சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 9: உற்சாகமான நான்கு மணிநேரங்கள்
மார்ச் மாதம் என்பதால் கோவாவில் சூரியன் சற்றே சூடாகத் தகித்தார். நானும் என் கணவரும், ஜோசப்புடன் பட்டோ பிரிட்ஜை (Patto Bridge) நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.


மார்ச் மாதம் என்பதால் கோவாவில் சூரியன் சற்றே சூடாகத் தகித்தார். நானும் என் கணவரும், ஜோசப்புடன் பட்டோ பிரிட்ஜை (Patto Bridge) நோக்கி நடந்து கொண்டிருந்தோம்.
""மேடம், மணி பகல் நான்கு மணி ஆகின்றது. கோவா கார்னிவெல் ஊர்வலம் தொடங்க இன்னும் சிறிது நேரம் ஆகும். அதனால் உங்களை ஒரு ரெஸ்டாரண்ட்டுக்கு அழைத்துப் போகிறேன். அங்கே சுடச்சுட சன்னாவை (நஹய்ய்ஹ) சாப்பிட்டு விட்டு சூடாக ஒரு டீயையும் குடித்துவிட்டு செல்லலாம். அப்போதுதான் மூன்று மணி நேரம் நீடிக்கும். கார்னிவெல் ஊர்வலத்தை நின்றுகொண்டு காணத் தேவையான எனர்ஜி இருக்கும்'' என்றார் ஜோசப்.
""சன்னாவா, அப்படிப்பட்ட ஐட்டத்தை இதுவரையில் சாப்பிட்டதே இல்லையே'' என்றேன்.
""இது எங்களுடைய பாரம்பரிய உணவு. வெண்மையாக, வட்ட வட்டமாக பஞ்சுப்போல இருக்கும் ரொட்டி. இது அழகில் மட்டும் அல்ல சுவையிலும் மயக்கும்'' என்று சொல்லும்போதே ஜோசப்புக்கு அதிகமாக உமிழ்நீர் சுரந்தது.
""இந்த சன்னாவோடு, போர்ச்சுக்கீசியர்கள் அறிமுகப்படுத்திவிட்டு சென்ற சர்போடெல் (Sorpotel) என்ற ரெட் மீட் கரியும் (Red meat curry) சேர்ந்து கொண்டால்'' என்று ஜோசப் முடிக்கும் முன், "சொர்க்கம் நம் கையிலே...' என்று நான் பாடத் தொடங்க, ஜோசப்பும், என் கணவரும் என்னோடு இணைந்து பாட ஆரம்பித்தனர்.
அரிசி மாவு, தேங்காய் கலவையோடு சிறிது பனங்கள்ளையும் சேர்த்து பிசைந்து, உருட்டி ஆவியில் வேக வைத்து கொடுக்கப்பட்ட சன்னாவுக்கு என் நாக்கு அடிமைப்பட்டுப் போனது. இதனை சாப்பிடும் பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஜோசப்பை எங்கள் மனம் வாழ்த்தியது.
நிறைந்த வயிறுடனும், மனதுடனும் பட்டோ பிரிட்ஜ் அருகே கார்னிவெல் தொடங்கும் இடத்திற்கு சென்று நின்று கொண்டோம். என் கையில் கேமரா, என் கணவரோ வீடியோ கேமராவை வைத்து ஆங்கிள் பார்த்துக் கொண்டிருந்தார்.
எங்களைச் சுற்றி ஒரே கூட்டம் சாலைகளின் இருபுறங்களிலும் மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் முகங்களில் மகிழ்ச்சி கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. நவீன ஆடைகள் அணிந்து கலக்கிக் கொண்டிருந்தார்கள். விதவிதமான முகமூடிகள், தலைக் கவசங்கள், பறவைச் சிறகுகளால் ஆன தொப்பிகள், பல வண்ணங்களில் கண்களைப் பறித்தது.
சிலர் டிரம்சைத் தட்டிக் கெகண்டிருந்தனர். "பீ, பீ' என்று காதுகள் கிழியும்படி சில இளவட்டங்கள் ஊதுகுழல்களை வைத்து ஊதிக் கொண்டு பைக்குகளில் பறந்தனர். பெண் ஒருவர் பல வண்ண பலூன்களை கைகளில் ஏந்தி பரபரப்பாக அங்கும், இங்கும் நடை பயின்றார். சிறிது நேரத்தில் கேமராக்களுடன் பத்திரிகையாளர்கள் குழு "திமு திமு' என்று வந்து சூழ்ந்து கொண்டனர்.
பல வெளிநாட்டவர்கள் அது கோடை காலமாக இருந்ததால் அரைகுறை ஆடைகளுடன் வந்து சேர்ந்தனர். கிறிஸ்தவர்கள் மட்டுமா அங்கே இருந்தார்கள்? கோவன்ஸ், கொங்கணி, மராட்டியர்கள் என்று சாதி, மத பேதம் இன்றி சூழ்ந்து நின்றனர்.
"டம், டம்' என்று பேண்ட் சத்தம் கேட்டதும் எல்லோரும் அந்த திசை நோக்கி திரும்பி நின்றுகொண்டனர். அட, அதோ முகப்பில் அரசர் நெப்டியூனின் (சங்ல்ற்ன்ய்ங்) முகம் பதிக்கப்பட்ட, பெரிய ஃபைபர் கிளாசினால் ஆன ஊர்தி ஒன்று பேண்டு வாத்தியங்களுக்குப் பின்னால் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. அதன் மேல் அரசர் உடையில் "கிங் மோமோ' நின்றிருந்தார்.
"யார் இந்த கிங் மோமோ?' என்று தலையைச் சொரிந்து கொள்ளாதீர்கள். அவர்தான் இந்த கார்னிவெலின் தலைவர். லேட்டின் அமெரிக்காவில் தொடங்கிய இந்த கிங் மோமோவைக் கொண்டு கார்னிவெல்லைத் தொடங்கும் பழக்கம், பிரேசில், கொலம்பியா என்று பரவி போர்ச்சுகீஸ் மற்றும் அவர்கள் கீழ் இருந்த கோவாவிற்கும் வந்துவிட்டு இருக்கிறது.
ஒரிஜினல் கிங் மோமோ குண்டாக உயரமாக இருந்தாராம். அந்த உருவ ஒற்றுமையோடு கூடிய "சீசர் டி மெலோ' (Cesar De Mello) விவா கார்னிவெலை (Viva carnival) தொடங்கி வைக்க, (இந்த ஆண்டின் கோவா கார்னிவெலின் பெயர்தான் "விவா') சஞ்செய் ஸ்ரீவத்சா, கோவாவின் சீஃப் செக்ரட்டரி கொடியை ஆட்டி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.
கைகளில் பிடித்திருந்த பலூன்களை நான் முன்னே கூறிய அந்தப் பெண் விடுவிக்க, வானத்தை நோக்கி பல திசைகளில் அவை பறந்தன. சுற்றியிருந்த மக்களின் கரகோஷம் காதுகளைப் பிளந்தது.
கிங் மோமோ உற்சாகமாக கைகளை ஆட்டினார். அவரின் வலதுபுறம் ராணியும், இடது புறம் அழகிய பெண் ஒருவரும் நின்று சுற்றி இருந்த மக்களைப் பார்த்து கைகளை ஆட்ட நானும் என் கைகளை மகிழ்ச்சியோடு ஆட்டினேன்.
இதைத் தொடர்ந்து ஊர்திகளின் அணிவகுப்பு தொடர்ந்தது. கற்பனைத் திறனோடு உருவாக்கப்பட்ட அந்த ஊர்திகளில் பலவிதமான கிராமிய நடனங்கள், இசைக்கருவிகளோடு கூடிய ஜாஸ் நடனங்கள் சூழ்ந்திருந்த மக்களை உற்சாகக் கரகோஷம் செய்ய வைத்தது.
இந்த ஊர்திகளுக்கு இடைப்பட்ட இடத்தில் கோமாளிகளின் சேஷ்டைகள், ஒருபுறம் பெண் வேடமிட்ட ஆண்கள் கவுன், ஸ்கர்ட், புடவை என்று அணிந்து இடுப்பை குலுக்கி ஆட அங்கே எழுந்த சிரிப்பலை ஓய வெகு நேரமாகியது.
பள்ளி மாணவர்கள் கோவன் இசைக்கு கைகளில் மலர்க் கொத்துகளை ஏந்தி ஆடினார்கள். ஒரு ஊர்தியில் மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் பவனி வந்தனர். அவர்கள் முன்னே பலகாரக் கூடைகள், செஃப் போல வேடமிட்ட ஆண்கள் பிரெட், பிஸ்கெட், கேக் வகையறாக்களை சுமந்து சென்றனர். ஒரு நபர் வளையல்காரராக பெண்களுக்கு வளையல் இட்டபடி சென்றார். ஊர்தியிலிருந்த சாக்லேட்டுகள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பல பரிசுப் பொருட்கள் என்று வாரி அள்ளி கூட்டத்தை நோக்கி வீச மக்கள் அதைக் கேட்ச் பிடிக்க ஒரே வேடிக்கைதான்.
இரவு ஏழு மணியையும் தாண்டி நீடித்த கொண்டாட்டத்தை எப்படி நாலு வரிகளில் எழுதுவது. போட்டோ எடுத்து எடுத்து கைகள் சோர்ந்து போயின. நின்று கால்கள் கடுத்தன. ஆனால் கார்னிவெல் ஊர்வலம் முடிந்தபோது இனம் புரியாத ஏக்கம் ஏற்பட்டது. "இன்னும் சிறிது நேரம் நீடிக்காதா இந்த கொண்டாட்டங்கள்' என்று மனம் அடித்துக்கொண்டது.
பனாஜியில் தொடரும் இந்த கார்னிவெல், மாபூசா, மார்கோ, வாஸ்கோடகாமா என்று கோவாவின் பல முக்கிய நகரங்களிலும் அரங்கேறுகிறது.
இந்த நான்கு நாட்களும் கோவா குலுங்கி மகிழ்கிறது. கார்னிவெல்லின் கடைசி நாள் இரவு கிளப் நேஷனல்' என்ற கிளப்பில் இரவு "ரெட் அண்டு பிளாக்' டான்úஸாடு கார்னிவெல்லுக்கு டாட்டா சொல்கிறார்கள் கோவா மக்கள். கருப்பு, சிவப்பு ஆடைகளை அணிந்துகொண்டு வரும் மக்கள் கூட்டம் முதலில் விருந்து உண்ணும். பிறகு விடிய விடிய நடனம் ஆடும், அங்கே முழங்கும் இசைக்கு ஏற்ப! நாங்களும் கருப்பு, சிவப்பு அணிந்து சென்றோம்.
கோவா தெருக்களில் பல வண்ண விளக்குகள், நாடகங்கள், தெருமுனைகளில் ஜாஸ் கச்சேரிகள், காசினோக்களில் ஸ்பெஷல் ஆட்டங்கள், வயிறு நிறைய கிடைக்கும் பலவிதமான கோவா உணவுகள், கோவாவோடு கோவா கார்னிவெல்லும் கைகளை ஆட்டி நம்மை "வா வா' என்று அழைக்கிறது.
அடுத்த இதழில்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...