கிளிகளுக்காக 3000 காமிராக்களை விற்கத் தயார்: அசர வைக்கும் ‘கிளிக்’ காதலர் சேகர்!
சென்னை பிரதான பகுதிகளில் ஒன்றான எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகாமையில் உள்ள ராயப்பேட்டை, பாரதி சாலையில் ஆயிரக்கணக்கான கிளிகள் ஒரு கட்டடத்தின் பகுதியிலும், அதையொட்டிய பதிவாளர்


சென்னை பிரதான பகுதிகளில் ஒன்றான எக்ஸ்பிரஸ் அவென்யூ அருகாமையில் உள்ள ராயப்பேட்டை, பாரதி சாலையில் ஆயிரக்கணக்கான கிளிகள் ஒரு கட்டடத்தின் பகுதியிலும், அதையொட்டிய பதிவாளர் அலுவலகத்தில் வேப்ப மரத்திலும், சிக்னலை ஒட்டிய அரச மரத்திலும், தொலைப்பேசி இணைப்புகளில் அமர்ந்தும் "கீ..கீ..' என்ற சத்தம் போக்குவரத்து நெரிசலையும் மீறி நம்மை அன்னாந்து பார்க்க வைக்கிறது.
இதற்கு காரணம், காமிராக்களைச் சேகரிப்பவரும், பழுது பார்ப்பவருமான சேகர் என்பவரது மனிதநேயப் பணி. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், அணில், புறாக்கள், சிட்டுக்குருவிகளுக்காக மதில் சுவரில் வைக்கப்பட்ட அரிசிகளை உண்ண ஆரம்பத்தில் வந்ததாக கூறுகிறார். இயந்திரத்தனமான சுமைகள் நிறைந்த இவரது வாழ்வில் பறவைகள் குறுக்கிட்டது ஆச்சரியம் தான் என்கிறார்.
"ப' வடிவிலான மதில் சுவரில் தொடக்கத்தில் அரிசி, கோதுமை, கேழ்வரகு ஆகிய உணவுப் பொருட்களை வைத்தேன். ஆழிப்பேரலை (சுனாமி) நேரத்தில் நான்கைந்து கிளிகள் வந்து உணவை சாப்பிடத் தொடங்கின. ஒரே ஆண்டில் ஆயிரக்கணக்கான கிளிகள் வரத் தொடங்கியதால், இடப்பற்றாக்குறை காரணமாக "ப' வடிவில் இருந்த மதில் சுவரின் குறுக்கே 15 பலகைகள் போட்டு அரிசி வைக்கவும் ஆயிரக்கணக்கான கிளிகள் ஒரே நேரத்தில் அமர வசதியாக இருந்தது.
இதனால் எனது பணிநேரத்தையே மாற்றிக்கொண்டேன். காலை 5 மணிக்கு பலகைகளில் அரிசி நிரப்பப்படும். பிறகு சூரிய உதயத்துக்கு முன் கிளிகள் உணவருந்தி சென்றுவிடும். அதன் பின் துப்புரவுப் படுத்தி சீரமைத்து பணிக்கு வர 10 மணிக்கு மேலாகிவிடும். பிறகு, 3 மணிக்கு காமிரா பழுது பார்க்கும் பணியை நிறுத்திவிட்டு மீண்டும் பலகைகளை அடுக்கி அரிசியை நிரப்ப 4.15 மணி ஆகிவிடும். 4.30 மணியளவில் இருந்து 6 மணி வரை ஆயிரக்கணக்கான கிளிகள் உணவருந்த வரும். இந்த நேரத்தில் சாலையில் சிறார்கள் கல் எறிவதைத் தடுக்கவும், பூனைகளை விரட்டவும் கிளிகளைப் பாதுகாக்கும் பொருட்டு வீட்டின் கீழே கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது. தற்பொழுது 30 கிலோ அரிசி வைக்கப்படுகிறது. மழை, புயல் காலங்களில் என் வீட்டை முற்றுகையிட்டு இங்கேயே கிளிகள் தங்குவதால் சுமார் 70 கிலோ வரை அரிசி வைத்துக் கொண்டே இருப்பேன். மழைக் காலங்களில் அதிக நேரங்கள் ஒதுக்க வேண்டும்.
கிளிகளைப் பராமரிப்பதில் ஆர்வம் திரும்பியதால் வருவாய் இழப்பு தான். ஆனால் இந்த கிளிகளை வாழ வைப்பது சந்தோஷமான விஷயம்'' என்கிறார் சேகர்.
தருமபுரி மதிகோண்பாளையத்தை பூர்வீகமாக கொண்ட வேளாண் குடும்பத்தில் விவசாயி பி.வி.சின்னசாமி - பார்வதியின் 4-ஆவது மகன் சேகர்.
""தந்தையின் அரிசி ஆலை, ஆயில் மில், பம்ப் செட் உதிரி பாகங்கள், மோட்டார் சைக்கிள் பழுது பார்ப்பது போன்றவற்றில் ஆர்வம் இருந்ததால் அதியமான் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டேன். வீட்டில் அனைவரும் நன்றாக படித்ததால் தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மன வருத்தத்துடன், "வாழ்வில் நல்ல நிலைக்கு வர வேண்டும். மீண்டும் ஊருக்கு போனால் மரியாதை இருக்காது' என்று சென்னையில் டி.வி., வி.சி.ஆர், ரேடியோ டேப்ரிக்கார்டர் பழுது பார்க்கும் எலக்ட்ரானிக் டிப்ளமோ 2 ஆண்டுகள் மந்தைவெளியில் என்னுடைய அக்கா வீட்டில் தங்கி படித்தேன். அவரது கணவர் செல்வநாயகம், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தலைமை புகைப்பட கலைஞராக இருந்தார்.
அவரிடம் இருந்த ரோலிஃப்ளக்ஸ் காமிரா பழுதடைந்திருந்தது. அதை யாராலும் சரிசெய்ய முடியவில்லை என்று வைத்திருந்தார். அதை அவருக்குத் தெரியாமல் ஒருநாள் காலை எடுத்துப் பிரித்து, அவர் அலுவலகத்தில் இருந்து மாலை 6 மணிக்கு வரும் முன், காமிரா பற்றியே தெரியாத நான் கழட்டி சரிசெய்து மேசை மீது வைத்து விட்டு வெளியே சென்று விட்டேன்.
அவர் மேசை மீதிருந்த காமிராவை யார் வெளியே எடுத்தது என்று கூச்சலிட்டார். "அதை தம்பி தான் சரி செய்தான்' என்றதும் ஆச்சரியத்தில் மூழ்கினார். அப்போதுள்ள காமிராக்களில் ஷட்டருக்கும் ப்ளாஷ்க்கும் ஒரே ஓயர் தான் இருக்கும். அந்த நேரத்தில் தான் எலக்ட்ரானிக்ஸ் காமிராக்கள் வரத் தொடங்கின. அந்த காமிரா பழுது பார்த்த அனுபவம் தைரியத்தை கொடுத்ததால் விசிட்டிங் கார்டு போட்டு நடந்தே பல்வேறு பகுதிகளுக்குச் சென்று காமிராக்களைப் பழுது பார்ப்பேன். என்னை அப்போது ஏளனமாக பார்த்தவர்கள் பலர்.
அந்த வைராக்கியத்தால், "என்னை பலர் தேடி வர வைக்க வேண்டிய சூழலை உருவாக்குவேன் என்று முடிவு செய்தேன். முதன்முதலாக லயன் ராஜன், ராம் கோபால் என்பவர்கள் தான் காமிராவை என்னிடம் நம்பி கொடுத்தார்கள் அவர்களே பலரிடம் என்னை பரிந்துரைத்தார்கள். எலக்ட்ரானிக் காமிராக்கள் அறிமுகப்படுத்தபட்டபோது, அடிப்படை எலக்ட்ரானிக் குறித்த அனுபவம் இல்லாததால் என்னைத் தேடி வந்து காமிராவைக் கொடுக்க ஆரம்பித்தார்கள். நான் சிறப்பாக காமிராவை பழுது நீக்கி தருகிறேன் என்று ஆறு மாதங்களிலேயே பிரபலமானதால் மந்தைவெளியில் இடப்பற்றாக்குறை காரணமாக ராயப்பேட்டைக்கு வந்துவிட்டேன்.
வாழ்க்கைக்கு பணம் தேவை என்பதால் அதிக நேரம் உழைக்கத் தொடங்கினேன். காலை 9 மணி தொடங்கி இரவு 2 மணி வரை பழுது பார்த்து சம்பாதித்தேன். இந்த நிலையில் பழமையான கார், நாணயம், புகைப்பட கண்காட்சியை அறிந்தபோது இதுபோன்று 250 ஆண்டு பழமை வாய்ந்த காமிராவை ஏன் சேகரித்து கண்காட்சி நடத்தக்கூடாது என்று நினைத்தபோது விலை உயர்ந்த கருவியாக காமிரா கருதப்பட்டதால் யாரும் முன்வரவில்லை. ஆகவே, எனது வருமானத்தில் பழமையான காமிராக்களை வாங்கத் தொடங்கி சென்னை வர்த்தக மையத்தில் மாணவர்களுக்காகவும், தற்போதைய புகைப்பட கலைஞர்கள் அறிந்து கொள்ளவும் 500 காமிராக்களை முதன் முதலாக கண்காட்சி நடத்தினேன்.
இதில் இயக்குநர்கள் பாலுமகேந்திரா முதல் ஆண்டும், 2 ஆம் ஆண்டு பி.சி.ஸ்ரீராம் தொடங்கி வைத்து ஆர்வமுடன் அவர்கள் சிறிய வயதில் உபயோதித்த காமிராக்கள் இது தான் என்று ரசித்தனர்.
இதில் மகாத்மா காந்தியோடு சென்று வெளிநாட்டவர் பயன்படுத்திய கீ மூவி காமிரா, ஸ்டில் காமிரா. அதேபோல், இந்தியா-சீனா போரின் போது சென்ட்ரல் போர்டு பிலிம் டிவிஷன் 16 எம்.எம். மூவி காமிராவில் தான் எடுப்பார்கள்.
குரல் தனியாக தான் கொடுப்பார்கள் அந்த நேரத்தில் நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளியில் 16 எம்.எம். புரொஜெக்டரில் படத்தை போட்டுக் காட்டுவார்கள். அப்படி போட்டு காண்பித்த காமிராவை நானே வாங்குவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. செய்தித்தாளில் வந்த விளம்பரத்தை அடுத்து தில்லிக்குச் சென்று, ஏலத்தில் வாங்கினேன்.
அதேபோன்று எம்.ஜி.ஆர். உபயோகித்த காமிரா, இந்தியன் எக்ஸ்பிரஸ் ஹாரிமில்லர் விற்பதாக அறிவித்த இஎல் நிக்கர்மேட் காமிரா, சுதேசமித்திரனில் ஆர்.கிருஷ்ணன் உபயோகித்த காமிரா, எல்.வி. பிரசாத் உபயோகித்த 16 எம்எம் மூவி காமிரா என பல்வேறு பிரபலங்கள் பயன்படுத்திய காமிராக்களை வாங்கி பொக்கிஷமாகப் பாதுகாத்து மாணவர்களுக்கும், இளம் தலைமுறை புகைப்பட கலைஞர்களுக்கும் அதன் செயல்படும் விதம் குறித்தும் புரிய வைத்தேன்'' என்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக நிதி பற்றாக்குறை காரணமாக கண்காட்சி நடத்துவதில்லை. ஆனால், கேமரா மெக்கானிக்காக அறியப்பட்ட சேகர், தான் சேகரித்த பழமை வாய்ந்த சுமார் 3,000 காமிராக்களை வைத்து, சேவையாக இளம் தலைமுறைக்கு விஸ்காம், ஜர்னலிசம் மாணவர்களுக்கு பாடத்திட்டமாக குறித்த தகவல்களை கூறி வந்தார். இன்றளவும் இப்பணி தொடர்கிறது.
""இத்தகைய சூழலில் வீட்டின் உரிமையாளர் வீட்டை விற்க முடிவு செய்தார். அன்றாடம் உணருந்தும் கிளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், நான் சேகரித்த பொக்கிஷங்களான அரிய வகை காமிராக்களை விற்பனை செய்து வீட்டை வாங்க முடிவு செய்துள்ளேன். இந்த முடிவுக்கு வர காரணம், என் மகனின் மகள்களான ஜெசிகாவும், ஜெனிகாவும் என்னுடன் இணைந்து கிளிகளை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுவதே'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...