சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

இறைவனைப் படைக்கும் இளைஞர்!

கோயில் திருவிழாக்களில் உற்சவர் பலவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பதைப் பார்த்திருப்போம்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:39 am

சி.வ.சு. ஜெகஜோதி

கோயில் திருவிழாக்களில் உற்சவர் பலவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளிப்பதைப் பார்த்திருப்போம்.

ஐம்பொன்னால் செய்யப்பட்ட அந்தச் சிலைகளுக்கு உடை உடுத்தி,நகைகள் அணிவித்து,மலர்மாலைகள் சூட்டி வீதியுலா வரும் அழகே அழகு.ஐம்பொன் சிலையாக இல்லாமல்,பித்தளையால் செய்யப்பட்ட ஒரே ஒரு முகவமைப்பை மட்டும் வைத்துக்கொண்டு,ஐம்பொன் சிலைகளின் அமைப்பைப் போலவே வடிவமைத்து அதை கோயில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்குக் கொடுத்து வருகிறார் ஓர் இளைஞர்.

ராமநாதபுரம் சிவன்கோயில் வடக்குத்தெருவில் வசித்து வரும் இருபது வயதே நிரம்பிய அந்த இளைஞர் மகேந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.மளிகைக்கடை ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டு ஓய்வு நேரங்களில் தேவைப்படுவோருக்கு மட்டும் அவர்கள் விரும்பும் சாமிசிலைகளை அழகாகவும், அற்புதமாகவும் வடிவமைத்தும் தருகிறாராம்.

அவர் நம்மிடம் பேசியதிலிருந்து...

""பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். அதற்கு மேல படிக்க விருப்பம் இல்லாமல் போய் விட்டது. என்னோட வீட்டுக்கு பக்கத்துல இருக்குற கோயில்ல அடிக்கடி திருவிழா நடக்கும். அப்போது அர்ச்சகர்கள் ஐம்பொன் சிலைகளை விதம்,விதமாக அலங்கரித்து,பட்டாடைகள் உடுத்தி, வைர ,வைடூரிய நகைகள் அணிந்து, மலர் மாலைகளை அணிவித்து அழகுபடுத்துவதை அருகில் இருந்து உன்னிப்பாகக் கவனித்தேன். சாமி சிலைகளுக்கு பொருத்தப்படும் அஷ்டபாதம் எனப்படும் கை,கால்களை சிலைகளின் மீது எவ்வாறு பொருத்துகிறார்கள்? எப்படி உடை உடுத்துகிறார்கள்? என்பதையெல்லாம் மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.

இதன் விளைவாக ஏற்பட்ட ஆர்வத்தால் மதுரை புதுமண்டபத்தில் ஒரே மாதிரி வடிவத்தினாலான முகம் உடைய 3 முகங்களும்,அஷ்டபாத செட்டுகள் மூன்றும் விலைக்கு வாங்கினேன். வீட்டுக்கு வந்து கூட்டல் வடிவத்தில் ஒரு கட்டை தயாரித்து அதில் முகத்தையும்,கை,கால்களையும் பொருத்தினேன். கோயில்களில் இருக்கும் உற்சவ மூர்த்திகளைப் போலவே அதற்கு புதிய ஆடைகள் உடுத்தி,கண்களைக் கவரும் கவரிங் நகைகளை அணிவித்து அழகு பார்த்தேன். இதைப் பார்த்த பலரும் அற்புதம் என்று பாராட்டினார்கள். இதற்காக எனக்கு ஒரு சில அர்ச்சகர்களும் வழிகாட்டியாக இருந்து உதவினார்கள். பின்னர் இதுவே எனக்கு ஓரளவுக்கு வருமானம் தரும் தொழிலாகி விட்டது.

கோயிலில் இருக்கும் உற்சவர் சிலைகளைப் போன்ற வடிவம் உடைய 3 செட்டுகள் இப்போது என்னிடம் இருக்கின்றன. அறுபது வயது நிரம்பியவர்களுக்கு நடைபெறும் சஷ்டியப்த பூர்த்தி திருமண நாட்களின் போது சிலர் சிவன்,பார்வதி அலங்காரத்திலும், சிலர் பெருமாள், மகாலெட்சுமி அலங்காரத்திலும் ஆர்டர் கொடுப்பார்கள். வீடு கிரஹப்பிரவேசத்தின் போதும்,வரலெட்சுமி நோன்பின் போதும் மகாலெட்சுமி அலங்காரம் செய்து கேட்பார்கள்.விநாயகர்,முருகன்,மாரியம்மன் போன்ற சிலைகளையும் செய்து தருமாறு கோயில் திருவிழாக்களின் போது ஆர்டர்கள் வரும்.

இடவசதியின்மையாலும்,பாதுகாப்பு கருதியும் சின்னச் சின்ன கோயில்களில் ஐம்பொன் சிலைகளை பெரும்பாலும் வைத்துக் கொள்வதில்லை. இக்கோயில் திருவிழாக்கள் பலவற்றில் நான் செய்து கொடுத்த சாமி சிலைகளும் வீதியுலா வந்திருக்கின்றன. இதுவரை 75க்கும் மேற்பட்ட சுபநிகழ்ச்சிகளுக்கும்,கோயில் திருவிழாக்களுக்கும் என்னால் படைக்கப்பட்ட சாமிசிலைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. நான் பயன்படுத்தும் முகத்தின் வடிவம் ஒன்று தான். ஆண்களின் உடைகளைப் பயன்படுத்தும் போது ஆண் தெய்வம் போலவும்,பெண்களின் உடைகளை உடுத்தும் போது அது பெண் தெய்வம் போலவும் காட்சியளிக்கும்.

சாமி சிலைகளை செய்து முடித்த பிறகு ஆர்டர் கொடுத்தவர்களே வாங்கிக் கொடுத்த அழகழகான மலர்மாலைகளை அணிவித்து அதை சுபநிகழ்ச்சிகள் நடத்தும் இடங்களுக்கு ஆட்டோவில் எடுத்துச் சென்று கொடுத்து விட்டு நிகழ்ச்சி முடிந்ததும் நானே போய் எடுத்துக் கொள்வேன். ஒரு சிலர் காரில் எடுத்துச் செல்வதும் உண்டு. விழாவிற்கு வரும் பார்வையாளர்கள் கண்களில் படும்படியான இடத்தில் எனது தயாரிப்பில் உருவான சாமிசிலைகள் வைக்கப்பட்டு அருள்பாலித்துக் கொண்டிருக்கும். மிகுந்த பக்தியோடு விரதம் இருந்து தான் இறைவனின் பல வடிவங்களையும் படைக்கிறேன்'' என்றார் மகேந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.