எந்தக் கதாபாத்திரத்துக்கும் பொருந்த வேண்டும்!
இயல்பான அழகு... வார்த்தைக்கு வார்த்தை தெளிவு... அணுகுமுறையில் சிநேகம்... சமந்தா எப்போதுமே சமத்துப் பொண்ணு...


இயல்பான அழகு... வார்த்தைக்கு வார்த்தை தெளிவு... அணுகுமுறையில் சிநேகம்... சமந்தா எப்போதுமே சமத்துப் பொண்ணு...
சூர்யா, விஜய், விக்ரம் என அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார் ரேஸில் இருப்பவர்களோடு ஜோடி... சமந்தாவின் இந்த வளர்ச்சி ஆச்சரியமானது...?
யாருக்கு எந்த இடம் கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. நினைத்த இடம்தான் கிடைக்க வேண்டும் என்று நினைத்தால் அது நிச்சயம் கை கூடி வராது. எந்த மொழி சினிமாவாக இருந்தாலும் திறமைதான் முதலிடம் நிற்கும். ஆரம்பத்தில் கதைக்காக ஒரு படம் ஹிட் ஆகலாம். யாரோ ஒருவருக்காக மட்டும் கூட படம் ஓடலாம். ஆனால் அது மட்டுமே போதும் என நினைத்து விடக் கூடாது. எந்த கதையாக இருந்தாலும் சின்னச் சின்ன காட்சிகளில் கூட ஹீரோயின் கவர வேண்டும். எல்லாருக்குமே ஒரு நேரம் வரும். அந்த நேரம் முன்னணி இடமாக இப்போது என் பக்கத்தில் நிற்கிறது. எனக்குக் கிடைத்த கதைகளும், இயக்குநர்களும்தான் இந்த இடத்துக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். இதில் ஹீரோவும் முக்கியமானவர்தான்.
கீர்த்தி சுரேஷ், ஆனந்தி இப்படி சிலருக்கு ஒரு சில படங்களிலேயே அடையாளம்... ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...?
இந்த கேள்விக்கு நான் நேர்மையாகப் பதில் சொல்லியாக வேண்டும். "மாஸ்கோவின் காவேரி' நடித்து விட்டு காத்திருந்த போது, இன்னும் ஆறு மாதங்கள் கூட சினிமாவில் இருக்க மாட்டேன் என்றுதான் தோன்றியது. ஆனால் இப்போது இருக்கிற இடம் நான் நினைத்துப் பார்க்காதது. என்னை ரசிகர்களுக்கு எப்படிப் பிடித்தது என்று தெரியவில்லை. இந்த நிமிடம் வரைக்கும் சினிமாவில் எந்த எதிர்காலத் திட்டமும் இல்லை. ஒவ்வொரு நாளையும், சினிமாவுக்கு வந்த முதல் நாள் போல்தான் பார்க்கிறேன். ஷூட்டிங் ஆர்வம் இருக்கிற வரைக்கும் சினிமாவில் இருப்பேன். அதன் பின் என்ன நடக்கும் என எனக்குத் தெரியாது. ""முதல் படத்தின் போது இருந்த பதட்டம் இப்போதும் இருக்கிறது'' என ஒரு சந்திப்பில் த்ரிஷா என்னிடம் சொன்னார். அதுதான் எப்போதைக்குமான என் பதில். இது நான் கஷ்டப்பட்டு பிடித்த இடம். ஆனால் இது எனக்கு மட்டுமே நிரந்தரமானதல்ல.
வந்தவர்களில் யாரையெல்லாம் உங்களுக்கு பிடித்தது...?
எல்லாரும்தான். முழுப் படமும் பார்த்து வெகு நாள்கள் ஆகி விட்டன. சின்னச் சின்ன க்ளிப்பிங்ஸ் பார்ப்பதோடு சரி. அந்த சின்னச் சின்ன நிமிடங்களில் கூட நிறையப் பேர் கவர்ந்திழுத்தார்கள். "அட்டக்கத்தி' நந்திதா, "மெட்ராஸ்' கேத்ரீன் தெரஸô, "கயல்' ஆனந்தி இப்படி சில பேர் மனசுக்குள் நின்றார்கள். மற்றபடி வேறு யாரும் அது போல் இல்லை. ஏதாவது ஒரு நடிகையின் பெயரைச் சொல்லி அவரின் இடம் இன்னும் காலியாகத்தான் இருக்கிறது என்றெல்லாம் சொல்வார்கள். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நாளுக்கு நாள் சினிமா மாறுகிறது. இப்போது போய் அது மாதிரி இல்லையே எனப் பேசுவது சரியாக இருக்காது. யார் வேண்டுமானாலும் எந்த இடத்துக்கும் போட்டி போடலாம். அந்த போட்டியில் நானும் இருக்கிறேன் என எழுதிக் கொள்ளுங்கள்.
நயன்தாரா, ஹன்சிகா, அனுஷ்கா, காஜல், ஸ்ருதி இப்படி சிலர்தான் முன்னணி இடத்தில் இருக்காங்க... உங்களுக்கும் அதில் ஒரு இடம் உண்டு... இந்தப் போட்டியை எப்படி பார்ப்பீங்க...?
தென்னக சினிமாவில் அனுஷ்காவுக்கு கிடைத்த இடம் ரொம்பவே பெரியது. எப்படி இருந்தாலும் எனக்கு கேரக்டர்தான் முக்கியம் என ஒவ்வொரு படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறார். கடந்த பத்தாண்டுகளில் இது யாருக்கும் அமையாத ஒன்று. அனுஷ்கா எல்லாருக்கும் நல்ல ரோல் மாடல். எந்த கதாபாத்திரத்திலும் பொருந்துவதுதான் நடிகையின் அழகு. முதல் இடம், இரண்டாம் இடம் என்ற போட்டி முக்கியமானதாக இருந்தாலும், அனுஷ்கா மாதிரியான மன நிலையைத்தான் சினிமாவில் விரும்புகிறேன். எந்த தனிப்பட்ட இமேஜுக்குள்ளும் சிக்காமல் இருக்கவே விரும்புகிறேன்.
கல்யாண வாழ்க்கையில் நம்பிக்கை இல்லை என்று பேசுவது ஆண்ட்ரியா, டாப்ஸி என சிலருக்கு வாடிக்கையாகி விட்டது... இந்த விஷயத்தில் நீங்கள்...
கல்யாண வாழ்க்கை சுவாரஸ்யமானது. வாழ்க்கை முழுவதும் ஒருவருடன் வாழ வேண்டி வரும். அப்படி ஒரு நிலையில் துளி கூட சலிப்பு வந்து விடக் கூடாது. சினிமாவில் மட்டுமே இப்படி பேசுகிறவர்கள் இல்லை. எல்லா துறைகளிலும் இருக்கிறார்கள். இயல்பான வாழ்க்கையை மாற்றுவது திருமணம் என்பது என் நம்பிக்கை. அதில் ஈடுபாடு இல்லாத போது வேறு என்ன சுவாரஸ்யம் இருக்க முடியும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...