சாதிக்க வேண்டும் என்ற வெறி!
எப்படி நல்லவர்கள் மட்டுமே இந்த உலகில் இல்லை என்று நம்புகிறோமோ, அதே போல் கெட்டவர்கள் மட்டுமே இந்த உலகில் இல்லை.


எப்படி நல்லவர்கள் மட்டுமே இந்த உலகில் இல்லை என்று நம்புகிறோமோ, அதே போல் கெட்டவர்கள் மட்டுமே இந்த உலகில் இல்லை. அன்பானவர்களும், உண்மையானவர்களும் நிறைந்ததுதான் இந்த உலகம். ஆனந்தமும், பரவசமும்தான் ஒவ்வொரு நாளையும் மூச்சுத்திணறல் இல்லாமல் நகர்த்துகின்றன. அப்படி வாழ ஆசைப்படுகிற சில கதாபாத்திரங்களுக்கு இங்கே கிடைத்த நீதி என்ன?
மாறுபட்ட களத்தில் 'கயல்' மூலம் கதை சொல்ல வருகிறார் இயக்குநர் பிரபுசாலமன்.
"கயல்' பெண்மையை தாங்கிப் பிடிக்கிற தலைப்பு... "மைனா' போல் மீண்டும் ஒரு திரை பாணி வடிவம்தான் நோக்கமா...?
என் பிரார்த்தனைகள் எதுவும் வீணாகவில்லை. பெரிய போராட்டங்களுக்கிடையே கவனம் கலைக்க நான் பிடித்த கதை "மைனா'. பொறுப்பு, கவனமாக இருக்க வேண்டும் என்கிற எச்சரிக்கையையும் "மைனா'தான் தந்தது. ஆனால் அதிலிருந்து வேறுபட்டு "கும்கி' எடுத்தேன். இப்போது "கயல்', நிச்சயம் வேறுபட்ட களம். பெண்மை கதையின் பிரதானம்தான். ஆனால் அது மட்டுமே முதன்மை கிடையாது. அபூர்வமான இந்த மனித பிறப்பு ஒரு முறைதான். அதை அழகா பூப் பூக்கிற மாதிரி நித்தமும் வாழ வேண்டும் என நினைக்கும் இரண்டு பேர். ஏமாற்றிப் பிழைக்காதவர்கள், சுயநலமாக சிந்திக்காதவர்கள், வஞ்சத்தை ஒளித்துக் கொண்டு பொய்முகம் காட்டி புன்னகைக்காதவர்கள், ஆதாயத்தைத் தேடாதவர்கள், இயலாதவர்களுக்காக வருத்தப்படுகிறவர்கள். இந்த உலகம் எந்த மாதிரி வாழ்க்கையை கொடுத்ததோ, அந்த வாழ்க்கையை இனிக்க இனிக்க வாழ ஆசைப்படுகிற இந்த இரண்டு இளைஞர்களின் உலகம்தான் கதை. அவர்களின் பயணத்தில் வருகிற ஒரு உன்னத காதல் இன்னும் கதையை இயல்பாக அதன் போக்கில் தள்ளி விட்டுப் போகும்.
கதையின் உள்ளடக்கம் புரிகிறது.... இன்னும் கொஞ்சம்
பேசலாமே....?
பல்கி பெருகுங்கள் இதுதான் ஆதாம், ஏவாள் பிறப்பின் அர்த்தம். ஆனால் இன்றைக்கு நம் லட்சியம், நோக்கம் எல்லாம் வேறாகி விட்டது. பிறக்கும் போதே இவன் டாக்டர், இவள் இன்ஜீனியர் என பெயர் சூட்டப்படுகிறது. பிறப்பின் அடையாளங்கள் மாறி விட்டன. "வகுப்பறைக்கு சென்று எல்லோரையும் நேசித்து வீடு திரும்பு', "நன்மை செய்' எனச் சொல்லும் பெற்றோர்கள் இல்லை. "அவனை நீ முந்திச் செல்'. "இவனை ஓரங்கட்டுகிற அளவுக்கு மார்க் எடு' இப்படித்தான் அடுத்த தலைமுறை உந்தப்படுகிறது. சூழ்நிலை கைதிகளாக சில தவறுகளைச் செய்கிறவர்களையும் கெட்டவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டு இந்த உலகமே மோசமாகி விட்டது என்ற வெறுப்போடும், அவ நம்பிக்கையோடும் எல்லாவற்றையும் அணுகும் மனநிலை ஆபத்து. தவறு செய்வது தவறில்லை. இந்த உலகமே அப்படித்தான் இருக்கிறது என்று நம்புவது இன்னும் ஆபத்து. இது சினிமாவுக்கு மட்டுமே பொருந்தும், நிஜத்தில் சாத்தியமா என கேட்பவர்கள் உண்டு. பாசிட்டிவ் விஷயங்களை மனதில் இருத்திக் கொள்வது, இந்த சமூகத்தை பாதுகாப்பானதாக உணர வைக்க உதவும்.
கதைகளைப் போலவே, காட்சிப் பதிவுகளும் பேசப்படும்.... மலை கிராமம், அடர்ந்த வனம் என வித்தியாச களங்களை நோக்கி பயணிப்பீர்கள்.... இந்த கதைக்கு எப்படி....?
ஒவ்வொரு காட்சிக்கும் அசாத்திய உழைப்பு. "மைனா', "கும்கி' இரண்டுக்கும் பயணப்பட்டதை விட, இதற்கு பயணப்பட்ட தூரம் அதிகம். காடு, மலை, அருவி, ஆள் புக முடியாத வனம், பனிப்பிரதேசம், ஆள் இல்லாத நெடுஞ்சாலைகள், தகிக்கும் வெயில் என எல்லா இடங்களிலும் கதை பயணிக்கும். கிட்டத்தட்ட இது மாதிரி களம் இங்கே புதிது. கதையின் முக்கிய அங்கமாக இயற்கையின் வல்லமையைக் காட்டியிருக்கிறேன். இதோ சுனாமி தந்து போன சுவடுகள் பத்து வருடங்களைத் தொடப் போகிறது. அதன் பாதிப்பு எப்படியிருந்தது என்பதை நிஜ சுனாமி காட்சிகளைப் போல் கதைக்காக எடுத்திருக்கிறேன். மனிதனின் ஆற்றல்களுக்கு முன்னால், இயற்கை வல்லமை பெரியது என்பதை காட்டும் படம். வழக்கம் போல் இமான், யுகபாரதி கூட்டணிதான் ஆனால் வழக்கமான பாடல்கள் இல்லை.
"கயல்' எதிர்கால தமிழ் சினிமாவுக்கு எந்த அளவுக்குக் கைக்
கொடுக்கும்...?
"மைனா' பார்த்து விட்டு வெளிவந்த ரஜினி சார் ஆரத்தழுவி, "இந்தப் படத்தில் சின்ன கேரக்டர் செய்திருந்தால் எனக்கு சந்தோஷமாக இருந்திருக்கும்' என்றார். "இன்னிக்கு எனக்கு நல்லா தூக்கம் வரும். ஏன்னா நல்ல படம் பார்த்த சந்தோஷம் அது' என்றார் கமல் சார். "சந்தோஷம்ப்பா... அழகியல் சார்ந்த மண் வாசனை கதைகளைத் தொடர்ந்து எடுத்து வா' என்றார் பாரதிராஜா சார்.
ஏதோ ஒரு தொடர்பில் மணிரத்னம் சார் பேசினார். இப்படி சீனியர்கள் பாராட்டுகிற இடத்தில் "மைனா' இருந்தது. கரை கொள்ளாத இந்த சந்தோஷ வார்த்தைகள்தான் எனக்கான எரிபொருள். எனக்குள் சாதிக்க வேண்டும் என்கிற வெறி இருந்தது. அது மட்டுமேதான் என் இருப்பை அடையாளப்படுத்தி வைத்திருக்கிறது. இப்போது வருபவர்களுக்கும் அப்படி ஒரு வெறி தேவை. அனுபவங்களை நிறையப் படிக்க வேண்டும். நான் பயணப்பட்ட வழிகள் எங்கும் அனுபவங்கள். ஒரு புத்தகமோ, படமோ கொடுத்து விடாததை நான் சந்தித்த மனிதர்கள்தான் எனக்கு வாரி வழங்கியிருக்கிறார்கள். நீண்ட நெடிய அனுபவங்கள்தான் ஒரு கலைஞனை சமூகப் பார்வையோடு வைத்திருக்கும். அதற்கு இளம் தலைமுறை பக்குவப்பட வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...