ஆத்ம திருப்திக்காக...!
""கூட்டுக் குடும்பத்தை எவ்வளவோ தூரம் மறந்து வந்து விட்டோம். தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா என்று முறை கொண்டாடி வந்தது நம் தலைமுறைக்கு அடுத்து யாருக்காவது ஞாபகத்துக்கு வருமா?


""கூட்டுக் குடும்பத்தை எவ்வளவோ தூரம் மறந்து வந்து விட்டோம். தாத்தா, பாட்டி, பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா என்று முறை கொண்டாடி வந்தது நம் தலைமுறைக்கு அடுத்து யாருக்காவது ஞாபகத்துக்கு வருமா? எப்போது கேட்டாலும் பிள்ளைகளுக்கும், பேரன்களுக்கும் எடுத்துக் கொடுக்கும் பாட்டிகளின் சுருக்குப் பை சில்லறைகள். அம்மாக்களின் நேசமும், பிரியமும் ஒளிந்து கிடக்கும் அஞ்சறைப் பெட்டி காசு. எல்லோரும் தூங்கி விட்ட இரவில் திருடுவதற்காகவே காத்திருக்கும் அப்பாவின் சட்டை பை ரூபாய் நோட்டுகள். இன்னும் எவ்வளவு இழந்திருக்கிறோம்...? அந்தக் குறையை நீக்குகிற மாதிரி மூன்று தலைமுறையினரை வைத்து ஒரு படம் எடுத்திருக்கிறோம். தாத்தா நாசருக்கும், பேத்தி சாராவுக்குமான ஒரு சின்ன உலகத்தில் சொல்லப்படாத ஓர் உணர்வை இதன் மூலம் மீட்டு வந்திருக்கிறேன். இதை விட இன்னும் நிறைய பேர் எல்லோரும் விரும்பி சந்தோஷமாக பார்க்கக் கூடிய வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்'' - அமைதியாகச் சிரிக்கிறார் இயக்குநர் விஜய். "மதராசப்பட்டிணம்', "தெய்வத்திருமகள்' என அவ்வப்போது உணர்வுகளை மீட்டெடுப்பவர். இப்போது "சைவம்' படத்தின் மூலம் நிதான அடி எடுத்து வைக்கிறார்.
இன்னும் முழு குடும்பக் கதையைக் கொண்ட திரைப்படத்திற்கான ரசிகர்கள் இருப்பதாக நம்புகிறீர்களா....?
நாம் என்ன இப்போது வேறு ஒரு கிரகத்துக்கா குடி பெயர்ந்து விட்டோம். இப்போதும் உறவுகள் பிரிந்தால் கண்ணீர் வருவது இல்லையா? இதோ சோழிங்கநல்லூர் பக்கத்து காட்டில் ஒரு தோழி பாலியல் வன்முறையில் கொல்லப்படும் போது நாம் சிந்துகிற கண்ணீருக்குப் பெயர் என்ன? ""தம்பி இந்த கோடை விடுமுறைக்காவது பேரனைக் கொண்டு வந்து கிராமத்துல விட்டுட்டுப் போடா''ன்னு பேசின ஒரு தாத்தாவின் வார்த்தைகளில் எத்தனை சோகம் ஒளிந்திருக்கும்? ""இல்ல அப்பா இந்தக் கோடை லீவுக்கும் அவனுக்கு சம்மர் கிளாஸ் இருக்கு. அதனால் அப்புறம் பார்த்துக்கலாம்...''ன்னு ஒரு தாத்தாவின் பேரன்பை எவ்வளவு எளிதாகக் கடந்து வந்து விட முடிகிறது நம்மால். இப்படி சொல்லிக் கொண்டே போக நிறைய இருக்கிறது. அய்யனார் கோயில் திருவிழா, சடங்கு, சம்பிரதாயங்கள், பள்ளி வகுப்பு தோழர்கள், நேசமும், பிரியமுமாக வளர்ந்து பிரிந்து வந்த கிராமத்துக் காதல் இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள் நம் ஞாபகம் எல்லாம் அப்பிக் கிடக்கின்றன. இவற்றையெல்லாம் இழந்து வந்துவிட்ட சோகம் நாம் எல்லாருக்குள்ளும் இருக்கும்தானே? கிராமத்தை, உறவுகளைக் கடந்து வெகு தூரம் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் எல்லாருமே கிராமத்தின் பிள்ளைகள்தானே? அதன் நினைவலைகள் எங்கு வாழ்ந்தாலும் துரத்திக் கொண்டே இருக்கும். அதற்கெல்லாம் உணர்வு கூட்டுகிற விதத்தில் ஆழமாக யோசித்து, நம் கனவில் இருக்கிற தாத்தா அப்பா, மகன், பேரன், பேத்தி என நாமெல்லாம் இழந்து வந்துவிட்ட பாசத்தை, உணர்வை அழகாகக் காட்டியிருக்கிறேன்.
"தெய்வத்திருமகள்' வெளியானபோது இருந்ததைக் காட்டிலும் சாரா இன்னும் பக்குவப்பட்ட இடத்துக்கு வந்திருப்பாங்களே....?
"தெய்வத்திருமகள்' படத்துக்காக நான் நடத்தின ஆடிஷனுக்கு நிறைய குழந்தைகள் வந்திருந்தார்கள். சாராவைப் பார்த்த போது மட்டும்தான் இந்தக் குழந்தை இந்தக் கதைக்காகவே பிறந்து வளர்ந்ததாக உள்ளுக்குள் தோன்றியது. நிச்சயமாக சாரா இல்லையென்றால் "தெய்வத்திருமகள்' அத்தனை இயல்பா, அழகாக வந்திருக்காது. இந்தக் கதை எழுதும் போது மனசு முழுக்க சாரா மட்டுமேதான் இருந்தாள். அது, இதுவென எதையும் நினைத்துப் பார்க்காமல் சட்டென முடிவெடுத்து சாராவையே கதைக்குள் பயணிக்க வைத்தேன். "தெய்வத்திருமகள்' படத்தைக் காட்டிலும் இன்னும் அதீத நடிப்பைக் கொடுத்திருக்கிறாள் சாரா. இதுதான் காட்சி என்றால் அதை மனதுக்குள் பக்குவமாக ஓட்டிப் பார்த்து நடிக்கும் பக்குவம் வந்திருக்கிறது சாராவிடம். அது நிச்சயம் இந்தக் கதையை மகத்தான விஷயமாக உங்களிடம் எடுத்து வந்து சேர்க்கும். அதே போல் நாசர் சார் இல்லாமல் என்னால் கதை எழுத முடியாது. இன்னும் எத்தனை படங்கள் எடுத்தாலும் அதில் எல்லாம் நாசர்சார் இருக்கவே ஆசைப்படுகிறேன்.
"தலைவா' படத்துக்குப் பின் அஜித்தோ, விக்ரமோதான் உங்கள் படத்தில் நடிப்பார்கள் என்று செய்திகள் வந்தன... ஆனால் தற்போது உள்ள சூழலில் பல இயக்குநர்கள் தொட நினைக்காத ஒரு கதையை இயக்குறீங்க... எப்படி...?
ரொம்பவே இயல்பா, வாழ்க்கையின் உன்னதத் தருணங்களை சினிமாவாக எடுக்கத்தான் எனக்கு ஆசை. "மனசு ஒரு சின்ன இலை மாதிரி விஜய். அதை அசைக்கிற மாதிரியான படங்கள்தான் நமக்கு வேணும்'ன்னு என் குரு பிரியதர்ஷன் சார் சொல்லுவார். என் சினிமாவும் அந்த பாணிதான். அந்த திருப்திக்காகவே "மதராசப்பட்டிணம்', "தெய்வத்திருமகள்' இரண்டு படங்களையும் செய்தேன். "கிரீடம்' படத்தில் கூட கிளாசிக் ஃபீல் இருக்கும். ஆனால் அப்போது இருந்த ஸ்டார் இமேஜை விட்டு விட்டு எனக்காக நடிக்க வந்தார் அஜித் சார். "தலைவா' படத்தில் விஜய் சார் பாடிய ""வாங்கண்ணா...'' பாடலை முதலில் கேட்டு விட்டு "இந்த பாட்டு நிச்சயம் ஹிட் ஆகும்...'ன்னு சொன்னது அஜித் சார்தான். இப்போது வரைக்கும் நான் கூப்பிடுகிற தூரத்தில் என்னை வைத்திருக்கிறார். நானும் அவர் அழைக்கிற இடத்தில் இருக்கிறேன். "சைவம்' படத்தின் பாடல்களை விக்ரம் சாருக்குதான் முதலில் காண்பித்தேன். அத்தனை நெகிழ்வாக என்னைப் பாராட்டினார். சாரா பற்றி அன்புடன் நலம் விசாரித்தார். விஜய் சார் எல்லாவற்றுக்கும் மேலே இருக்கிறார். எல்லோரும் எப்போதும் தொடர்பில்தான் இருக்கிறார்கள். இருந்தாலும், என் ஆத்ம திருப்திக்காக ஒரு சினிமா செய்ய ஆசை. அதுதான் இந்த "சைவம்'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...