நான் ஏந்திச் செல்வது சின்ன தீபம்! விவேக்
விவேக்கிடம் பேசி எத்தனை நாள்கள் ஆகி விட்டன...? நிசப்தமான அறை... கண்கள் பார்த்து பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கலந்திருக்கிறது சந்தோஷ சாரல். "நான்தான் பாலா'... நடிகனாக பல படிகள் உயர்த்தியுள்ள


விவேக்கிடம் பேசி எத்தனை நாள்கள் ஆகி விட்டன...? நிசப்தமான அறை... கண்கள் பார்த்து பேசும் ஒவ்வொரு வார்த்தையிலும் கலந்திருக்கிறது சந்தோஷ சாரல். "நான்தான் பாலா'... நடிகனாக பல படிகள் உயர்த்தியுள்ள படைப்பு என்பது பளிர் பளீச்....
""பதற்றமில்லாமல் ஆறு மாதத்துக்குள் முடித்து விடலாம் என ஆரம்பித்த படம்தான். ஆனால் அதீதமான உழைப்பும், அதே வேகத்துக்குரிய தேடலும் தேவைப்பட்டது. 25 வருடங்களாக சிரிக்க வைத்துக் கொண்டிருந்த நான், இதில் யாரும் ஓரிடத்தில் கூட சிரித்து விடக் கூடாது என்பதில் கவனம் வைக்க வேண்டியிருந்தது. இன்னொரு பக்கம் போய் நின்று நிதானித்துப் பார்த்தபோது, எனக்கே என்னைப் பார்க்க ஆச்சரியம். ரொம்பவே நல்ல படம் செய்திருக்கிறோம் என்பதை இப்போது உணர்கிறேன். நிறைய கனவு, நல்ல முயற்சிகள் எல்லாம் இதற்கு முன் கரைந்தோடி இருக்கின்றன. அதற்கெல்லாம் ஆதர்சனமான இடம் தந்திருக்கிறது இந்த படம். ""விவேக் இது நல்ல நேரம். நேர்மையான இடத்துக்கு நீங்க போக வேண்டிய தருணம்'' என ஒரு சந்திப்பில் கமல் சார் சொல்லி விட்டுப் போனார். இதே மாதிரிதான் ""உங்க பலம் உங்களுக்குத் தெரியாது விவேக்'' என நிறைய நண்பர்கள் சொன்னார்கள். இதை என் நியாயமான காத்திருத்தலுக்குக் கிடைத்த இடம் என்றுதான் நினைக்கிறேன்.''
இந்தப் படத்துக்கு அதீத மெனக்கெடல் தெரிகிறதே...?
ஆமாம். என்னுடைய இருப்பைக் காட்ட வேண்டும் என்கிற ஆதங்கமும் உழைப்பும்தான் "நான்தான் பாலா'. கதை சொல்ல நிறையப் பேர் தேடி வருவார்கள். ஆனால் எனக்குப் பிடிக்கிற வரை காத்திருப்பவர்கள் சில பேர்தான். அது மாதிரிதான் இயக்குநர் கண்ணன். ""உங்களுக்கான கதை சார் இது... வேறு இடம்... வேறு பொறுப்பை உங்களுக்கு இந்தக் கதை தரும்'' என்று காத்திருந்தார். ஆனால் சினிமா எனும் கலையைத் தாண்டி வேறு வேறு இடங்களுக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்த நேரம் அது. கலைஞனாக காசு, பணம் சேர்த்தோம். வாய்ப்புகளை ஓடிப் போய் துரத்திப் பிடித்தோம். நமக்காகவே வாழ்ந்து வாழ்ந்து... செத்துப் போக எனக்குப் பிடிக்கவில்லை. ""சரி சொல்லுங்கள்...'' என ஒரு நாள் கதை கேட்கப் போய் அதுவாகவே மாறி விட்டேன். டோரண்டோ பட விழாவில் ஜானகி விஸ்வநாத் இயக்கத்தில் வந்த "குட்டி' படத்தைப் பார்த்த இயக்குநர் பாலா... ""ரொம்பவே நல்லா நடிச்சிருக்கீங்க... ஏன் இது மாதிரி உங்களைத் தொடர்ந்து பார்க்கக் கூடாது...'' என அவரும் கொஞ்சம் கொளுத்திப் போட்டார். அது சுடராக மாறி இப்போது கொளுந்து விட்டிருக்கிறது. ஒரு சில படங்களுக்குதான் மனசையும், உடம்பையும் கொடுத்து வேலை செய்யத் தோன்றும். வெகு நாள்களுக்குப் பின் அந்த உழைப்பு இதில் இருக்கும். நீ யாரு? நான் யாரு? என்ற கேள்வி சாதாரண தொனியில் இருந்து மாறும் போது மனிதாபிமானம் காணாமல் போய் விடுகிறது. அதே இடத்துக்கு ஏன்? எதற்கு? என்கிற கேள்விகள் வரும் போது பலரிடம் பதில்களே இருப்பதில்லை. அந்த மாதிரி இடத்தில் சந்திக்கிற ஒரு சாமானியன் இந்த சமூகத்துக்கு என்ன சொல்லிக் கொடுத்தான் என்பது கதை.
கலையில் சாதித்த பலரும் அடுத்த கட்டமாக ஏதோ ஒன்றைத் தேடி ஓடுகிறார்கள்... உங்களையும் சமீபமாக சினிமாக்களில் பார்க்க முடிவதில்லை... மரம் நட்டார்... செடி வைத்தார்... என செய்திகள் படிப்பதுண்டு... உண்மையில் நீங்கள் தேடிக் கொண்டு இருக்கிற விஷயம் என்ன....?
எனக்கென்று எந்த ஏக்கமும், ஆசையும் கிடையாது. சந்தோஷம், துக்கம் எல்லாம் ஒரே மாதிரியாகத்தான் கடந்து போகிறது. ஒரு நாள் அப்துல்காலம் ஐயாவைப் பார்த்த போது, ""விவேக் புவி வெப்பமயமாதலை யாரும் உணரலை... ஒரு கலைஞனாக அதை, நீங்கள் முன்னெடுத்துப் போய் உணர வைக்கலாம்'' என்று சொல்லி விட்டுப் போனார். ஏதோ பெரிய விஷயத்தை கடந்து போகிற ஒரு விநாடியில் சொல்லி உணர்த்தினார் கலாம் ஐயா. அதன் மீதான கடமையையும், கருணையையும் நாம் உணர்ந்து, நம் பிள்ளைகளையும் உணரச் செய்வதுதான் இன்றைய முதல் தேவை என்பதை உணர்ந்தேன். அதன் பின் கலாம் ஐயாவின் "கிரீன் கலாம்' அமைப்பில் இணைந்து வேறு களத்துக்குப் போனேன். இப்போது அதை "கிரீன் குளோப்' என்ற பெயரில் முன்னெடுத்து 20 லட்சம் மரக் கன்றுகள் வரை நட்டு விட்டேன். விவசாயிகளின் துணையோடு 2 கோடி மரக்கன்றை லட்சியமாக எடுத்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மரம்தான் மழை தருகிறது என்பதே இன்னும் பல விவசாயிகளுக்கு இங்கே தெரியவில்லை. தங்கள் பிள்ளைகள் விவசாயம் செய்ய வருவதை விவசாயம் செய்யும் தகப்பன்களே விரும்பாத சூழல் இங்கே உருவாகியிருப்பது இன்னும் ஆபத்து. தனி மனிதர்களின் முயற்சிகள் மட்டுமே எதிர்காலத்துக்கான நம்பிக்கை விளக்குகளை ஏற்றுகின்றன என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அந்த விதத்தில் நான் ஏந்திச் செல்வது சின்ன தீபம்.
முன்னணி முகம்... சேவை களம்... தவிர்க்க முடியாத நேரங்களில் அரசியல் சாயம் விழுந்து விடுமே...?
அரசியலை ஒரு சாமானிய மனிதனின் பார்வையில் இருந்துதான் பார்க்கிறேன். டீக்கடையில் செய்தித்தாள் படித்து அரசியல் பேசுகிற சாதாரண மனிதனின் குணம் எனக்கும் இருக்கிறது. ஆனால் அதைத் தாண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. சமூக சேவையும் ஒரு விதத்தில் அரசியல் என்ற பக்குவப் பார்வை எனக்குள் வந்திருக்கிறது. அதனால் பயம் இல்லை. அரசியலில் ஒரு வாக்காளனாக என் கடமையைச் செய்தால் போதும்.
என்.எஸ்.கே., சந்திரபாபு, நாகேஷ் மாதிரியான நடிகர்கள் நகைச்சுவையோடு உன்னதமான சினிமாக்களையும் முன்னெடுத்து வந்தார்கள்.... நீங்களும் உங்க காமெடி பகுதிகளுக்காக ரொம்பவே மெனக்கெடுவீங்க... அந்தப் பொறுப்பு இப்போதுள்ள நகைச்சுவை நடிகர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை... உங்கள் பார்வை எப்படி...?
உயரங்களைத் தொடும் போது இழப்பதும் அதிகமாக இருக்கும். சினிமாவில் அப்படி யாரும் இருக்கிறார்களா? என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கு நடிகர்கள் தயாராக இருந்தால் எதையும் தொட்டுப் பார்க்கலாம். பொதுவாக சினிமாவில் ஹிட் ஆனவர்கள் ஒரே மாதிரியாகத்தான் பயணிப்பார்கள். அதனால் மாற்றுச் சிந்தனைகள் வெளியே வராமல் அமுங்கி விடும். ஆனால் திடுமென ஒரு நடிகர் வந்து புதிய சிந்தனைகளை மேலே கொண்டு வருவார். அதை ஒரு படத்தின் வெற்றியாகவோ, தனிப்பட்ட நடிகரின் வெற்றியாகவோ பார்க்கக் கூடாது. இது புதிய சிந்தனைகளின் வெற்றி அவ்வளவுதான். அதே நேரத்தில் யார் நினைத்தாலும், யார் இடத்தையும் பிடிக்க முடியும். ஆனால் தனித்தன்மையான உழைப்பு இருக்க வேண்டும். என்னைக் கேட்டால் மக்கள் ரசித்தால் அது நல்ல நகைச்சுவை. ரசிக்கவில்லை என்றால் அது சுமாரானது. அவ்வளவுதான்.
மகன் பிரசன்னாவுக்கு இசையில்தான் ஆர்வமாமே....?
ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். இசைதான் அவருக்கு உயிர். அவர் ஆர்வத்தைப் புரிந்து கொண்டு நானே பியோனா வகுப்பில் சேர்த்து விட்டேன். இப்போது ஆறாம் நிலை வரைக்கும் வந்து ஆச்சரியம் தருகிறார். இளையராஜா சாருடன் பயணப்பட்ட அப்துல் சத்தார்தான் பிரசன்னாவுக்கு ஆசிரியர். இன்னும் நிறைய தூரம் போக வேண்டி இருக்கிறது. கடவுள்தான் அவரை வழி நடத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...