டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும்தான் வில்லன்!

""இருபது வருடங்களுக்கு முன் அப்போது நான் தீவிரமான இலக்கிய வாசகன். சினிமா உலகம் வேறு, இலக்கிய உலகம் வேறு.

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:23 pm

ஜி. அசோக்

மண் மணம் மாறா எழுத்து அஜயன் பாலாவுடையது. வாழ்வில் தவறவிடும் தருணங்களை எளிமையும் கிண்டலும் கலந்த மொழியில் எழுதிச் செல்பவர். இலக்கியம், சினிமா என வளர்ந்து வரும் ஆளுமை.  அண்மையில் வெளிவந்துள்ள "6 அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "மிசை' என்ற அத்தியாயத்தின் இயக்குநர்.  எழுத்துத் துறையிலும், திரையுலகிலும் கடந்து வந்த வாழ்க்கை குறித்து பேசுகிறார் அஜயன் பாலா:

""இருபது வருடங்களுக்கு முன் அப்போது நான் தீவிரமான இலக்கிய வாசகன். சினிமா உலகம் வேறு, இலக்கிய உலகம் வேறு. "சினிமாவில் ஜெயிக்க வேண்டுமானால் எழுதக்கூடாது; இலக்கியவாதிகளுடன் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது' என முரட்டு முடிவுடன் செயல்பட்டேன். ஆனால் வாய்ப்பு கிடைக்கும் வரை வேறு வழியில்லாமல் வயிற்றுபாட்டுக்காக எழுத்து வாழ்க்கைதான் கை கொடுத்தது.

 பத்திரிகை பணியின்போது அறிமுகமானவர் எழுத்தாளர்  வண்ணநிலவன். என் மீது அவருக்கிருந்த பரிதாபத்தால் இயக்குநர் கே.ராஜஷ்வரிடம் சேர்த்து விட்டார். அவருடன் "துறைமுகம்' படத்தைத் தொடக்க, அதில் உதவி இயக்குநராக ஒட்டிக்கொண்டேன். "துறைமுகம்' என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். இதுகுறித்து ஒரு நாவலே எழுதலாம்.

 அதன் பின், பாலசேகரனின் "லவ் டுடே'- வில் சுறுசுறுப்பாக வேலை செய்து, முதன்மை உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்றேன்.

 "லவ் டுடே' படத்தை தயாரித்த சூப்பர்குட் பிலிம்ஸ் படங்களுக்கு அப்போது மிகப்பெரிய முக்கியத்துவம் இருந்தது. பலராலும் கவனிக்கப்படும் உதவி இயக்குநராக மாறினேன். மனதில் ஒரு தெம்பு, புத்தெழுச்சி நாங்கள் எதிர்பார்த்தது போல படமும் மிகப்பெரிய வெற்றி. இனி இயக்குநராகி விடலாம் என்ற முடிவோடு எனது தேடலில் இறங்கினேன்.  நாம் போடும் திட்டங்களுக்கு ஏற்ப எல்லாமே நடந்துவிட்டால் அந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை. 

சினிமாவில்தான் வில்லன் மனித உருவில் வருவான். ஆனால் நிஜ வாழ்க்கையிலோ சந்தர்ப்பமும் சூழ்நிலைகளும் தான் வில்லன். "நேருக்கு நேர்' படம் வெளியான சமயம் ஒரு தயாரிப்பாளர் கிடைக்க, நடிகர் சிவகுமாரை சந்தித்து சூர்யாவுக்கு கதை சொன்னேன். சிவகுமார், சூர்யா இருவருக்குமே என்னையும் கதையும் பிடித்த அளவுக்கு அந்த தயாரிப்பாளரின் அணுகுமுறை பிடிக்கவில்லை. அதனால் பாலாவின் "நந்தா' படத்துக்கு கால்ஷீட் தந்தார் சூர்யா. பின்பு விக்ரம். அவரிடம் நான் கேட்ட தேதிகள் இயக்குநர் ராஜகுமாரனுக்கு சென்று விட்டது. அதுதான், "விண்ணுக்கும் மண்ணுக்கும்'. இப்படியாக துரதிருஷ்ட பாம்புகள் துரத்தி கொத்திக் கொண்டே இருந்தன. 

தொடர் வெற்றிகள் விக்ரமின் திசைகளை மாற்றியது. ""ஒரு படம் பண்ணிட்டு வாங்க. பண்ணலாம்'' என "ஜெமினி' 50-ஆவது நாள் விழாவில் சொல்லி இரண்டு வருட அலைச்சலுக்கு முடிவுரை எழுதினார் விக்ரம். 

போராட்டங்களிலிருந்து மீள பேனாவை எடுத்து எழுதத் தொடங்கினேன். எழுத்து வேதாளம் போல என் முதுகில் உற்சாகமாக தொற்றிக்கொண்டது. முதல் கதை "கூட்ஸ் வண்டியின் கடைசிப்பெட்டி'.

"இந்தியா டுடே'-வில் வெளியாகி அந்த மாத சிறந்த சிறுகதையாக இலக்கியச் சிந்தனை பரிசு பெற்று மிகுந்த வரவேற்பைப் பெற்றது,  அடுத்து, "பை சைக்கிள் தீவ்ஸ்' திரைக்கதையை துரிதமாக மொழிபெயர்த்தேன். ப. நிழல் திருநாவுக்கரசு அவரது பதிப்பகம் மூலம் புத்தகமாக வெளிக்கொண்டுவர, அது பாலுமகேந்திரா, தங்கர்பச்சான் போன்ற இயக்குநர்களின் பாராட்டுகளைப் பெற்று, மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதுவரை என்னைத் தெரியாத அனைவருக்கும் என்னை அடையாளப்படுத்தியது. அந்த புத்தகம் பல கூட்டங்களுக்கு வெளியூரில் அழைத்துச்செல்ல ஒரு எழுத்தாளனாக உருமாற்றம் ஆகினேன்.

ஒரு பக்கம் இயக்குநர் வாய்ப்பு இழுத்துக்கொண்டேயிருக்க, இன்னொரு புறம் எழுத்தில் மிகப்பெரிய வரவேற்பு. அதே உற்சாகத்தோடு கொஞ்ச நாள் வாய்ப்பு தேடும் வேட்டைக்கு ஓய்வு கொடுத்து, எழுத்து, இலக்கியக் கூட்டம் என தீவிரமாக அலையத் தொடங்கினேன். பல அதிரடியான களப்பணிகள் செய்து என் விரக்தியை போக்கிக்கொண்டாலும், உள்ளுக்குள் படம் இயக்க முடியாத வேதனை நெருஞ்சியாக அரித்துக்கொண்டுதான் இருந்தது.  அக்காலத்தில் நண்பர் அய்யப்ப மாதவன் ஒரு போட்டோ ஸ்டூடியோவை கோடம்பாக்கத்தில் நடத்தி வந்தார்.

ஒருமுறை நண்பர் ஒருவருக்காக அங்கு புகைப்படம் எடுக்கப் போக, அந்த பிலிம் ரோலில் கடைசியாக இருந்த ஒரு பிலிமில் என்னை கேமரா முன் நிற்க வைத்து, போட்டோ எடுத்தார். நண்பரின் 34 படங்கள் சரியாக வரவில்லை, என் ஒரு புகைப்படம் அட்டகாசமாக வந்தது. அப்போது நண்பர், ""நீ நடிக்க முயற்சி பண்ணு'' என்றார். அடுத்த சில நாட்களில் இயக்குநர் தங்கர்பச்சானை பார்க்க போனபோது அவரிடம் அந்த புகைப்படத்தை காண்பிக்க, அதுவரை ""உனக்கு எதுக்கு நடிப்பெல்லாம்?'' என மறுத்தவர், புகைப்படத்தை பார்த்துவிட்டு, ""நீ கண்டிப்பா நடிக்கிற'' என வாக்குறுதி தந்தார். அது நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. 
அடுத்து மிஷ்கின், "சித்திரம் பேசுதடி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு தந்தார்.  தொடர்ந்து நடிக்க ஆவல் இருந்தது. ஆனால் எப்படி நடிப்பை கற்று கொள்வது எனத் தெரியவில்லை. நடிப்பின் உலக அடையாளம் மார்லன் பிராண்டோ. அவனை படித்தால் நடிப்பு வரும் என நினைத்தேன்.  ஆனால் புத்தகம் வாங்கவோ அப்போது பணமில்லை. நண்பர் ஜெரால்டும் லீனா மணிமேகலையும் அப்போது "கனவுப்பட்டறை' என்ற பதிப்பகத்தைத் தொடக்கியிருந்தார்கள். அவர்கள் என்னிடம் ஒரு புத்தகம் எழுதி தருமாறு கேட்க, நான் அவர்களிடம், ""மார்லன் பிராண்டோ புத்தகம் வாங்கித் தந்தால் அதைப் படித்து  உங்களுக்கு அவர் வரலாற்றை மொழிபெயர்த்து தருகிறேன்'' எனக் கூற, அவர்களும் எனக்கு வாங்கித் தந்தார்கள். படம் வெளியானபோது புத்தகமும் வெளியாக நடிப்பு, எழுத்து இரண்டிலும் நல்ல பெயர்.

 விகடனில் உலகத் தலைவர்கள் பற்றி எழுதும் பெரும் வாய்ப்பு கிடைத்தது என் எழுத்து வாழ்க்கையின் மைல்கல்.  அந்த தொடர் என்னை பலரிடம் கொண்டு சேர்த்தது.  நா.முத்துக்குமார் மூலம் இயக்குநர் விஜய் அறிமுகமாகி "மதராசபட்டினம்', "தெய்வ திருமகள்' என அவர் படங்களின் திரைக்கதைகளிலும், இடையிடையே நடிகனாக "வால்மீகி', "தென்மேற்கு பருவக்காற்று', "மதராசபட்டினம்', "கிருஷ்ணவேணி பஞ்சாலை', "வனமகன்' என பல்வேறு  படங்களிலும், "சென்னையில் ஒருநாள்', "வனயுத்தம்', "மனிதன்', "கரு', வெளிவரப்போகும் "நேத்ரா' போன்ற படங்களில் வசன எழுத்தாளனாகவும், இவையல்லாமல் உலக சினிமா, இலக்கியம் என 31 புத்தகங்களையும் எழுதி, நாதன் எனும் பதிப்பாளனாகவும் மாறியிருக்கிறேன்.

சினிமாவில் ஜெயிக்க வேண்டுமானால் எழுதக்கூடாது என்ற முடிவுடன் பயணப்பட்ட அந்த இளைஞனை, இப்போது நினைத்துக் கொள்கிறேன். அவனை இத்தனை தூரம் அழைத்து வந்த அனைத்து நண்பர்களையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.