பாட்டுத் தொழில் முன்பு மாதிரி இல்லை!
""குடும்பத்தில் எல்லோருக்கும் படம் பிடிக்க வேண்டும். அதற்கான முனைப்புதான் எனக்கு எப்போதும் இருக்கும். குடும்ப நேசம், காதல்


""குடும்பத்தில் எல்லோருக்கும் படம் பிடிக்க வேண்டும். அதற்கான முனைப்புதான் எனக்கு எப்போதும் இருக்கும். குடும்ப நேசம், காதல், நல்லுணர்வுகள், அன்பு, ஆக்ஷன் என்று அடுத்தடுத்துப் போகும் "ஆருத்ரா'. சினிமா எப்போதும் யதார்த்தத்திலிருந்து விலகிப் போய் விடக் கூடாது என்று நினைப்பேன். சினிமா என்பது அப்படியே வாழ்க்கையைத் திருப்பிப் போட்ட ஜாடைதான். நல்லதாகவே இதுவரைக்கும் செய்து வந்திருக்கிறேன். என் மீதும், என் படங்கள் மீதும் நல் மதிப்புதான் வந்திருக்கிறது. வெற்றிக்குக் குறுக்கு வழி என எதுவும் இல்லை. கடின உழைப்புதான் வெற்றிக்கான ஒரே நியாயமான வழி. இதுதான் கற்றுத் தேர்ந்த அனுபவம். கொஞ்சம் கணக்கை இன்னும் நேர் செய்து பயணிக்க வேண்டியுள்ளது. அதுதான் இப்போது "ஆருத்ரா' படம்''. நிதானமாகப் பேசுகிறார் பா. விஜய்.
என்னதான் சொல்லுங்க... பாடலாசிரியர் என்கிற இடமே இங்கே பலருக்கு கனவு. அதுவும் நீங்கள் வெற்றி பெற்ற கவிஞர்...இருந்தும், ஏன் ஹீரோவாக நடிக்க வேண்டும்?
இங்கே வரும் போது என்னிடம் எதுவும் இல்லை. நேர்மையாக உழைப்போம் என்பது மட்டும்தான் மனசு முழுக்க இருந்தது. அந்த உழைப்பு மட்டும்தான் எல்லாவற்றுக்கும் காரணம். கவிதை, எழுத்து என் உலகம் எப்போதும் தனி. இப்போது இருக்கிற இந்த இடம் கூட நாளைக்கு இல்லாமல் போய்விடலாம்.
ஆனால், அப்போதும் கூட என் திறமை, உழைப்பு மட்டுமே என்னை முன்னெடுக்கும். இட்லி கடை போட்டால் கூட அதில் நம்பிக்கை வைத்து உழைப்பேன்.
நீங்கள் ஏன் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்கிற கேள்வி போகிற இடமெல்லாம் வந்து கொண்டேதான் இருக்கிறது. காலையில் இட்லி சாப்பிட்டேன். மதியமும் நான் ஏன் இட்லி சாப்பிட வேண்டும்? அது மாதிரிதான் இதுவும்.
இந்த இடம் போதும் என்று நினைத்து விட்டால், வாழ்க்கையில் சலிப்பு வந்துவிடும். இதுதான் வேலை என எதுவும் இங்கே விதிக்கப்படவில்லை. தொடாத இடங்கள், மீளாத கனவுகள் என ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல் இருக்கிறது. வாழ்க்கை ஒரு தேடல் என்பார்கள். அப்படி தேடிப் பிடித்த இடம் தான் ஹீரோ. இன்னும் கூடுதலாக இதில் இயக்குநர் பொறுப்பு வேறு.
ஒருவேளை இதில் என் முதல் முயற்சி தோல்வியடைந்து இருந்தால், வேறு மாதிரி யோசித்திருக்கலாம். அப்படி எதுவும் நடக்கவில்லையே?
அப்படியென்றால் ஏதோ ஒரு இடம் இங்கே காத்திருக்கிறது. அது கண்ணுக்கு தெரிகிறது. நாம் தேடுகிறோமா என்பதுதான் இங்கே முக்கியம். அதுவும் இல்லாமல் பாட்டுத் தொழில் முன்பு மாதிரி இல்லை.
என்ன சொல்றீங்க...?
ஆமாம், பாட்டு எழுதுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது. இப்போதே சுமார் 40 பேர் வரை இருப்பதாக நினைக்கிறேன். இப்போதைய சினிமா சூழலில் இந்த அனைவருக்குமே பாடல்களைப் பிரித்து கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு பாடலாசிரியர், படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதுவது என்பது குதிரை கொம்பு. வாலி, வைரமுத்துவின் இடங்களை இனி யாரும் தொட முடியாது. சொல்லப் போனால், இனி வருகிற ஒரு பாடலாசிரியரால் எங்கள் இடங்களையே தொட முடியாத சூழல்தான் இருக்கிறது. அதுவுமில்லாமல் பாட்டுத் தொழிலை நம்பி இனி காலம் தள்ள முடியாது. சூழலுக்கு பாட்டு எழுதிய காலம் போய், எழுதிய பாடல்களுக்காக சூழல்களை உருவாக்கி கொள்கிறார்கள். "ஒவ்வொரு பூக்களுமே...', "இன்னும் என்ன தோழா...' மாதிரியான சூழல்கள் எனக்கு இனிமேல் அமையுமா என்றே தெரியவில்லை. இதுதான் இன்றைய பாட்டுச் சூழல்.
எப்படி வந்திருக்கிறது படம்...?
நம் ஒவ்வொருத்தருக்குள்ளும் ஆறாத வலி ஒன்று இருந்துக் கொண்டே இருக்கும். அந்த வலி ஏற்படுத்தும் பாதிப்புகள் நமக்குள் ஒரு கோபத்தை சாம்பல் மூடின தணல் மாதிரி பத்திரமாக வைத்திருக்கும். அந்த கோபத்தின் தணல் ஏற்படுத்தும் பாதிப்புகள்தான் படம். ஒன்லைன் ரொம்பவே சிம்பிள்தான். ஆனால், க்ரைம் த்ரில்லரில் திரைக்கதை ரொம்பவே முக்கியம். படத்தின் மேக்கிங் இன்னும் பலம். நம்மைச் சுற்றி நடந்து வருகிற சம்பவங்கள்தான். அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை கடந்து விடுகிற மனசு, எதாவது ஒரு பிரச்னையில் நின்று மிரட்சி காட்டி அதிர்ச்சி கொள்ளும். வேதனையில் துக்கப்படும். சங்கடம் கொள்ளும்.
அப்படி எனக்குள் இருந்த மன அழுத்தம்தான் கதை. போராடுவதும் வாழ்வதும்தானே மனிதனின் பேரழகு. அன்பும், போராட்டமும்தான் இந்த மானுடத்தின் நிரந்தரம். நல்லவனாக வாழத்தான் எல்லோருக்கும் ஆசை. ஆனால், காலம் எல்லாவற்றையும் கண்ணெதிரே கலைத்து போட்டு விட்டு ஒன்றும் தெரியாத சிறுப் பிள்ளை போல் ஓடி ஒளிந்து கொள்கிறது. நல்லவன் கெட்டவனாகிறான். கெட்டவன் நல்லவனாகிறான். எதை வெறுக்கிறமோ, அதை நேசிக்கிறோம். எதை விரும்பினோமோ, அதை வெறுக்கிறோம், ஒருவனை உயரத்தில் வைத்து, இன்னொருவனை குழிக்குள் தள்ளி, கேட்காததை கொடுத்து, கேட்டதை மறுத்து விளையாடுகிற இந்தக் காலம் ஒரு தனி மனிதனுக்கு என்ன பரிசளித்தது என்பதுதான் இங்கே கதைக்களம். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை இன்னும் அக்கறையாக முன் வைக்கும் திரைக்கதை.
நீங்களே இயக்குநரா....?
இன்னும் கவனமாக செய்யலாமே. அதுதான். விடாப்பிடியாக பிடிவாதம் கிடையாது. பாடல், ஆக்ஷன், அன்பு என நல்ல இடத்துக்கு வரும் படமாக இது இருக்கும். எதுவும் இல்லாமல் வந்தவன் நான். ஒவ்வொரு படத்தில் நடிக்கும்போதும் அது மக்களுக்கான விஷயமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதுதான் சந்தோஷம். இந்த படத்தின் திரைக்கதையில் அதிகம் ஈடுபாடு காட்டியதற்கு அதுதான் காரணம். சுவாரஸ்யமாக, அதே நேரத்தில் பொறுப்புள்ள சினிமா எது என்பதில் உங்களுக்கு ஒரு கருத்திருக்கும். எனக்கு ஒரு கருத்திருக்கும். ஆனால், நாம் இரண்டு பேரும் ஒத்துப்போகிற ஓர் இடம் வருமில்லையா? அந்த இடத்தில் "ஆருத்ரா' இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...