அலைகடலும் ஆழ்கடலும் அவர்கள்தான்!
''எங்கேயோ அந்த போஸ்டரைப் பார்த்தேன். புலி ஒன்று ஆக்ரோஷமாக மானைத் துரத்தும் படம்.


''எங்கேயோ அந்த போஸ்டரைப் பார்த்தேன். புலி ஒன்று ஆக்ரோஷமாக மானைத் துரத்தும் படம். "நீ மானாக இருந்தால், புலியைவிட வேகமாக ஓடு. நீ புலியாக இருந்தால், மானைவிட வேகமாக ஓடு'... அந்த வரிகள் என்னைப் பாதித்தது. ஏனென்றால் என் வாழ்க்கையே அதுதான்!'' } ஆழமாகவும் அழுத்தமாகவும் பேசுகிறார் ஜிப்ரான். தற்கால சினிமா இசையில் தவிர்க்க முடியாத பெயர்.
"அறம்', "தீரன் அதிகாரம் ஒன்று' படங்களில் உங்கள் இசையை ரொம்பவே ரசித்தோம்... வாழ்த்துகள்...?
இரண்டு படங்களிலும் இருந்த உணர்வுகள்தான் இதற்கு காரணம். உணர்வுகளை இதயத்துக்குள் கடத்துவதுதான் இசையின் வேலை. இந்தப் படங்களிலும் அது நன்றாகவே நடந்திருப்பதாக உணர்ந்தேன். அந்தப் படங்களை அதுவரை சிக்காத எலைட் ரசிகர்களைப் பிடிக்கிறதுக்காகப் செய்தேன். இரண்டுமே நிறைய ரசிகர்களை எனக்குக் கொண்டு வந்துள்ளது. "அறம்' படத்தில் "தோரணம் ஆயிரம்...', "தீரன் அதிகாரம் ஒன்றி'ல் "லாலி லாலி....' என இரு பாடல்களும் பலராலும் விரும்பி கேட்கப்படுவதாகச் சொன்னார்கள். மகிழ்ச்சி. இரண்டு பாடல்களிலும் இசைக்கான ஜீவன் பொருந்தி வந்தது. அதைப் போலவே தீரனில் பின்னணி இசை நன்றாக வந்திருந்தது. ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஆரம்பிக்கும் கதை. இடைவேளைக்குப் பின், தடதடத்து பயணிக்க வேண்டும். அதை உணர்ந்து அதற்கு பின்னணி இசை கொடுத்தேன். "அறம்' கோபி நயினார், "தீரன் அதிகாரம் ஒன்று' வினோத் என வாய்ப்பு கொடுத்த இயக்குநர்களுக்கும் நன்றி. மற்றபடி எதையும் சாதித்துவிட்டதான பெருமிதம் ஒரு சதவீதம்கூட என்னிடம் இல்லை. உள்ளத்துக்கும் உலகத்துக்கும் உண்மையாக வாழ்ந்தால் அதுதான் வெற்றி.
ரொம்பவே தன்னடக்கத்துடன் பேசுறீங்க...?
என் உயரம் எனக்குத் தெரிவதுதான் இதற்கு காரணம். கோயம்புத்தூரில் பள்ளிக்கு போகும்போதே இசை மேல் ஆர்வம். இசைப் போட்டிகளில் நிறைய வெற்றி பெற்று வந்திருக்கிறேன். ஆனால், 10}ஆவது படிக்கும்போது அப்பாவுக்கு தொழிலில் பெரிய நஷ்டம். ஊரைக் காலி செய்து விட்டு சென்னைக்கு வந்து விட்டோம். மெடிக்கல் ரெப் வேலைக்குப் போனேன்.
ஆனாலும், இசை மேல இருக்கும் ஆர்வம் மட்டும் குறையவில்லை. வேலை முடிந்ததும் கீ}போர்ட்டில் 8}ஆவது கிரேட் வரை கற்றுக் கொண்டேன். கூடுதல் வருமானத்துக்காக குழந்தைகளுக்கு இசை டியூஷன் எடுத்தேன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனிமேஷன் விளம்பரத்துக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்தது. அடுத்தடுத்து நிறைய விளம்பர வாய்ப்புகள்.
500 விளம்பரங்கள் வரை இசையமைத்தேன். அடுத்ததாக சினிமாவுக்கு இசையமைக்க ஆர்வம் வந்தது. "அதற்கு இன்னும் இசை கற்றுக் கொள்ள வேண்டும். சிங்கப்பூர் இசைக் கல்லூரியில் சேர ப்ளஸ் டூ பாஸ் செய்திருக்க வேண்டும்' என்று சொன்னார்கள். அதனால் 26 வயதில் பிளஸ் டூ எழுதி பாஸ் செய்து அங்கே சேர்ந்தேன். மூன்று வருடப் படிப்பு முடிந்து திரும்ப சென்னைக்கு வந்தேன். என்னுடன் விளம்பரங்களில் வேலை பார்த்த சற்குணம், "வாகை சூட வா' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். இதுதான் நான். வேறு என்ன இருக்கிறது நான் சொல்ல?
அடுத்து கமலின் "விஸ்வரூபம் } 2' பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கு... எப்படி வந்திருக்கிறது படம்...?
என் வாழ்க்கையின் பெரிய ஆச்சரியப் பரிசு அது. ""விஸ்வரூபம்' இரண்டாம் பாகத்துக்கு நீதான் இசை'' என்று வைரமுத்து சார் சூசகமாச் சொல்லிக் கொண்டே இருந்தார். "குட்டிப் புலி' பாடல் பதிவு செய்யும் போது, ""கமலுக்கு "வாகை சூட வா' இசை ரொம்பவே பிடித்திருந்தது'' என்று சொன்னார். ""அவருக்கு உங்க மேல ஒரு கண்ணு'' என்று ஒருநாள் சிரித்துக் கொண்டே சொன்னார். இன்னொரு நாள், ""அவர் உங்களை மைண்ட்ல வைத்திருக்கிறார்'' என்றார். எதுக்கு நாமளே ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று வைரமுத்து சார் சொன்ன எதையும் நான் மனசுல ஏற்றிக் கொள்ளவில்லை. அப்போதுதான் "குட்டிப் புலி' படம் வெளியானது. படத்தின் பின்னணி இசையில் இளையராஜா சாரின் "பொன்னோவியம்...' பாட்டின் இசையை இயக்குநர் சேர்க்கச் சொன்னார். டைட்டில் கார்டில் இளையராஜா சார் பேரைச் சேர்த்திருவாங்க என்று நினைத்து, அனுமதிச்சேன். ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை. டைட்டிலில் இளையராஜா சார் பேரைச் சேர்க்கவில்லை. நான் ஏதோ இளையராஜா பின்னணி இசையைத் திருடி விட்டேன் என்று சொல்லுவார்களே என்று தோன்றியது. ரொம்பவே சோர்ந்து போய் எல்லா வேலைகளையும் தூக்கிப் போட்டுவிட்டு பிரேயர் செய்து கொண்டு இருந்தேன். அப்போதுதான் கமல் சார் தரப்பிலிருந்து போன். "உடனே தில்லிக்கு கம்போஸிங் செட்டப்போட கிளம்பிப் போங்க'னு சொன்னார்கள்.
முதல் சந்திப்பில் இருந்து இப்போது வரை கமல் என்ன சொன்னார்...?
அவருடன் வேலை பார்ப்பதே பெரிய உற்சாகம். படத்தின் இயக்குநரோடு அமர்ந்து நான் இசைப் பணி மேற்கொள்வது கிடையாது. அதனால் எனக்கு கொஞ்சம் உதறல் இருந்தது.
பயந்து கொண்டே கமல் சாரை பார்க்கப் போனால், அவர் ரொம்பவே எளிமையாக பழகினார். சற்குணம் கூட வேலை பார்த்த போது, எப்படி சுதந்திரமாக இயல்பாக இருந்தேனோ, அப்படி இருந்தது. படத்துக்கான இசை முழுமையாக முடிந்து விட்டது. மற்ற பணிகள் அமெரிக்காவில் நடக்கிறது. கமல் சாருக்கு என் இசை பிடித்து விட்டது.
அறைக்குள்ளேயே இசைப் பணியை முடித்து விடுவீர்களாமே...?
வெளிநாடு போகிற பழக்கம் எனக்கு கிடையாது. விருகம்பாக்கம் ஸ்டுடியோவில்தான் இசை உருவாகும். இயக்குநர் சூழ்நிலையைச் சொன்னதும் உடனே இசையமைப்பை தொடங்கி விட மாட்டேன். கொஞ்சம் நேரம், காலம் எடுத்துக் கொண்டு யோசித்துதான் இசையமைப்பேன்.
நமக்கு எல்லாமே இளையராஜாதான். பறவைகள் தடயங்களே இல்லாமல் போய் விடுகின்றன. அவற்றின் எச்சங்கள் மரங்களாவதைப் போலத்தான் இசையும், பாடல்களும். இசையின் எல்லா நுணுக்கங்களையும் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தொட்டு விட்டார்கள். அலைகடலும் ஆழ்கடலும் அவர்கள் என்றான பின், கரைகளும், நுரைகளும் என்னவாகும்? இருந்தாலும் அவர்கள் தொடாமல் விட்ட ட்யூன்களைப் பிடிக்க ரொம்பவே மெனக்கெட வேண்டும். இரவில் மட்டும்தான் ட்யூன் போடுவேன். ஏனென்றால், அப்போதுதான் மொபைல் தொல்லை இருக்காது.
படத்துக்கு பாடல்கள் தேவையில்லை என்று கருத்து வெகு காலமாக பரவலாக இருந்து வருகிறது.... ராஜா சார் இருந்தும் "நாச்சியாரி'ல் பாடல்கள் இல்லையே?
இந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. 1990}களில், பாடல்கள் இல்லாமல் படம் வரும் சூழல் உருவானது. ஆனால், அப்போது உள்ளவர்கள் அந்தச் சூழலை வளரவிடலை.
ஒரு படத்தில் எட்டு, ஒன்பது பாடல்கள் வரும். இப்போது அது மூன்று, நான்கு என்ற அளவில் குறைந்திருக்கிறது. சீக்கிரமே பாடல்களே இல்லாத படங்கள் தமிழில் வர ஆரம்பிக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...