டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

வெயில் மூர்க்கமாகத் தலையில் இறங்கும் வாழ்க்கை!

''பத்து கமர்ஷியல் படங்கள் வந்தால், அதற்கு நடுவில் ஒரு நல்ல சினிமா வர வேண்டும் என விரும்புகிறவன் நான். 

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:49 pm

ஜி. அசோக்

''பத்து கமர்ஷியல் படங்கள் வந்தால், அதற்கு நடுவில் ஒரு நல்ல சினிமா வர வேண்டும் என விரும்புகிறவன் நான். 

அப்படியான ஏதோ ஒரு நல்ல சினிமாதான் இத்தனை இயக்குநர்களையும் கோடம்பாக்கத்துக்கு இழுத்துக் கொண்டு வந்திருக்கிறது. ஊரை, உறவை, காதலை விட்டு விட்டு இங்கே ஓடிவந்து ஒவ்வொரு நிமிஷமும் கஷ்டப்படுவது, அந்த மாதிரி ஒரு நல்ல சினிமாவைக் கொடுக்க வேண்டும் என்கிற வேட்கைதான் காரணம். உலக பதம்.. உலக பதம் என்பதை தாண்டி, தமிழ் பதம் என்பதை நிரூபிக்கும் படங்களில் இதுவும் இடம் பிடிக்கும்''. அறிமுகப் படத்திலேயே அவ்வளவு நம்பிக்கை வார்த்தைகளை முன் வைக்கிறார் இயக்குநர் மாரிமுத்து. "தொரட்டி' படத்தின் இயக்குநர். பாக்யராஜின் மாணவர்.

அதென்ன "தொரட்டி'....?

கிடை போட்டு வாழும் சமூகத்துக்கு முக்கிய ஆதாரமே தொரட்டிதான். பெரிய கம்பின் முனையில் சிறு அரிவாள் கட்டி வைத்திருப்பார்கள். ஆடுகளை மேய்க்கும்போது, அதற்கான இலை, தழைகள், கருவக்காய் என குலைகளை இழுத்து போட்டு அதற்கு உணவளிப்பதுதான் தொரட்டியின் வேலை. அதே நேரத்தில் அது அந்த மனிதர்களின் கௌரவம். இது கிடை போட்டு பிழைக்கும் மனிதர்களின் கதை. பழங்கால விவசாயத் தொழில்களில் முதன்மையான இடம் இந்த கிடைத் தொழிலுக்கு உண்டு. செயற்கை உரங்கள் கண்டுபிடிக்கப்படாத காலக்கட்டத்தில், கிடை போட்டுத்தான் நிலங்களுக்கு உரம் பிடிக்க வேண்டும். ஆடு மற்றும் மாட்டு மந்தைகளை நிலங்களில் அடைத்து வைத்து, அது போடும் கழிவுகளை உரமாக கொண்டு விவசாயம் செய்து வந்தோம். இதுதான் நம் ஆதி விவசாயமாக இருந்து வந்தது. இப்போது நிலை வேறு மாதிரி ஆகி விட்டது. எல்லாவற்றிலுமே செயற்கை. விளைவு பாம்பு, தவளை, மீன், நண்டு, மண் புழு என எந்த உயிரினங்களுமே இப்போது நிலத்தில் இல்லை. எல்லாவற்றையும் செயற்கை உரத்துக்கு பலியாக்கி விட்டோம். கிடை போடும் கூட்டத்தினர் இங்கே தஞ்சாவூர் தொடங்கி எல்லா விவசாய ஊர்களுக்கும் வந்து போவார்கள். ராமநாதபுரம் தொடங்கி நாகை வரை கால்நடையாகவே ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு வரும் இவர்கள், கிராமங்களில் தங்கி அந்த ஊர் நிலங்களில் கிடை போட்டு வருமானம் ஈட்டுவார்கள். இதுதான் களப் பின்னணி. அதை 80-களின் காலக்கட்டத்துக்கே கொண்டு சென்று ஒரு கதை சொல்லியிருக்கிறேன்.

80-களின் பின்னணி, கடுமையான உழைப்பு, சின்சியர் மேக்கிங்... பெரும் உழைப்பு தேவைப்படுமே....?

எனக்கு ஊர் நெல்லைக்கு பக்கத்தில் கிராமம். எங்கள் ஊருக்கு கிடை போட்டு பிழைப்பு நடத்த வந்த ஒரு குடும்பத்தின் கதைதான் இது. சிறு பிள்ளையாக இருக்கும் போது எனக்கு செவி வழியாக வந்த சேர்ந்த செய்தி இது. வெகு நாள்களாகவே உள்ளுக்குள் கிடந்து உறுத்திக் கொண்டே இருந்தது. சினிமாவுக்கென கதையாக திரிக்கும் போது, அதற்குள் சில கற்பனைகளை சேர்த்து திரைக்கதையாக்கிப் பார்த்தேன். அவ்வளவு ரசிப்பு தன்மை, சோகம், காதல்... என அவ்வளவு அழகான வாழ்க்கை இருந்தது. அதுதான் இது. அதே நேரத்தில் நட்பு, மோதல், துரோகம் என பல விஷயங்களை இது அழுத்தமாக பேசும். இது நம்மில் பலர் பார்த்து பழகாத வாழ்க்கை. இப்படி ஒரு விஷயம் இருந்தது என பலர் மறந்தே இருப்பார்கள். ஆனால் அதற்காக எதையும் வலிந்து திணிக்கவில்லை. படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் அந்த வாழ்க்கைக்குள் கடத்தி செல்லும் முனைப்பில் உழைப்பை வைத்திருக்கிறேன். இதை நினைத்தப்படியே உருவாக்க முடியுமா என்று எனக்குள்ளே ஏகப்பட்ட கேள்விகள். நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தில் இருந்து இந்த சினிமாவுக்கான கதையை எடுத்தேன். காடு, மலை, இரவு, பகல் என்று நேரம் பார்க்காமல் சுற்றி மனிதர்கள். இப்போது செருப்பு இல்லாமல் வெறுங்காலில் பத்து அடி கூட நம்மால் நடக்க முடியவில்லை. பழக்கப்பட்ட குடிநீர் மாறினால், உங்களுக்கும் எனக்கும் வைரல் ஃபீவர் வந்துடுது. ஆனா, அன்றைய மனிதர்களின் அசாத்திய வாழ்க்கை மலைக்க வைத்தது. அதை கொண்டு வர நினைத்தேன். அதற்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. சுமார் ஆறு மாத காலம் நடிகர்கள் பயிற்சி பெற்று தயாராகி வந்தார்கள். 

நம்பகமான நடிகர்கள் இருந்தால் நன்றாக இருந்திருக்குமே...?

நினைத்தப்படியே கிடைத்தார்கள். அதுதான் இந்தப் படத்தின் பலம். தெரிந்த முகங்கள் இருந்திருந்தால் நன்றாகவே இருக்கும். ஆனால் சினிமாவுக்காகவே பல காலமாக காத்திருப்பவர்களை துணைக்கு வைத்துக் கொண்டேன். ஷமன்மித்ரு. இவர்தான் கதாநாயகன். கே.வி. ஆனந்த் சாரிடம் உதவியாளராக பணியாற்றிவர். "மாயன்' என்ற வேடம். முக்கியமான வேடம். அந்த வேடத்தில் அவர் நடித்திருக்கிறார். பொள்ளாச்சியைச் சேர்ந்த சத்யகலா ஹீரோயின். கேட்கும் தேதிகளில் நடித்துக் கொடுக்க முன் வந்தவர்கள் எல்லோருமே புதுமுகங்களாகவே இருந்தார்கள். காரணம், இது இத்தனை நாள்களுக்குள் முடிக்க வேண்டும் என்ற எந்த திட்டமும் கிடையாது. நிறைய பயணிக்க வேண்டி இருந்தது. செல்போன் கோபுரம், கேபிள் வயர், போக்குவரத்து நெரிசல்கள் என தற்கால சூழல் எந்த இடத்திலும் இருக்கக் கூடாது. போய் கொண்டே இருப்போம். திடீரென்று ஓர் இடம் பொருந்தி வரும். அங்கே கேமிரா வைப்போம். அவர்கள் நடிப்பார்கள். நடிகர்கள் ரத்தம் சிந்தாத நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். உச்சி வெயிலில் செருப்பு அணியாமல், சட்டை போடாமல், வெற்றுடம்பில் ஒரே ஒரு அழுக்கு வேட்டியுடன், உடல் முழுக்க டாட்டூ வரைந்து என அவர்களுக்கு முதல் ஷாட் வைக்கவே 11 மணியாகிவிடும். அதற்கு அவர்கள் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். படப்பிடிப்பு முடிந்து வேடம் கலைத்துப் படுப்பதற்குள் நள்ளிரவு ஆகிவிடும். ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், அவர்களின் உழைப்பு அபாரம்.

முதல் படத்திலேயே இப்படியொரு சோதனை முயற்சி.... அவசியமா....?

ஒரு வருஷத்தில் நூற்றுக்கணக்கில் வெளியாகும் படங்களில், தமிழ் அடையாளமும் பண்பாடும் எத்தனை சினிமாக்களில் இருக்கு? கொரிய இயக்குநர் கிம் கி டுக் இயக்கிய ‘ஙர்ங்க்ஷண்ன்ள்' படத்தைப் பார்த்துவிட்டு பரவசத்திலேயே கிடந்தேன். தமிழில் அந்த மாதிரி ஒரு படம் வரணும்னு ஆசைப்படுறது தப்பா? நாம் வாழும் வாழ்க்கையை நம் சினிமாக்களும் அழுத்தமாப் பிரதிபலிக்க வேண்டும். நிசப்தத்தால் ஒரு காட்சியைச் சொல்வது நம்ம வழக்கம் இல்லை. நமது வாழ்க்கை ரொம்பவே இரைச்சலானது. நாம் சத்தமாகப் பேசக்கூடியவர்கள். நமது படங்களில் அந்த இரைச்சலும் சத்தமும் இருக்கணும். வெயில் மூர்க்கமாகத் தலையில் இறங்கும் வாழ்க்கை நம்முடையது. நாம் தொடர்புகொள்ளும் மொழி, வாழ்க்கைமுறை எல்லாத்தையும் பிரதிபலிக்கிற சினிமாக்களைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.