புதுமை..! சலூனில் ஒரு நூலகம்...!
சிகை அலங்கரிக்கும் சலூனில் நடிகைகளின் கவர்ச்சி படங்கள் இருக்கும். நடிகர்களின் படங்கள் இருக்கும்.


சிகை அலங்கரிக்கும் சலூனில் நடிகைகளின் கவர்ச்சி படங்கள் இருக்கும். நடிகர்களின் படங்கள் இருக்கும். சில சலூன்களில் அரசியல் தலைவர்கள் படங்கள் தொங்கும். திரைப்படப் பாடல்கள் ஒலிக்கும். அரசியல் விமர்சனங்கள்
நிகழும். வேறு லெவலில் ஆடம்பரமாக இருக்கும் சலூன்களில், இரு பாலரும் போவார்கள். ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் சிகை அலங்காரம் செய்வார்கள். அங்கே வழு வழு தாளில் சிகை அலங்காரம் தொடர்பான வண்ணப்படங்கள் அடங்கிய ஆங்கில பத்திரிகைகள் பல விரிந்து கிடைக்கும். தவழும் மெல்லிசை செவிகளில் இதம் சேர்க்கும். விதம் விதமான சிகை அலங்காரங்களில் மாடல்களின் படங்கள் சுவர்களை அலங்கரிக்கும். விசாலமான டிவியில் சத்தமில்லாமல் படம் ஓடிக் கொண்டிருக்கும்.
தென்கோடி தூத்துக்குடியில் மில்லர்புரத்தில் செயல்பட்டுவரும் "சுசில்குமார் அழகு நிலையம்' எல்லா வகை சலூன்களிலிருந்தும் முற்றிலும் வித்தியாசமானது. இந்த சலூனில் திருவள்ளுவர், மகாத்மா காந்தி, விவேகானந்தர், பாரதியார், டாக்டர் அப்துல் கலாம் படங்கள் அலங்கரிக்கின்றன. காலையும் மாலையும் சுகி சிவம், பர்வீன் சுல்தானா, தமிழருவி மணியன், நெல்லை கண்ணன், ராமலிங்கம் போன்ற பேச்சாளர்களின் சொற்பொழிவுகள் ஒலிபரப்பாகின்றன. குறிப்பாக "புத்தகங்களே துணை..' என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் செய்த சொற்பொழிவும் தவறாமல் நாள்தோறும் இரண்டு முறை ஒலிபரப்பாகிறது.
இவை எல்லாவற்றையும் விட சலூனில் சுமார் நூற்றைம்பது நூல்கள் அடங்கிய சிறு நூலகம் ஒன்றினையும் உரிமையாளர் பொன் மாரியப்பன் ஏற்பாடு செய்திருக்கிறார். தலைவர்கள் எழுதிய நூல்களுடன், சாதாரண மக்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் கார்டு, மின் இணைப்பு, பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், குடிநீர் வசதியை எப்படிப் பெறுவது.. எப்படி விண்ணப்பிப்பது போன்றவற்றை விளக்கும் புத்தகங்களும், இந்திய சட்டம் குறித்த புத்தகங்களும் இவரது சேகரிப்பில் உண்டு, வேறு சலூன்களில் முடி வெட்டும் கட்டணம் எழுபது ரூபாயில் தொடங்கி எங்கோ முடியும் போது, பொன் மாரியப்பன் ஐம்பது ரூபாய்தான் வாங்குகிறார்.
வித்தியாசமான சலூனை வெற்றிகரமாக நடத்திவரும் பொன் மாரியப்பன் தான் மாற்றி யோசித்ததை விவரிக்கிறார்:
""வாழ்க்கையில் கடைநிலையில் இருக்கும் குடும்பம் என்னுடையது. அப்பாதான் அன்றைக்கும் சரி.. இன்றைக்கும் சரி. துணையாக இருக்கிறார். அவர் என்னுடன் இருக்கிறார் என்று சொல்வதைவிட , நானும் என் குடும்பமும் அவருடன் அவர் கட்டிய வீட்டில் வாழ்கிறோம் என்று சொல்வதுதான் பொருத்தம். படிப்பு எட்டாம் வகுப்புவரைதான். பள்ளி விடுப்பு காலங்களில் தாத்தா வீட்டிற்குப் போய் விடுவேன். தாத்தாவும் முடி திருத்துபவர்தான். குடும்பத் தொழிலாச்சே..! தாத்தாதான் கத்திரியைக் கையில் கொடுத்து "பிழைப்பை கத்துக்கோ' என்று முடி வெட்டுவதைச் சொல்லிக் கொடுத்தார்.
எட்டாவதுக்கு மேல் படிப்பில் நாட்டம் வரவில்லை. சம்பளத்திற்கு சலூனில் முடி வெட்டப் போனேன். இப்போது எனக்கு வயது முப்பத்தாறு. இரண்டு மகள்கள். ஒரு மகன். அனைவரும் படிக்கிறார்கள். நான்கு ஆண்டுகளாக தனியாகத் தொழில் செய்து வருகிறேன்.'
வயதாக வயதாக "படிக்கவில்லையே..' என்ற ஏக்கம் மனதில் தோன்ற ஆரம்பித்தது. படித்திருந்தால் வாழ்க்கை எப்படியெல்லாம் மாறியிருக்கும் என்று எண்ணக் குதிரை ஓடும்.. காலம் கடந்து போன நிலையில், பள்ளிப் படிப்பை இப்போது நினைத்துப் பார்ப்பதில் என்ன பலன்..? அந்த அந்த நேரங்களில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று விளங்க ஆரம்பித்தது. "போனது போகட்டும் பொது அறிவையாவது பெருக்கிக் கொள்வோம்' என்று நூல்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். கடையில் அரசியல் பேச மாட்டேன். முடிவெட்ட வருகிறவர்களிடமும் அரசியல் பேசக் கூடாது என்று நாசூக்காகச் சொல்லிவிடுவேன். தலைவர்களின் படங்களை வரிசைப்படுத்தி தொங்க விட்டேன்.
வாசிக்க ஆரம்பித்ததில் எனக்கு நூல் மூலம் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகமானார். யூடியூபில் "புத்தங்களே துணை' என்ற தலைப்பில் அவர் பேசியது எனக்கு மிகவும் பிடித்துப் போனது. தினமும் பலமுறை அந்த சொற்பொழிவைப் போட்டுப் போட்டு கேட்பேன். எனக்கு அலுக்காது. ராமகிருஷ்ணன் சொற்பொழிவை பதிவிறக்கம் செய்து கடை நேரங்களில் ஒலிபரப்ப ஆரம்பித்தேன். கையில் பணம் மிஞ்சும் போது பயனுள்ள நூல்களை வாங்கத் தொடங்கினேன். நூல்கள் வைக்க நல்ல "ஷோ கேஸ்' தேவைப்பட்டதால் கடன் வாங்கி அதையும் வாங்கினேன். சிறுகச் சிறுக வாங்கி சுமார் நூற்றைம்பது நூல்களை சேகரித்திருக்கிறேன். கடைக்கு வருபவர்கள் அந்த நூல்களை எடுத்து வாசிப்பார்கள். சிலர் "வீட்டுக்குக் கொண்டு போய் மிச்சத்தையும் வாசித்து முடித்து தருகிறேன்' என்பார்கள். "போனால் வராது' என்று தெரியும். அதனால் நூல்களை எடுத்துக் கொண்டு போகத் தருவதில்லை.
வெரைட்டிக்காக, தமிழ்நாட்டில் தலைசிறந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளையும் சேகரித்து ஒலிபரப்பத் தொடங்கினேன். தொடக்கத்தில்
"இது சலூனா.. தியான அறையா..' என்று பலரது புருவங்கள் உயர்ந்தன. போகப் போக வாடிக்கையாளர்கள் பாராட்ட ஆரம்பித்தார்கள். சொற்பொழிவுகளைக் கவனமாகக் கேட்பார்கள். சில வாடிக்கையாளர்கள் அவர்களுக்குப் பிடித்த சொற்பொழிவை ஒலிபரப்பச் சொல்வார்கள். இதெல்லாம் மாற்றம்தானே..!
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனையும் தொடர்பு கொண்டு பேசினேன். "நூல்களை மக்களும் மாணவர்களும் வாசிக்க வைப்பதற்குப் பெரிய கல்லூரிகளும் பல்கலைகழகங்களும் எந்த முயற்சியும் எடுக்காத சூழலில் ஒரு சிறிய சலூன் நடத்துகிறவர் சொற்ப சம்பாத்தியத்தில் நூல்களை விலைக்கு வாங்கி, தான் படிப்பதுடன் மற்றவர்கள் படிக்கட்டும் எனச் சலூனுக்குள் நூலகம் ஒன்றை அமைத்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகிறது.., இதுபோன்று ஊருக்கு நாலு சலூன் இருந்தால் போதும், நூல்களை மக்கள் வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு பக்கம் பொது நூலகங்கள் ஆட்கள் வராமல் காத்தாடுகின்றன. இன்னொரு பக்கம் பள்ளி, கல்லூரிகளில் பாடப்புத்தகங்களுக்கு வெளியே வாசிப்பதேயில்லை. நூலகங்கள் பெயரளவில் மட்டுமே இயங்குகின்றன. சினிமா, டிவி இந்த இரண்டும் மட்டுமே உலகம் என நம்பிக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு நடுவே வாசிப்பை பரவலாக்குவதற்கு உங்களைப் போன்றவர்கள் செய்யும் முயற்சி புதிய வழிகாட்டலாகும்' என்று என்னைப் பாராட்டினார். தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல காரியம் செய்கிறோம் என்று மட்டும் புரிந்தது..
கடையை வாடகைக்கு எடுத்து தொழில் நடத்தி வருகிறேன். முடிதிருத்த கட்டணம் ஐம்பது ரூபாய்க்கும் குறைவாக வாங்க வேண்டும் என்று நான் விரும்பினாலும், கடை வாடகை, விலைவாசி காரணமாக ஐம்பது மட்டும் வாங்குகிறேன். இந்த நூலகம் நான் பல ஆண்டுகளாகக் கண்ட கனவு...
அது நனவானதும் நான் அனுபவித்த மகிழ்ச்சியை விட... கடைக்கு வருபவர்கள் நூலை எடுத்து வாசிப்பது தினமும் மகிழ்ச்சியைத் தந்து வருகிறது. சுறுசுறுப்பையும் தருகிறது. வேறு யாரையும் தொழிலில் உதவிக்கு வைத்துக் கொள்ள அவசியம் இதுவரை ஏற்படவில்லை. ஏதோ வாழ்க்கையை தள்ளிக் கொண்டு போகிறேன். "வாய்ப்பு கிடைக்கும் போது எவ்வளவு படிக்க முடியுமோ அவ்வளவு படித்துக் கொள்ளுங்கள். பிறகு வாய்ப்பு கிடைக்காது..' என்று இங்கு முடி வெட்டிக் கொள்ள வரும் மாணவர்களிடத்தில் சொல்வேன்'' என்கிறார் பொன் மாரியப்பன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...