டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

எளிமையாக படம் எடுப்பது கஷ்டம்!

"பெண் குயின்'... முதல் படத்திலேயே அத்தனை நேர்த்தியான உழைப்பைத் தந்திருக்கிறார் கார்த்திக் பழனி.படம் நெடுகிலும் படம் பிடித்திருந்த அழகு தனித்துவம் மிக்கது. கார்த்திக் பழனிக்கு எக்கச்சக்க பெயர் சேர்த்தி

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:53 pm

ஜி. அசோக்

"பெண் குயின்'... முதல் படத்திலேயே அத்தனை நேர்த்தியான உழைப்பைத் தந்திருக்கிறார் கார்த்திக் பழனி.படம் நெடுகிலும் படம் பிடித்திருந்த அழகு தனித்துவம் மிக்கது. கார்த்திக் பழனிக்கு எக்கச்சக்க பெயர் சேர்த்திருக்கிறது. தணியாத தாகம், தளராத வேகம் என தனக்கான சினிமாவைக் கற்று உயரம் தொட்டிருக்கிறார். அதிராத குரலில் பேசினார் கார்த்திக் பழனி.

""கொஞ்சமும் சலித்து நின்னுடக்கூடாது...' என்று சொல்லிக் கொண்டே  இருப்பேன். சொன்னது மாதிரியே துடியாக இருந்தார் பெண்குயின் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். நான் நினைத்ததை அவரும், அவர் நினைத்ததை நானும் சாத்தியப்படுத்தினோம்.  கனவுகள்தான் வாழ்க்கையை அழகாக்கும். கனவுகள் நிறைவேறுகிற நிமிடங்கள் நம்மையே அழகாக்கும். முதல் படமே... ஓடிடி தளம் என்கிற ஒரு குறையைத் தவிர, மற்றவை எல்லாம் நலமே.  மக்களின் வசீகர வார்த்தைகளைக் கேட்கும்போது சந்தோஷம் மேலிடுகிறது. இது சமயம் ஒளிப்பதிவில் இருந்த ஈடுபாட்டைப் பார்த்து எனக்கு வாய்ப்பளித்த ஆசான் திரு சாருக்கு கோடி நன்றிகள். 

எப்போதும் நல்ல சினிமாக்களின் ரசிகன். பார்த்தப் படங்களை மறுநாள் பள்ளி வளாகங்களில் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதோடு சரி. மற்றபடி சினிமா உள்ளுக்குள் ஏறாது.  அப்பாவுக்கும் சினிமாவுக்கும் சின்ன தொடர்பு. அவர் கவிதாலயா, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்களில் கம்பெனி குக்காக இருந்தவர். பின், அம்பாசமுத்திரத்தில் இருந்து படிப்புக்காக சென்னைக்கு பயணம். 

பச்சையப்பன் கல்லூரியில் பி.எஸ்.சி. முடித்து விட்டு, டிஎப்டி கல்லூரியில் கேமிரா தொழில்நுட்பத்தில் சேர்ந்தேன். இதுதான் என் படிப்பறிவு.

அந்த நேரங்களில் நான் பார்த்த "ஹேராம்' போன்ற படங்கள் உள்ளுக்குள் சினிமா ஒட்டத்தை கொண்டு வந்து போட்டன. கதையாகவும், காட்சியாகவும் அந்த கதைகள் உள்ளுக்குள் விரிந்துக் கொண்டே  இருந்தன.  அதன் பின் திரு சாரிடம் பல ஆண்டு கால பயணம். இப்போது நீங்கள் வந்து பேசுகிற அளவுக்கு உயர்ந்திருக்கிறேன்.

திரு சாரிடம்  பல படங்கள் உதவியாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என் பேறு. ஒவ்வொரு படத்திலும் ஒளியின் வித்தியாச அடுக்குகளை நேரில் இருந்து பார்க்கிற வாய்ப்பு கிடைத்தது.  அந்தப் படத்திலிருந்து எளிமை, அதே நேரத்தில் பிரம்மாண்டம் என்ற பல கோணங்களில் படம் செய்வது எப்படி என்று நகர்ந்து வந்திருக்கிறேன். வாழ்க்கையை எளிமையாக வாழ்வதும், ஒரு படத்தை எளிமையாக எடுப்பதும் கஷ்டம். உணரக்கூடிய, புரியக்கூடிய, எல்லோருக்கும் புத்துயிர்ப்பை தரக்கூடியதுதான் சினிமா. 

திரைக்கதைதான் முதல் சுவாரஸ்யம். அதை காட்சிகளாக மாற்றுவதில் தொடங்குகிறது அடுத்த சுவாரஸ்யம். ஒரு படத்தின் உருவாக்கத்தில் இருக்கும் சந்தோஷமான பகுதியும் அதுதான்.  ஒரு காட்சியில் நாம் பயன்படுத்தும் ஒளியின் அளவு கொஞ்சம் கூடினாலும் காட்சியின் தன்மை மாறி விடுகிறது. ஒரு காட்சியை எடுப்பதற்கு, நிறைய வழிகள் இருக்கலாம். ஆனால் அது ஒவ்வொன்றையும் முயற்சித்துக் கொண்டிருக்க முடியாது. சரியானதைத் தேர்ந்தெடுப்பதில்  சுவாரஸ்யமும் இல்லை. அந்தக் காட்சிக்கு  சிறந்த வழி எது என்பதை பார்த்தவுடன் கண்டுபிடிக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. அது எளிதில் கைக்கு சிக்காது. 

ஒவ்வொரு ஒளிப்பதிவாளருக்கும் ஓர் இயல்பு, ஒரு தெளிவு உண்டு. ஒரு ஒளிப்பதிவாளருக்கு அழகு, இயக்குநரோடு ஒன்றி போய் கதை செய்வது மட்டும்தான்.  அதைப் புரிந்துக் கொண்டாலே நல்ல ரசனையும், தீவிரமும் வெளிவரும்.

உங்க மனசுக்குள்ளே ஓடுகிற படத்தை ஒவ்வொரு மனசுக்குள்ளேயும் ஓட்டுகிற வித்தை பிடிபடுற வரைக்கும் மற்றவையெல்லாம் சும்மாதான். கார்த்திக் ஈஸ்வருக்கு அந்த வித்தை கைவந்தது. சமையலில் கைப்பக்குவம் போல சினிமாவில் இந்த கலைப்பக்குவம் தெரிய வேண்டும். ஒரு நல்ல நம்பிக்கையைக் கொடுத்தது "பெண்குயின்'. என் அடுத்தடுத்த நகர்வுகளுக்கான முதல் படி இது. கை கொடுத்தவர்கள், கண்ணீர் துடைத்தவர்கள், நேச கரம் நீட்டியவர்கள், தோழர்கள், பாதித்தவர்கள் என எல்லோருக்கும் என் நன்றிகள்'' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.