இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

காகித விதைச் சுருள் நடவு முறை

வேளாண்மை  ஒரு கூட்டு முயற்சி. விதைக்க, களை  எடுக்க  அறுவடை செய்ய பலரது  உழைப்பு தேவை. இவர்களுக்கு தினக் கூலி தரப்பட  வேண்டும்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:05 pm

கண்ணம்மா பாரதி


வேளாண்மை ஒரு கூட்டு முயற்சி. விதைக்க, களை எடுக்க அறுவடை செய்ய பலரது உழைப்பு தேவை. இவர்களுக்கு தினக் கூலி தரப்பட வேண்டும். தவிர விவசாய வேலைகளைச் செய்யவும் ஆள்கள் போதிய அளவுக்குக் கிடைப்பதில்லை என்ற புகார்களும் எழுகின்றன . விவசாய வேலைகளுக்கான கூலி செலவினங்களைக் குறைப்பதற்காக வித்தியாசமாக காகித நடவு முறையை அறிமுகம் செய்திருக்கிறார் தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ். காகித நடவு முறையில் விதை நெல், பயிருக்கு வேண்டிய தண்ணீர் பாரம்பரிய உழவு முறைக்குத் தேவையானதைவிட குறைவு. "காகித நடவு முறையை விளக்குகிறார் ரமேஷ்:

""காகித நடவு முறைக்குத் தேவைப்படும் தண்ணீர் அளவு வழக்கமான நடவு முறைக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவில் மூன்றில் ஒரு பங்கு தான். உழவர்களின் செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்று நான் சிந்தித்த போதுதான் இந்த யுக்தி தோன்றியது.நான் அடிப்படையில் ஐ.டி.ஐ பயிற்சி பெற்றவன். சொந்தமாகப் பட்டறை உண்டு .நேரடி நெல் விதைக்கும் முறையில்தான் நாம் பாரம்பரியமாகச் செய்து வருகிறோம் . அந்த முறைக்கு "மதிப்பு கூட்டும்' யுக்திதான் காகித நடவு முறை . காகித நடவு முறையில் புதுமையும், அறிவியலும் இணைந்துள்ளது . நீர் மேலாண்மையும் இதில் உண்டு . நெல் விளைவித்தலில் மனித உழைப்பைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறியுள்ளது.

"கேப்சூல்' முறை என்று நேரடி நடவு முறையில் புது யுக்தி சமீபத்தில் அறிமுகமானது. அதைப் பின்பற்றி நானும் நெல் விதைப்பை நடத்தினேன். ஆனால் எனது முயற்சியில் தோல்வி அடைந்தேன் . நஷ்டம் பெரிய அளவில் ஏற்பட்டது.

கையை சுட்டுக் கொண்ட நான் தொடர்ந்து முயற்சித்தேன். அதன் முடிவுதான் காகித நடவு முறை. "காகித உறையில், வேப்பம் புண்ணாக்கு, கடலைப் புண்ணாக்கு கலந்த அடி உரம் வைத்து அதில் விதை நெல்லை வைப்பதுதான் காகித நடவு முறை. விதை நெல்லை காகிதத்தில் சுருட்டி வைக்காமல் , நீண்ட காகித உறையில் அரை அல்லது முக்கால் அடி இடைவெளி விட்டு நெல்விதைகளையை உரத்துடன் வைக்க வேண்டும் .இந்த நெல் நிரப்பப்பட்ட காகித உறை நீண்ட நாடா மாதிரி அமைந்துவிடும் . அதை சுருளாக சுற்றி வைப்போம் . காகித நாடாவை, பண்படுத்தி தண்ணீர் பாய்ச்சி சேறும் சகதியும் இருக்கும் வயலில் நீரை வடித்துவிட்டு காகித விதைச் சுருளை நூல் பிடிப்பது போல பிடித்து மண்ணின் மேல் புறம் வைத்து அழுத்தி வைப்போம். நிலத்தின் ஈரத்தில் காகித நாடா நனைந்து மண்ணோடு ஒட்டிக் கொள்ளும் . விதையும் அந்த ஈரத்தில் ஊறி மூன்று நாட்களில் முளைவிடும் .காகிதம் மக்கிப் போகும் . காகிதச் சுருளில் விதையுடன் அடி உரம் வைக்கப்பட்டு விடுவதால் முளைப்புத் திறன் சிறப்பாக அமையும். பயிர்களும் சமச்சீரான இடைவெளியில் ஒரு நேர் கோட்டில் வரிசையாக நின்று வளரும்.

காகிதச் சுருளை உருவாக்கும் கருவியை சென்ற ஆண்டு கண்டு பிடித்தேன். பொதுவாக பாரம்பரிய நடவு முறைக்கு ஒரு ஏக்கருக்கு, நாற்பது முதல் 45 கிலோ விதை நெல் தேவைப்படும். காகித நடவு முறையில் ஐந்து கிலோ விதை நெல் போதும். இதற்கு மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் பாய்ச்சினால் போதும் . எனது முறையில் , நாற்றங்கால் உருவாக்கும் செலவு , விதை நடல், நாற்றுகளை எடுத்து நடவு செய்ய கூலி தருவது தவிர்க்கப்படும். பொதுவாக ஒரு ஏக்கர் வயலில் நடவு செய்ய, சுமார் காகித விதைச் சுருளை மண்ணில் பதிக்க ஒரு ஏக்கர் வயலுக்கு நான்கு மணி நேரம்தான் ஆகும் . இந்த வேலையைச் செய்ய இரண்டு பேர்கள் போதும் . இதனால் விவசாய வேலைகளுக்கான செலவுகள் கணிசமாகக் குறையும்.

காகித விதைச் சுருள் நடவு முறையை எனது சொந்த வயலில் செயல்படுத்தி வெற்றி கண்டேன் . இதனை அறிந்த விவசாய நண்பர்கள் காகித விதைச் சுருளை அதிக அளவில் செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர். சென்ற ஆண்டு என்னிடம் காகித விதைச் சுருள் தயாரிக்கும் ஒரு கருவிதான் என்னிடத்தில் இருந்தது.

இந்த ஆண்டு ஐந்து கருவிகளை உருவாக்கி உள்ளேன் கருவிகளுக்குப் காப்பு உரிமைக்காக மனு செய்துள்ளேன்.

விரைவில் கிடைக்கும்.

காகித விதைச் சுருள் தயாரிக்கும் கருவியில் இரண்டு பாத்திரங்கள் உண்டு . ஒன்றில் அடி உரம் நிரப்பப்படும் . வேறு பாத்திரத்தில் விதை நெல் நிரப்பப்படும் . கருவி இயங்கும் போது, விதையும் உரமும் காகிதத்தில் விழும். நகரும் காகிதம் மறுபுறம் மடிக்கப்பட்டு நாடா மாதிரி வெளியே வரும் .தேவையான இடைவெளிக்கு ஏற்றவாறு விதை காகிதத்தில் விழும் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம் . காகிதம் உரத்துடன் நன்றாக மடிக்கப்பட்டிருப்பதால் விதைநெல் அந்தப் பக்கம் இந்தப் பக்கம் சாதாரணமாக இடம் மாறாது'' என்கிறார் ரமேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.