சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 75: சொர்க்க பூமி
ஒரே ஒரு மலர் வெளிப்படுத்துகின்ற அற்புதத்தை நம்மால் தெளிவாக பார்க்க முடிந்தால், நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையுமே மாறிவிடும்.


ஒரே ஒரு மலர் வெளிப்படுத்துகின்ற அற்புதத்தை நம்மால் தெளிவாக பார்க்க முடிந்தால், நம்முடைய ஒட்டுமொத்த வாழ்க்கையுமே மாறிவிடும்.
- கெளதம புத்தர்
ஜப்பானில் ரயிலில் பலமுறை பயணம் செய்த அனுபவம் கொடுத்த தைரியத்தில், நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலின் டிராவல் டெஸ்கில் இருந்த பெண் ஜப்பானிய மொழியில் எழுதிக்கொடுத்தபடி, ரயில் பிடித்து, குறிப்பிட்ட ஸ்டேஷனில் இறங்கினோம். அங்கே இருந்து பேருந்து பிடித்து, சென்றால் ஆஷிகாகா பூங்காவை அடைந்துவிடலாம்.
அந்த சிறிய ரயில் நிலையத்திலிருந்த ஸ்டேஷன் மாஸ்டருக்கு, நாங்கள் ஏறவேண்டிய பேருந்தின் எண்ணை ஆங்கிலத்தில் சொல்லத் தெரியவில்லை. அவருடைய மொழிப் பிரச்சனையை புரிந்துகொண்டு, வேறு யாரையாவது கேட்கலாம் என்று வெளியே வந்தோம். அங்கே ஒரு சிறிய தற்காலிக கூடாரத்துக்குள் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளிடம் சென்று கேட்டோம். ஆஷிகாகா என்பதை புரிந்துகொண்டு எங்கள் கையில் ஒரு சிற்றேட்டைத் திணித்தாள். அதில் இருந்தது எல்லாம் ஜப்பானிய மொழியில் இருந்தது. ஆனால் அது ஆஷிகாகா பூங்காவனத்தைப் பற்றிய தகவல்கள் அடங்கியது என்பதை அதில் அச்சிடப்பட்டிருந்த அழகிய மலர்களின் படங்களையும், சரம்சரமாக தொங்கிய எல்இடி பல்புகளையும் கொண்டு அறிந்து கொண்டோம். அங்கே எப்படி போவது என்று சைகை மொழியில் நான் அபிநயித்தேன். எப்படியோ புரிந்து கொண்டு, எழுந்து வந்து அங்கே நின்றிருந்த பேருந்து ஒன்றில் ஏற்றிவிட்டாள். நாங்கள் பிடித்திருந்த சிற்றேட்டில் கடைசி இரயில் இரவு 10.30 என்பதை தன் கையில் பிடித்திருந்த சிகப்பு மை கொண்ட பேனாவினால் குறியிட்டுக் காட்டினாள்.
சிவா, நாம் டோக்கியோவுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றால், பத்தரை மணிக்குள் வந்துவிடவேண்டும் என்றேன்.
அந்த பேருந்து போய்க்கொண்டே இருந்தது. பூங்காவிற்கு என்று டிக்கெட் வாங்கியிருந்தோம், எங்கே இறங்க வேண்டும் என்பதை ஓட்டுநரிடம், எங்களை பேருந்தில் ஏற்றிவிட்ட பெண் கூறி இருந்தாள். அது குளிர்காலத்தின் ஆரம்பநிலை அல்லவா ஆகையினால் மாலை ஐந்து மணிக்கே இருள் தொடங்கிவிட்டது. சாலை ஓரத்தில் அணிவகுத்து நின்ற மேப்பிள் மரங்களின் இலைகள், பச்சை நிறத்தைத் துறந்து, சிகப்பு வண்ணத்தை ஏந்தி இருந்தன. மொழி தெரியாது, போகும்வழி புரியவில்லை, பேருந்தில் இருந்த முகங்கள் இறுகிக் கிடந்தன.
ரயில் நிலையத்தின் வெளியே இருந்த பெண் கொடுத்த சிற்றேட்டை ஏனோ எறிந்து விடாமல் கைகளில் இறுகப் பிடித்திருந்தேன். அரை மணி நேரம் ஓடி மறைந்தது. ஆனால் இறங்கவேண்டிய இடமோ கண்ணாமூச்சி ஆடியது. மெதுவாக எழுந்து, ஓட்டுனரை நோக்கி சென்றேன். பொதுவாகவே கிழக்கு ஆசிய நாடுகளில் அதுவும் ஜப்பானில் பேருந்துகளில் ஓட்டுநரே, கண்டக்டராகவும் செயல்படுவார். பேருந்தில் ஏறும்பொழுது, அவருக்கு பக்கத்திலிருக்கும், பெட்டியில் தேவையான சில்லறையைப் போட்டு, போகும் இடத்தை,க் கூறினால், ஓட்டுநரே டிக்கெட்டைக் கொடுப்பார்.
என் கையில் இருந்த சிற்றேட்டைக் காட்டி, அந்த இடம் எப்பொழுது வரும் என்று கேட்டேன். வேறு எப்படி? சைகை மொழியில்தான். வந்ததும் சொல்கிறேன் என்றார். அப்பாடா என்று நிம்மதியாக வந்து அமர்ந்தேன். பத்து நிமிடங்கள் ஊர்ந்தது. சட்டென்று எங்களை நோக்கித் திரும்பி, இறங்குங்கள் என்று சைகை செய்தார். பிறகு வலது பக்கம் கையைக் காட்டி ஜப்பானிய மொழியில் ஏதோ கூறினார்.
இறங்கிவிட்டோம். வானம் கருப்பு போர்வையைப் போர்த்திக் கொண்டது. தெரு விளக்கொளியில் தனியாக நின்றோம். எந்த பக்கம் செல்வது என்று தெரியவில்லை. ஒரு வழிகாட்டும் பலகை கூட இல்லை. செய்வது அறியாது திகைத்தோம். திரும்பி ரயில் நிலையத்தை அடைவதற்கு கூட எங்கே பேருந்து பிடிக்க வேண்டும் என்று தெரியாது. தெய்வாதீனமாக அந்த வழியே ஒருவர் நடந்து வந்தார். அவரிடம் என் கையில் பிடித்திருந்த சிற்றேட்டைக் காட்டினேன்.
தலையை, புரிந்து கொண்டேன் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஆட்டி, எதிர்திசையில், சிறியதாக சென்ற ஒரு வழியைக் காட்டினார். பிறகு சென்றுவிட்டார். சரி வருவது வரட்டும் அவர் காட்டிய திசையில் நடந்தோம். எங்கு செல்கிறோம் என்று புரியாமல் பத்து நிமிடங்கள் நடந்தோம். முடிவில் சொர்க்க பூமியை அடைந்தோம்.
ஆஷிகாகா பூங்காவினுள் மக்கள் கூட்டம் அலைமோதியது. இவ்வளவு பேர் எப்படி கூடினார்கள் என்று வியந்தோம், பிறகு அறிந்தோம். நாங்கள் வந்தது கிராமத்தின் வழியாக, என்பது! விதவிதமான செடிகள், விதைகள் தோட்டங்களை அலங்கரிக்கும் பொருட்களை விற்கும் கடைகளைத் தாண்டி, நுழைவுச் சீட்டை வாங்கிக் கொண்டு பூங்காவின் உள்ளே அடி எடுத்து வைத்ததுமே, கண்முன் விரிந்த காட்சிகள் என்னை ஆனந்தத்தின் உச்சிக்கு இட்டுச் சென்றது.
அல்லி மலர்கள் பூத்த குளங்கள், ஒவ்வொரு இயற்கையான மலர்களுக்கு அருகில் எல்இடி பல்புகளால் ஆன அல்லி மலர்கள். ரோஜா மலர்களைத் தாங்கிய செடிகள், அவைகளிலும் எல்இடி ரோஜா மலர்கள். பூங்காவனத்தைச் சுற்றியிருந்த சிறிய குன்றுகளின் மேல் அமைக்கப் பட்டிருந்த பெரிய, பெரிய எல்இடி திரைகளில் தோன்றி மறையும் பல நூற்றுக்கணக்கான, இசைக்கு ஏற்ப மாறும் மனிதனின் கற்பனைச் சக்தியில், பல்புகளை கொண்டு உருவாக்கப்பட்ட டிசைன்கள், விநாடிக்கு ஒருமுறை மாறி பார்ப்போரை கற்சிலையாக்கின.
எங்கள் நடையைத் தொடர்ந்தோம் ‘பான்சீஸ்' என்று பல வண்ண மலர்களைத் தாங்கிய தோட்டச் செடிகள் பாதைகளின் இரு ஓரங்களிலும் பூத்துக் குலுங்கி தங்கள் அழகை எல்இடி பல்புகளின் துணைகொண்டு மேலும் மிளிர வைத்துக் கொண்டிருந்தன. ஆஷிகாகா பூங்காவனத்தை உலகப்புகழ் பெற செய்து கொண்டிருப்பது "விஸ்டேரியா' மரங்களாக இருக்கின்றன. ஏப்ரல் மாதத்தின் கடைசியில் தொடங்கி மே மாதம் இரண்டாம் வாரம் வரை தோரணம் போல சரம்சரமாக பிங்க், ஊதா, வெள்ளை, நீலம் என்று பல வண்ணங்களைக் கொண்ட மலர்களைத் தாங்கி நிற்கும் இம்மரங்களின் அழகைப் பாட கைதேர்ந்த கவிஞனும் சற்று தடுமாறித்தான் போவான். நாங்கள் சென்றதோ அக்டோபர் மாத கடைசி, எப்படி அந்த அழகிய மலர்களைக் காண்பது என்ற ஏக்கம் வேண்டாம்.
விஸ்டேரியா மலர்களுக்குப் பதிலாக அதே போன்ற தோற்றத்தை அளிக்கும் வகையில் எல்.இ.டி பல்புகளைக் கொண்டு சரம்சரமாக தொங்கவிடப்பட்டு காற்றில் ஆடிக்கொண்டிருந்த தோற்றத்தை, பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். வர்ணனைக்கு மிஞ்சிய அழகு அது! அதிலும் "கிரேட் விஸ்டேரியா' என்று போற்றி அழைக்கப்படுகிற 150 ஆண்டு விஸ்டேரியா மரத்தின் கொடிகள் தாங்கும் மலர்களை ஸ்டீல் பில்லர்கள் தாங்கும் பந்தலில் பரவ விட்டிருப்பார்களாம். அதைப்போலவே வெள்ளை எல்.இ.டி பல்புகள் தாங்கிய கம்பிகள் பந்தலின் மீது இருந்து கீழ்நோக்கி தொங்கிக் கொண்டிருந்தன. விஸ்டேரியா மலர்களைக் கொண்டு அமைக்கப்படும் டனலைப் போலவே, எல்.இ.டி பல்புகளைக் கொண்டு டனல்கள் அமைக்கப்பட்டிருந்தன.
திரும்பிய திசைகளில் எல்லாம் பலவித நிறங்களில் அமைக்கப்பட்டிருந்த, எல்இடி பல்புகளைத் தாங்கிய பிரமிடுகள், கூடாரக் கூரைகளில் எல்இடி பல்புகளால் உருவாக்கப்பட்ட பறவைகளின் ஊஞ்சலாட்டம், பல இடங்களுக்கு இட்டுச் செல்லும் பாதைகளிலும் மலர்கள், அவைகளைப் போலவே எல்இடி உருவாக்கப்பட்ட மலர்கள்.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா, இம்மண்ணில் என்று என் உள்ளம் விம்மி, அவருக்கு நன்றி கூறி நெக்குருகிய இடம் ஆஷிகாகாவின் லைட் பேன்டசி மலர்கள் திருவிழாவாக இருந்தது.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...