வாகன பிரவேசம்!
ஒருநாளாவது நமக்கே நமக்குப் பிடித்தமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திட மாட்டோமா என்ற ஏக்கமும், நோக்கமும் நம்மில் பலருக்கு இருக்கும்.


ஒருநாளாவது நமக்கே நமக்குப் பிடித்தமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திட மாட்டோமா என்ற ஏக்கமும், நோக்கமும் நம்மில் பலருக்கு இருக்கும். ஆனால், பிடித்த வாழ்க்கையை பிடிவாதத்தோடு வாழ்ந்திடும் வாய்ப்பு மிகச் சிலருக்கு மட்டுமே அமைந்திடும். அப்படி ஓர் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ரஞ்சித் பிரதாப்.
இந்தியாவின் ஃபியட் வரலாற்றைப் புரட்டினால், ஃபியட் - பிரீமியர் கூட்டணியின் "பத்மினி' காரைத் தவிர்க்க முடியாது. "ஃபியட் பத்மினி" வெற்றிக்குப் பிறகு, 1998-இல் "யுனோ' என்ற காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவந்தது ஃபியட்.
அந்தக் காலத்தில் நவீன வடிவமைப்பிலும், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்கிய கார், "யுனோ'. உலகில் அதிகம் விற்பனை ஆன ஃபியட் கார்களில் இதுவும் ஒன்று. இதன் உற்பத்தி 2004-ஆம் ஆண்டில் நிறுத்தப்பட்டது. இன்றும் பழைய கார் சந்தையில் விரும்பி வாங்கப்படும் காராக இருக்கிறது யுனோ.
இப்படி இந்தியாவின் ஃபியட், யுனோ தொடங்கி இத்தாலி, அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா என உலகின் பல்வேறு நாடுகளின் கார்களை வாங்கி பராமரித்து கண்காட்சிகளுக்கு அனுப்பி வருகிறார் ரஞ்சித் பிரதாப்.
இவருடைய கோட்டூர்புரம் இல்லத்தில் இருக்கும் கார்களின் எண்ணிக்கை மட்டுமே அறுபதை தாண்டும். ஒவ்வொரு காருக்கும் தனித்தனி நிறுத்தம். பராமரித்து பார்த்துக் கொள்ள தனி தனி வேலையாள்கள் என பரபரப்பான சென்னை மாநகரத்தில் தனி ஆளுமையாக விளங்கி வருகிறார் ரஞ்சித் பிரதாப்.
பயணத்தில் ரசனை அனுபவங்களை அவரிடம் பேசினோம்...
""தாத்தா ராஜகோபால் நாயுடு கார் பிரியர். 1938-களிலேயே சென்னையில் கார் விற்பனை பிரிவை ஏற்படுத்தியவர். பஸ், லாரி என எல்லாவற்றிலும் அவருக்கு ஆர்வம். தாத்தாவுக்கு பின் அப்பாவுக்கு ஆட்டோ மொபைலில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஒரு கம்பெனியை "ராணே மெட்ராஸþ'க்கும், "இண்டியன் ரேடியட்டர்ஸ்' கம்பெனியை எம்.ஏ.சிதம்பரத்துக்கும் கொடுத்து விட்டார். எங்களுக்கு டைப் ரைட்டர் கம்பெனி இருந்தது. அப்போது ஹால்டா டைப் ரைட்டர் மிகப் பிரபலம். அதன் விற்பனையை தொடங்கி பெரிதாக சாதித்து வெற்றிப் பெற்றார் அப்பா.
தாத்தா விட்டுச் சென்ற கார்கள் வீட்டில் இருந்தன. அதில் சில கார்களை நான் பராமரித்து வந்தேன். ஆனால், அப்பாவுக்கு பெரிய ஆர்வம் இல்லை. நான் வளர்ந்து, தனியாகத் தொழில் என இறங்கிய பின்னர், தாத்தா மாதிரியே நானும் கார்களை பராமரித்து வந்தேன். கடந்த 10 ஆண்டுகளாக இந்த கார்களை தீவிரமாக சேகரித்து, பராமரித்து கண்காட்சிகளுக்கு அனுப்பி வருகிறேன். மனசுக்கு பிடித்த வேலை என்பதால் விரும்பிச் செய்கிறேன்.
ஆரம்பத்தில் இந்தியாவில்தான் கார்களை வாங்கினேன். இப்போது இருக்கும் இணையதள வசதி மூலமாக எல்லா வெளிநாட்டு கார்களையும் வாங்கி விடும் சூழல் வந்திருக்கிறது.
பழைய வண்டிகளைப் பார்த்துக் கொள்வது... அதை ஓட்டுவது என்பது ஒரு போதை. நமக்குப் பிடித்த பழைய வண்டிகளை வீட்டுக்குள்ளயே சும்மா நிறுத்தி என்ன பிரயோஜனம்...? WClபடி வருஷத்துக்கு ஒருமுறை அதை சாலைகளில் அழகாக ஓட்டி கொண்டு போகும் போது ஒரு உணர்வு கிடைக்கும்'' என்றபடி தன் 1948 - டியூக் காரை காண்பித்து சிலாகிக்கிறார் ரஞ்சித்.
""ஜிம் கார்பெட் என்று உத்திரப் பிரதேசத்தில் இருந்த வேட்டைக்காரர் ஒருவரின் கார் இது. பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்தவர். புலிகள் வேட்டைக்கு இந்த காரில்தான் போவாராம். அந்த கார் இங்கேதான் இருக்கிறது. அவர் இறந்த பிறகு நிறைய பேர் வந்து இதை எந்த விலைக்கும் வாங்க தயார் என்று வந்தார்கள். நான் யாருக்கும் கொடுக்கவில்லை. இதுதான் டியூக் காரின் ப்ளாஸ்ஃபேக்.
என்னிடம் இருக்கும் 1933 Ford - Tudor, 1948 - Aston - 8, 1952 - Bug Fiat, 1946 - Singer என ஒவ்வொரு கார்களுக்கும் பின்னால் ஒரு அழகான கதை இருக்கு'' என்று சொல்லி புளகாங்கிதம் அடைகிறார் ரஞ்சித்.
""என்னிடம் மொத்தம் 40-க்கும் அதிகமான வின்டேஜ் கார்கள் இருக்கின்றன. இது எல்லாமே எனக்கு என் குழந்தைகள் மாதிரி. அப்படிப் பார்த்துக் கொள்வேன். என்ன வேலை இருந்தாலும், தினமும் இந்த கார்களுடன் ஒரு மணி நேரம் செலவிட்டு விடுவேன். மெக்கானிக் தொடங்கி டிங்கர், எலக்ட்ரீசியன் என இங்கே வேலை செயயும் ஆள்கள் 10-க்கும் மேற்பட்டோர். இதற்குத் தேவையான ஸ்பேர் பார்ட்ஸ்களை உலகில் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து ஆர்டர் கொடுத்து விடுவேன். ஒவ்வொரு காருக்குள்ளும் என்னுடைய சின்ன வயது ஞாபகங்கள் நிறைந்து கிடக்கின்றன. சின்ன வயதில் பள்ளிக்கூடத்துக்குப் போகப் பிடிக்காது. மினி காரில் போக வேண்டும் என்பதற்காகவே பள்ளிக்குச் செல்வேன்.
952 - Citroen, 1948 - Ford Perfect, 1956 - Fiat Super Select, 1959 - Mark 1 Ambassador, மர வேலைப்பாடுகள் மிகுந்த Buick Eight, 1960 -Sunbeam Alpine, 1938 - Plymouth, 1959 - Benz 240D, Herald, Mg, Ford Anglia, 1964 - Vauxhall இப்படி விண்டேஜ் கார்களின் வகைகள் பல விதமாக இருக்கின்றன.
பத்மினி காருக்குப் பின்பு, ஃபியட் பெயர் இந்தியாவில் மிகவும் பிரபலமானபோது அறிமுகமான கார் "யுனோ'. இன்ஜின் பவர், பிக்-அப், நேர்த்தியான வடிவமைப்பு, உறுதியான கட்டுமானம் என அப்போது மிகவும் பேசப்பட்ட, விரும்பப்பட்ட கார். ஆனால், மோசமான சர்வீஸ் நெட்வொர்க் இதன் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதித்தது.
அந்தக் காலத்தில் இந்த காரைப் பார்த்தவர்கள், பயன்படுத்தியவர்கள் மீண்டும் இதை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். இதன் உதிரி பாகங்கள் சுலபமாகக் கிடைக்கின்றன. ஒரு கார் என்னிடம் வரும் போது எதுவுமே அதில் இருக்காது. இன்ஜினை மட்டும் வைத்துக் கொண்டு, அதை வேலைகள் பார்த்து புது கார்கள் மாதிரி ஆக்கி விடுவேன்.
ஒரு காருக்கு எவ்வளவு செலவாகும் என்பதை கணக்கிட்டு சொல்ல முடியாது. விற்பவர்கள் பெயிண்ட் அடித்து விற்று விடுவார்கள். அதை கொண்டு வந்து பார்க்கும் போதுதான், அதன் நிலை தெரியவரும். அதனால் எந்த செலவையும் கணக்குப் பார்க்க முடியாது. சில கார்களுக்கு வெளிநாட்டில்தான் உதிரி பாகங்கள் கிடைக்கும். அதற்காக காத்திருக்க வேண்டும்.
சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற ஆல் இந்தியா கண்காட்சிக்கு சென்று வந்தேன். இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, கலிபோர்னியா, நியூசிலாந்து என எல்லா நாடுகளிலிருந்தும் சுமார் 100 பேர் வந்திருந்தார்கள். அதில் பத்து இடங்கள்தான் முதல் இடம். அதில் எனக்கொரு இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி'' என முடிக்கிறார் ரஞ்சித் பிரதாப்.
விதவிதமாக ரக ரகமாக இவ்வளவு கார்கள் ஓடும் இந்தப் பெருநகரத்தில் இன்னமும் நினைவில் பல கார்களை சுமந்து நிற்கும் இவரை பார்க்க எப்படியோ இருக்கிறது. அவரை சந்தித்து விட்டு வரும் போது தோன்றியது, நம் நினைவுகளோடும், உணர்வுகளோடும் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் உயிர் இருக்கிறது என்று.
ரஞ்சித் சாலையில் ரஞ்சித்...
ரஞ்சித் பிரதாப் குடியிருக்கும் கோட்டூர்புரம் பகுதி முழுவதுமான சாலைக்கு "ரஞ்சித் சாலை' என்றே பெயர். ""எப்படி சார் இது?'' என்று கேட்டால்... ""அது என் பெயர்தான். 1958-ஆம் காலகட்டங்களில் என் அப்பா இந்தப் பகுதிக்கு குடி வந்தார். அப்போது சாலைகள் கிடையாது. செடி, கொடி, மரங்கள் என வனப்பகுதி மாதிரி இருக்கும். மாங்கொல்லைகள் இருக்கும். அப்போதுதான் எங்கள் அப்பா பிரதான சாலையில் இருந்து வீட்டுக்கு வருவதற்கு இந்த சாலையை திட்டமிட்டு போட்டார். மெட்ராஸ் கார்ப்பரேஷனில் இருந்து வந்து கேட்டார்கள். "இந்த சாலை அரசுக்கு சொந்தமானது' என்றார்கள். "சரி... இருக்கட்டும்... நான் செலவு செய்து போட்டுள்ளேன். அதனால் என் மகனின் பெயரான ரஞ்சித் என்பதை சாலைக்கு பெயராக சூட்ட வேண்டும்' என்றார்கள். அதற்கு மெட்ராஸ் கார்ப்பரேஷன் ஒப்புதல் தந்து ரஞ்சித் சாலை என பெயரிட்டது'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...