனால், கரோனாவினால் இப்போது சாலைகள், வாகன நடமாட்டமின்றி உள்ளன. இதை ஓவியர்கள், தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக உணர்ந்து, சமூகப் பொறுப்புடன் கரோனா ஓவியங்களை தீநுண்மி வரைந்து கொடுக்கின்றனர்.

சென்னையில் சாலைகளில் சுமார் 500 இடங்களில் பிரம்மாண்டமாக கரோனா தீநுண்மி நோய்த்தொற்று தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஓவியங்களை வரைவதற்கு ஓவியர்கள் தங்களது ஒப்பற்ற உழைப்பை இலவசமாக வழங்கியுள்ளனர். அதேபோல, காவல் துறையினர் நன்கொடையாளர்கள் மூலம் பெயிண்ட் உள்ளிட்ட ஓவியத்துக்கு உரிய செலவுகளைச் செய்துள்ளனர்.

ஒரு மாதமாக வரையப்படுகிறது: கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை தடுக்கக் கோரி சமூக ஊடகங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பிரசாரங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. ஆனால், அந்த வகை பிரசாரங்களை காட்டிலும், கரோனா தீநுண்மி ஓவியங்கள் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சாலைகளின் நடுவே பிரம்மாண்டமாக வரையப்பட்டிருக்கும் இந்த ஓவியங்களைப் பார்க்கும் மக்களின் மனதில் சில நிமிஷங்களாவது கரோனா தீநுண்மி குறித்த அச்சுறுத்தலை ஏற்படுத்தவே செய்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால், தமிழகத்தில் கரோனா தீநுண்மி ஓவியங்கள் சாலைகளில் தொடர்ச்சியாக ஒரு மாதமாக வரையப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, கரோனா ஓவியங்கள் மூலம் சாதாரண மக்களும் ஓவியர்களின் திறமையும், அவர்களது கலைஞானத்தையும் நீண்ட நாள்களுக்குப் பின்னர் பேசத் தொடங்கியுள்ளனர்.

இது தொடர்பாக பிரபல ஓவியர் பொன்.

வள்ளிநாயகம்: ""சாலைகளில் கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு வண்ணங்களை கோடுகளாகவே பார்த்து வந்தோம். அந்த வண்ணங்களை சட்டத்தின் கண்ணோட்டத்திலும், கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும் நோக்குடனும் பார்த்தோம். ஆனால், இப்போது சாலைகளில் கண்களை கவர்ந்திழுக்கும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பல வண்ணங்களில் கலைநுட்பத்தோடு வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் நமக்குப் புதிய தரிசனங்களைத் தருகின்றன. ஓவியர்களின் சமூக கரிசனமே கரோனா ஓவியங்களாக சாலைகளில் இப்போது மலர்ந்துள்ளன. இந்த ஓவியங்களின் பின்னால் ஓவியர்களின் சமூக அக்கறை, சமூகக் கவலை, சமூகப் பொறுப்பு, சமூகப் பங்களிப்பு, சமூக விழிப்புணர்வு ஆகியவை உள்ளன.

சுவர் ஓவியங்களே இப்போது சாலை ஓவியங்களாக உருப்பெற்றுள்ளன. தமிழகத்தில் வீடுகளின் முன்பும், கோயில்களின் முன்பும் பெரிய கோலங்களை வரைவோம்.அதைப் போன்றே இந்த ஓவியங்கள் வரையப்படுகின்றன. இதுவரை இப்படியொரு வாய்ப்பும், வசதியும், சூழலும், அங்கீகாரமும் கிடைக்காமலிருந்த ஓவியர்கள், கரோனா ஓவியங்கள் மூலமாக சமூகத்தில் தங்களது இடத்தை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளனர்.''

துபையைச் சேர்ந்த ஓவியர் ராஜகிருஷ்ணன்:

""தமிழகத்தில் வரையப்படும் கரோனா தீநுண்மி ஓவியங்களை காணும்போது ஓவிய நகரங்களான பிரான்ஸ் நாட்டின் லியோன், துபை நாட்டின் ஜூமைரா ஆகிய இடங்களில் வரையப்பட்டிருக்கும் சுவரோவியங்களே நினைவுக்கு வருகின்றன. இந்த வகை ஓவியங்கள், கரோனா தீநுண்மி காலத்துக்குப் பின்னரும் நமது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.

ஓர் ஓவியம், ஆயிரம் சொற்களுக்கு இணையானது எனக் கூறப்படுவது உண்டு. ஆனால் கரோனா ஓவியங்கள் அதையும் தாண்டியுள்ளது. கரோனா குறித்த விழிப்புணர்வை, இந்த ஓவியங்கள் மக்கள் மனதில் ஆழமாக விதைக்கிறது'' என்றார் அவர்.
நோய்த்தொற்று பரவி வரும் காலத்திலும், ஊரடங்கினால் வாழ்வாதாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையிலும் தங்களது உழைப்பை சமூகத்துக்காக ஓவியர்கள் வழங்கி வருவது மிகுந்த கரிசனத்துக்குரியதே. ஆனால் ஓவியத்தையே நம்பி வாழ்க்கையை நடத்தி வரும் ஓவியர்களைப் பற்றி நமது அரசும், இந்தச் சமூகமும் கரிசனம் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் ஒரு லட்சம் ஓவியர்கள்

தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓவியத் தொழிலுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அப்போது இத்தொழிலில் சுமார் 3 லட்சம் பேர் வரை இருந்தனர். ஆனால், அதன் பின்னர் ஓவியத் தொழில் படிப்படியாக பின்னடைவைச் சந்தித்தது.

இதனால் இந்த தொழிலில் இருந்தவர்கள் வேறு தொழிலை நோக்கித் நகரத் தொடங்கினர்.இப்போது இத்தொழிலுக்கு புதிதாக வருகிறவர்களும் மிகவும் குறைவு.

மாநிலத்தில் இப்போதைக்கு ஒரு லட்சம் ஓவியர்கள் இருக்கின்றனர். சென்னையில் மட்டும் இரண்டாயிரம் ஓவியர்கள் இருப்பதாக தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர். 2000-ஆம் ஆண்டுக்கு பின்னர் வந்த பிளக்ஸ் பேனரால், ஓவியர்களின் வாழ்க்கை அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. இதனால் ஓவியர்களுக்கு இருந்த அனைத்து வாய்ப்புகளும் தட்டிப் பறிக்கப்பட்டுவிட்டன.

இப்போது இருக்கும் ஓவியர்களில் பெரும்பாலானோர், தங்களது தொழில் மேல் இருக்கும் காதலாலும், மோகத்தினாலும் ஓவியத்தைக் கைவிட முடியாமல் உள்ளனர். எஞ்சியவர்கள் வாய்ப்பு கிடைத்தால் ஓவியம் வரைவது இல்லையென்றால் வேறு தொழிலுக்குச் செல்வது என மாறிவிட்டனர். இவர்களில் பெரும்பாலும் பகுதி நேரமாக ஓவியத் தொழிலைச் செய்கின்றனர்.
"ஓவியர்கள் நல வாரியம் மூலம் அரசு ஆயிரம் ரூபாய் நிதியையும் நிவாரணப் பொருள்களையும் ஓவியர்களுக்கு கரோனா தீநுண்மி நிவாரணமாக வழங்குகிறது. நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படுகிறது.

ஆனால், நல வாரியத்தில் பதிவு செய்யாமல் இருக்கும் ஓவியர்களுக்கும் இந்த நிவாரண உதவியை அரசு வழங்க வேண்டும்' என தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் எம்.அன்பரசு, இணைச் செயலர் பாப்புலர் கே.சேகர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

ஓவியத்துக்கான செலவு

தமிழகத்தில் முதல் முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கரோனா ஓவியம் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் வரையப்பட்டது. இதன் பின்னர் சேலத்திலும், அதைத் தொடர்ந்து சென்னையிலும் கரோனா தீநுண்மி ஓவியங்கள் வரையப்பட்டன. இதையடுத்து, மாநிலம் முழுவதும் கரோனா தீநுண்மி ஓவியங்கள் வரையப்படுகின்றன.

ஒரு கரோனா ஓவியம் வரைவதற்கு பெயிண்ட், ஓவியர்களின் ஊதியம் உள்பட ரூ.15,000 செலவாகும். ஆனால், ஓவியர்கள் ஊதியம் பெறுவது கிடையாது.

ஒரு கரோனா தீநுண்மி ஓவியம் வரைவதற்கு சுமார் 15 ஓவியர்கள் தங்களது உழைப்பை வழங்குகின்றனர். இவர்கள் சுமார் 8 மணி நேரத்தில் ஓர் ஓவியத்தை வரைகின்றனர். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டில் இருந்து மூன்று இடங்களில் கரோனா தீநுண்மி ஓவியங்களை ஓவியர்கள் வரைகின்றனர்.

இப்படிப்பட்ட ஓவியங்களை வரைவதற்கு சாதாரண நாள்களில் ரூ.5,000-த்திலிருந்து ரூ.6,000 வரை ஊதியமாக பெறுவோம் என ஓவியர்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.