தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

சாந்தகுமாரி சிவகடாட்சம்


சிந்தை கவர்ந்த  திருவிழாக்கள் - 54

"வான் பொய்ப்பினும் தான் பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி'

- (பட்டினப்பாலை 1-6)

எங்களைச் சுமந்து கொண்டிருந்த  அந்த கார் வேகமாக  ஓடிக்கொண்டிருந்தது.

""துலா சங்கரமானாவைக்  காணப் போகும் நீங்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்கள்'' என்று பெம்ம வீரப்பன் அழகான ஆங்கிலத்தில் சொல்ல, ""ஆமாம், ஆமாம்,  சில சமயங்களில்  இறையருளால் இப்படி நாங்கள் திட்டமிடாமலேயே அரிய காட்சிகளைக் காணும் பாக்கியம் கிடைக்கிறது'' என்றேன். 

ஒவ்வொரு ஆண்டும்  அக்டோபர்  மாதம்  17-ஆம் தேதி அரங்கேறும் துலா சங்கரமானாவை ஒவ்வொரு குடவாஸýம், மிகப் பயபக்தியோடு கொண்டாடுவோம். அன்றைய தினம் அன்னை காவேரி,   ஊற்று வடிவம் கொண்டு தலைக்காவேரியில் உள்ள ஒரு சிறிய குளத்தில்  பொங்கிப் புறப்பட்டு வெளிப்படுவாள். குறிப்பிட்ட நேரத்தில் நிகழும் இந்த நிகழ்ச்சியைக் காண  கர்நாடகா  முழுவதிலிருந்தும்   லட்சக்கணக்கில்  மக்கள்  கூடுவார்கள்.

குறிப்பிட்ட நேரம் என்றால்? என்றேன்.

""சரியாகச்சூரியன்,  துலா ராசியில்  நுழையும் நேரம்'' என்றார் பெம்ம வீரப்பா. பிறகு தொடர்ந்தார்,  "" இப்படி சிறியகுளத்தில் காவேரி தென்படும் பொழுது அதை அவள் பிறந்த நேரமாகப் போற்றி பிறகு அந்தச் சிறிய குளத்திலிருந்து, பெரியகுளத்திற்கு வந்து சேரும் பொழுது அதில்  குளித்து,  ஜென் மாந்திர பாவங்களை ஒழித்து, புனர் ஜென்மம் எடுப்பதாகக் காலங்காலமாக நம்பிவருகிறோம். இந்தத் திருவிழாவுக்கு வரும் ஒவ்வொரு குடும்பமும் தங்களுடன் ஒரு பெரிய குடத்தையோ அல்லது பாட்டில்களையோ கொண்டுவந்து, பொங்கிப்புறப்பட்டு வரும் காவேரி நீரை முகர்ந்து செல்வார்கள். குடும்பத்தில் வரும் எல்லாப் புனிதகாரியங்களுக்கும் அதைப்பயன்படுத்துவார்கள்.

துலா சங்கரமானா,  இன்றோடு முடிவு  அடையாது,  நாளை  18-ஆம்  தேதியும் தொடரும். அன்று பெண்கள் பார்வதி அம்மனையும் , காவேரி அன்னையையும் வழிபடுவார்கள். எங்கள் பெண்கள் காவேரித்தாயை,  பார்வதிதேவியின் மறு அவதாரமாகவே நம்புகிறார்கள். ஒரு பெரிய வெண்கலத்தட்டில்  நெல் மணிகளைப் பரப்பி அதில் ஒருவிளக்கை ஏற்றி வைப்பார்கள். பிறகு வெள்ளரிக்காயை  எடுத்து  அதற்கு  பொட்டிட்டு பிறகு  சிகப்புபட்டுத் துணியை சுற்றி, பூச்சூட்டி,   காவேரியின் திருவுருவமாகப் போற்றி வணங்குவார்கள்.  அட்சதை தூவி,  வெற்றிலை பாக்கு  வைத்து, தீபம் காட்டுவார்கள் . அன்று குடவாஸ்களின் விருப்பமான உணவான தோசையும், கல்யாண பூசணிக்காய்கூட்டும் சமைக்கப்படும். இதைத்தவிர  பலவிதமான பலகாரங்களும்  செய்யப்படும் என்றார்.

கேட்பதற்கே, காதுகளுக்கு இவ்வளவு இனிமையாக இருக்கிறதே, காண்பதற்குக்  கண்களுக்கு  பேரின்பமாக   இருக்கும் போலிருக்கிறதே''  என்றேன்.

""ஆமாம், மேடம்,   காவேரித்தாய்  புறப்பட்டு  வரும்  குளத்திற்கு  அருகே பூஜையில்  ஈடுபட இருக்கும் குருமார்களில் சிலர்  எனக்கு மிகவும் வேண்டியவர்கள். அவர்களிடம்  உங்களைப்பற்றி  சொல்லி  இருக்கிறேன். நிறைய வி.ஐ.பி.கள் நிறைந்து இருப்பார்கள்,  அவர்களோடு  உங்களை அறிமுகப்படுத்திய  கண் மருத்துவர் குடும்பமும்  இருக்கும்.  ஒன்றும்  பிரச்னை இருக்காது  என்று    நினைக்கிறேன்'' என்றார்.

""துலாசங்கரமானா, பகல்  பன்னிரண்டு  மணிக்கு  மேல்  தான் நிகழப்போகிறது.   ஆகையினால்   காவேரிநதி, கன்னி  மற்றும்  சுஜ்யோடி நதிகளுடன்  சங்கமிக்கும்,  பாகமண்டலாவுக்கு  உங்களை  அழைத்துப் போகிறேன்'' என்றார்  பெம்ம வீரப்பா.

திரிவேணி  சங்கமத்தில்  கால்களை  நனைத்து,  அந்தப்  புனித நீரைத் தலையில் தெளித்துக்கொண்டு, அங்கே  இருக்கும் கோயிலில் குடிகொண்டிருக்கும் சிவபெருமானை,  பாகன்டேஸ்வரா (Bhagandeshwara) என்ற திருநாமம் கொண்டவரை  வணங்கி,  தலைக்காவேரியை நோக்கிப்  புறப்பட்டோம்.

காரில்,  நிலவிய மெüனத்தை  பெம்ம வீரப்பா  கலைத்தார். ""காவேரி உருவான புராணக் கதையைப்பற்றி  அறிந்திருக்கிறீர்களா''  என்று வினவ,  ""இல்லை சொல்லுங்கள் கேட்க ஆவலாக உள்ளோம்'' என்றார் என் கணவர்.

பிரம்ம தேவருக்கு "விஷ்ணுமாயா' என்று ஒரு பெண் இருந்தாள். அவள் உலக மக்களுக்குச் சேவை  செய்ய வேண்டும்  என்ற  நல்லெண்ணம்  கொண்டு வாழ்ந்தாள் . அரக்கனை அழிக்க விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்த பொழுது பிரம்மதேவர் விஷ்ணு மாயாவுக்கு "லோபமுத்திரா'  என்று பெயர் மாற்றம் செய்து, விஷ்ணுவுக்கு உதவ அனுப்பிவைத்தார்.

காவேரா  என்ற ரிஷி ஒருவர் பிள்ளை வரம் வேண்டி, பிரம்மதேவனை பிரார்த்திக்க, லோபமுத்திராவை, அவளுக்குத் தத்து கொடுத்துவிடுகிறார். காவேராவின் மகளான பிறகு லோபமுத்திரா, "காவேரி' என்று அழைக்கப்பட்டார்.

ஒருமுறை,  பிரம்மகிரி மலையில் தவத்தில் ஈடுபட்டிருந்த அகஸ்தியமுனிவர், காவேரியை அங்கே கண்டு, அவள் அழகில் மயங்கி அவளை மணந்து கொள்ள, சம்மதம் கேட்க காவேரி ஒரு நிபந்தனையுடன் அவரை மணக்கச் சம்மதிக்கிறாள். நீண்டகாலம், தன்னைப் பிரிந்து சென்றால்,  அகஸ்தியரை விட்டுவிலகிச் சென்று விடுவதாகக்கூற அதற்கு அகஸ்தியரும் சம்மதித்தார். நீண்ட காலங்களுக்குப் பிறகு ஒரு முறை அகஸ்தியர், தன்னுடைய வாக்குறுதியை மறந்து வேறு இடம் சென்று திரும்பக் காலதாமதம்  ஆக, காவேரி நதியாக மாறி, தன்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மண்ணுலக மக்களுக்குச்சேவை செய்யக் கிளம்பிவிட்டாள்.

கதை முடியவும்,  நாங்கள் பிரம்மகிரி மலையை அடையவும் நேரம் சரியாக இருந்தது. கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கண்டு திகைத்தேன். பெம்ம வீரப்பாவுக்கு,  எங்களைக் காவேரி குண்டிகை அதாவது குளத்திற்கு அருகே கொண்டு செல்ல அதிக சிரமம்  ஒன்றும் இருக்கவில்லை.

பூஜாரிகள்,  மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தனர். சுற்றிலும் பெரிய வி.ஐ.பி.கூட்டம். என்மனம் படபடத்தது,  வாழ்வில் காணக்கிடைக்காத அதிசயத்தைப் பார்க்கும் வாய்ப்பு. "அம்மா காவேரியே என் கணவர் உன் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவர். தமிழ்நாட்டின் குலமகளே, நீ என் கணவருக்குத்தாய்,  ஆகையினால் நான் உன் மருமகள், என் இனிய மாமியாரே உன் தரிசனம் கிடைக்கட்டும்',  என்று வேடிக்கையாக எண்ணி மகிழ்ந்தேன்.

சிறியகுளத்தில் இருந்து,  பெரியகுளம் ஒன்று நீண்டு சென்றது, அதிலும் தண்ணீர் நிரம்பி இருந்தது, திடீர் என்று தலைமை  குரு எழுந்தார். ஒரு சிறிய கமண்டலத்தில்,  காவேரி குண்டிகையிலிருந்து தண்ணீரை வாரிச் சுற்றி இருந்தவர்கள் மீது ஊற்றினார். சுற்றி இருந்தவர்கள்  அன்னை உதித்துவிட்டாள் என்று தங்கள் கையில் பிடித்திருந்த சிறிய சொம்புகளில் தண்ணீரை வாரி, வாரி  தங்கள் தலையில் ஊற்றிக்கொண்டனர் . எங்கள் தலையிலும் காவேரி அன்னையின் தண்ணீர் கவிழ்க்கப்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் கைகளில் பெரிய, பெரிய பிளாஸ்டிக் குடங்களோடு, பெரியகுளத்தில் மக்கள் குதித்து,  முன்னேறி வரத்தொடங்கினர். கூட்டம் பெருக நாங்கள் விலகினோம்.

ஒரு நண்பரின் வீட்டில் தோசையும்,  கும்பாலா (Kumbala) என்கின்ற பூசணிக்கறியும் சாப்பிட்டோம் . நன்றி பெம்ம வீரப்பனுக்கு உரித்தாகிறது. எதேச்சையாக இறைவன் அளித்த இந்த வரம் இன்றளவும் மனதைக்கவ்வி நிற்கிறது.

வாழி அவன் தன் வளநாடு,  மகவாய்
வளர்க்கும் தாயாகி ஊழி உய்க்கும்
பேருதவி ஒழியாய் வாழி காவேரி 

-சிலப்பதிகாரம்

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.