/

இன்னும் பெரிய இடத்துக்குப் போகணும்!

கே.கே.நகர் ஆபீஸில் காத்திருக்கிறேன். வாயிற் கதவு தொடங்கி வாட்ச் வரைக்கும் ஒவ்வொரு பொருளிலும் பார்த்திபனின் மனம், நிறம், குணம் புரிகிறது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:32 am

ஜி. அசோக்

கே.கே.நகர் ஆபீஸில் காத்திருக்கிறேன். வாயிற் கதவு தொடங்கி வாட்ச் வரைக்கும் ஒவ்வொரு பொருளிலும் பார்த்திபனின் மனம், நிறம், குணம் புரிகிறது. ஆச்சரியங்களாலும், பிரமிப்புகளாலும் கடந்து போகிற சில மணித்துளிகளில், "சார் கூப்பீட்டாங்க...' சின்ன புன்னகையுடன் அறை கதவு திறக்கிறார் உதவியாளர். "வாங்க...' "எப்படி இருக்கீங்க...' "டீ ஆர் காபி...' சினேக விசாரிப்புகளுக்குப் பின் "பேட்டியை ஆரம்பிக்கலாமா' என்கிறார் உட்கார்ந்தததும். பார்த்திபன் படங்களுக்கான தீவிரமும், எதிர்பார்ப்பும் உள்ளூர் உலக சினிமா ரசிகனுக்கும் புரியும்.

"கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்'... பார்த்திபனின் குறும்பு டைட்டில்தான்... ஆனால் வேறொரு தளம்... நிறைய ஆர்ட்டிஸ்ட்ஸ்... என சமீபத்திய சினிமா டிரெண்டுக்கான பரிசோதனை முயற்சி போல் தெரிகிறதே...?
 எப்போதும் நான் அப்படித்தானே? உண்மையாகவும், நேர்மையாகவும் மட்டுமே பேச எனக்குப் பிடிக்கும். வார்த்தை ஜாலங்கள் காட்டத் தெரியுமே தவிர, மனசுக்குள் எதுவும் இருக்காது. என் யோசனை, எண்ணங்கள் எல்லாம் வேறு மாதிரிதான். கொஞ்சம் நிதானித்து பார்க்கையில் சினிமாவின் பல்ஸ் இப்போதுதான் புரிகிறது. "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' படத்தில் மெழுகுவர்த்தி முன் மிஷ்கின் பேசுகிற காட்சியை, "குடைக்குள் மழை'யில் வைத்திருந்தேன். "சூது கவ்வும்' சஞ்சீதா ஷெட்டி கதாபாத்திரத்திரம் அப்போதே எனக்கு பரிச்சயம். இப்போதுதான் ரசிகர்கள் என் ரசனைக்கு வந்திருப்பதாக நினைக்கிறேன். அந்த பல்ஸ் பிடித்து உருவாக்கிய படம்தான் இது. முந்தைய படங்கள் போல் அல்லாமல் இதில் கமர்ஷியல் வெகுவாக இருக்கும்.
 என் எல்லாப் படங்களைப் போலவே இதிலும் அதீத உழைப்பு இருக்கிறது. ""உங்களுடைய எல்லாப் படங்களுக்கும் "புதிய பாதை' ஓர் அடையாள அட்டை மாதிரி சார்'' என இயக்குநர் ஒருவர் சொன்னார். "உலக தரத்தில் ஒரு தமிழ் சினிமா "ஹவுஸ் ஃபுல்' என பேஸ் புக்கில் ஒரு ரசிகன் பாராட்டியிருந்தார். "இந்த படத்தில் எந்த பாட்டு உங்களுக்கு பிடித்தது?'' என நான் கேட்ட கேள்விக்கு "தாலாட்டு கேக்குதம்மா' படத்தில் எல்லா பாட்டும் பிடிக்கும் சார்' என ஒருவர் டிவிட் செய்திருக்கிறார். "குடைக்குள் மழை' மாதிரி ஏன் சார் நீங்க படம் எடுக்க கூடாதென' பயணத்தின் போது ஒரு கேள்வி வந்தது. என் படங்கள் ஓடியதா? இல்லையா? என்கிற கேள்வியை விட, காலத்துக்கும் நிற்கிற மாதிரி, பார்க்கிற மாதிரி, பேசுகிற மாதிரி வந்து விழுகிற இந்த வார்த்தைகள்தான் எனக்கான எரிபொருள்.

கதையே இல்லாத படம் என்பது போல் செய்திகள்... அதெப்படி சாத்தியம்...?
 அவ்வளவுதான் படம். இது ஒரு விளம்பர யுக்தி மட்டுமே கிடையாது. சுவாரஸ்யங்கள் மட்டுமே மிகுந்திருக்கும் இடம். கதை இல்லையென்றாலும் படம் ஆரம்பித்த 20-வது நிமிடத்தில் என்ன சொல்ல வர்றாங்க என்பது புரிந்து விடும். இந்தப் படத்துக்குள்ளேயே இன் ஃபிலிம் மாதிரி இன்னொரு படம் இருக்கும். அது இன்னும் சுவாரஸ்யப் பகுதி. இதுவரை எந்த படங்களையும் நான் காப்பியடித்து எடுக்கவில்லை. இப்போது கூட படத்தை முடித்து விட்டு, தீவிரமாக உலக சினிமா பார்க்கிற என் உதவியாளரை அழைத்து "இந்த படத்தின் சாயலில் எந்த படமாவது வந்திருக்கிறதா?‘ என கேட்டேன். இல்லை என்று அவர் சொன்ன வார்த்தை தெம்பாக இருக்கிறது. நிச்சயம் ரசிகர்கள் கொடுத்துப் பார்க்கிற காசுக்கு நியாமான படைப்பாக இது இருக்கும். நேர்மையான சினிமாவும் கூட.

புதுமுகங்கள் சரி... ஆர்யா, விஷால், விஜய்சேதுபதி, அமலாபால் என நட்சத்திர நடிகர்களும் இருக்காங்களே....?
 அதுதான் இதில் விஷேசமே. படத்தை பார்ப்பதற்கு ஒரு உந்துகோல்தான் இந்த பேட்டி. ஆனால் அதிலேயே எல்லாவற்றையும் சொல்லி முற்று புள்ளி வைத்து விட முடியாது. எப்போதுமே சினிமாவிலேயே சுழன்று கொண்டிருக்கும் சினிமாக்காரன் நான். சினிமாவைத் தவிர வேறு தொழில் தெரியாது. நல்ல படங்களை முடிந்த வரைக்கும் ரசிகர்களுக்கு எடுத்துச் செல்லும் வேலை எனக்குப் பிடிக்கும். "பூவரசம் பீப்பீ' போஸ்டரை பார்த்து விட்டு, அந்த பட இயக்குநருக்கு வாழ்த்துக்கள் சொல்லி எஸ்.எம்.எஸ். அனுப்பினேன். போஸ்டரில் சிறுவர்களைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. இப்படித்தான் நான் வெளிப்படையாக இருப்பேன். அந்த வெளிப்படைக்கு ஆதரமாகத்தான் என் படத்தில் இத்தனை நட்சத்திரங்கள். 7 புதுமுகங்கள் இருந்தாலும், ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் ஆர்யா, விஷால், விஜய்சேதுபதி, அமலாபால், சேரன் ஆகியோர் வந்து போகிறார்கள். தம்பி ராமையாவுக்கு இதில் முக்கியமான வேடம்.

உங்களின் அற்புதமான திறமைகள், சாதனைகளைத் தாண்டி உங்களுக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை என்பார்கள்... உங்களின் உணர்வுகள் எப்படி...?
 "உனக்கான இடம் வேறப்பா...' என இளையராஜாவும், பாரதிராஜாவும் சொல்லும் போது ஒரு மாதிரி இருக்கும். இப்போது லிங்குசாமி கூட அதைத்தான் சொன்னார். "சார் நீங்க இன்னும் பெரிய இடத்துக்குப் போகணும்'ன்னு மனசு திறந்து சொன்னார். நடிப்பு ஆசையில் சினிமாவுக்கு வந்தவன் நான். வயிற்றுப் பசி தாங்க முடியாமல் இயக்குநர் ஆகி விட்டேன். ஆக்ஷன், கட் சொன்ன முதல் நாள் உறுதியும், தன்னம்பிக்கையும் இப்போதும் கூட குறையவில்லை. போராடும் மனம் கொடுத்த இந்த வாழ்க்கைக்கு நன்றி.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.