கதை, களம் என அனைத்திலும் புது "தீம்' பிடிப்பது குறும்பட படைப்பாளிகளின் ஸ்பெஷல்.... இது எப்படியிருக்கும்...?
"முண்டாசுப்பட்டி' என்கிற கிராமத்தில் நடக்கிற பிரச்னைகள், சம்பவங்கள்தான் கதை. 80-களில் மூட நம்பிக்கைகளில் திளைத்து கிடக்கும் மனிதர்களை அறிவியலும், வளர்ந்து வந்த தொழில்நுட்பங்களும் எந்த எல்லைக்கு கொண்டு சென்றன என்பதுதான் கதை. நம்பிக்கையோ, மூட நம்பிக்கையோ எதுவாக இருந்தாலும், அதில் நம் நாட்டின் கலாசாரமும் புதைந்து இருந்தது. காலில் செருப்பில்லாமல் நடக்கிற மக்கள் இங்கே கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களின் பயணத்தின் இடையில் இளைப்பாற திண்ணை கட்டி வைக்க வேண்டும் என யோசித்த ஒருவனின் பின்னணியில் தமிழ் இனத்துக்கான புதிய கலாசாரம் தோன்றியது. பனை மரங்களை வெட்டினால் அய்யனார் சாமி தண்டிக்கும் என சொல்லப்பட்ட வார்த்தைக்கு பின்னால் ஓர் இனத்தில் நம்பிக்கை துளிர் விட்டது. இரவு படுக்கும் போது சாப்பாட்டை கொஞ்சமாவது மிச்சம் வைக்க வேண்டும். திடீர் விருந்தாளிகள் வந்தால் சாப்பாடு போட வேண்டும் என்பது எங்கேயும் காணக் கிடைக்காத நம் இனத்தின் கலாசார அடையாளம். இப்படி கலாசாரம் என்று நாம் பார்க்கிற எல்லா விஷயங்களுமே ஒரு காலத்தில் மூட நம்பிக்கையாகத்தான் முளைத்து வந்திருக்கும். ஒவ்வொரு பழக்கங்களுக்கு பின்பும் நிறைய அர்த்தங்கள் இருக்கின்றன. காரணங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி நாம் யோசிக்க மாட்டோம். அப்படியான சில பழக்கங்களை இதில் துணிச்சலாக பேசியிருக்கிறேன்.