ராமானுஜம் சமூகத்துக்கான விதை!
""இலக்கியத்தை காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பார்கள். சினிமாவும் அப்படித்தான்.


""இலக்கியத்தை காலத்தைக் காட்டும் கண்ணாடி என்பார்கள். சினிமாவும் அப்படித்தான். அதீதமான கற்பனை, அதீதமான சிந்தனை செய்து செய்து, சாதாரண ரசிகனுக்கும் "ஷாக்' கொடுப்பதுதான் சினிமா என நினைக்கிறார்கள். வாழ்க்கை அப்படிப்பட்டது கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சின்ன சின்ன தருணங்கள், மெல்லிய அற்புதங்கள் ஒளிந்திருக்கின்றன. அந்த அற்புதங்களை ஒன்று சேர்ப்பதுதான் உன்னதமான சினிமா. இதுவரையில் என் சினிமாக்கள் அப்படித்தான் இருந்தன. இதுவும் அப்படித்தான் இருக்கும்.'' அன்புக் கரம் கொடுக்கிறார் இயக்குநர் ஞானராஜசேகரன். "பாரதி', "பெரியார்' என சமூக மாற்றங்களுக்கு வித்திட்டவர்களை திரை மொழிக்கு கூட்டி வந்தவர். தற்போது கணித மேதை ராமானுஜத்தின் வாழ்க்கையை செல்லுலாய்டில் செதுக்கி வருகிறார்.
பாரதி, பெரியார் வாழ்க்கையின் சில பக்கங்கள் சாமனிய தமிழனுக்கும் சென்று சேர்ந்தவை... ராமானுஜம் பற்றி பெரிதாகப் படிப்பினைகள் இல்லை.... இந்த சூழலில் ராமானுஜத்தின் வாழ்க்கை படமாவதை எப்படிப் பார்க்கிறீர்கள்...?
கணித மேதை என அழைக்கப்படுபவர் யார்? இப்படி கேட்கப்படும் ஒரு சராசரி கேள்விக்கு ராமானுஜம் என்று பதிலளித்தோடு சரி. ஆயினும் யார் இந்த ராமானுஜம்? ராமானுஜம் வாழ்விலிருந்து நாம் கற்கும் பாடம் எது? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலே இல்லை. கும்பகோணத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, இளமையில் வறுமையில் வாடி, பசிக் கொடுமையை அனுபவித்து, பசி மறக்க கணிதமே மாமருந்து என வளர்ந்த ராமானுஜம். கடும் சவால்களுக்குப் பின் கல்வி கற்று, போற்றுவோர் இல்லாமல், சென்னை போர்ட் டிரஸ்ட்டில் வேலைக்கு சேர்ந்து, தன் முயற்சியால் புகழ் பெற்ற இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உலகப் புகழ் பெற்று இந்த உலகத்தை விட்டுச் சென்றவர். ராமானுஜத்தைப் பற்றி அறிய தேடி ஓடியபோது, ஆயிரமாயிரம் விஷயங்கள் அற்புதங்களாகத் தெரிந்தன. கணிதத் திறமையின் மூலம் ஜீனியஸôக வாழ்ந்த அவரை நாம் எப்படி அணுகினோம்? அவரின் பெருமை பேசும் அதே நேரத்தில் நமது சமூகத்தில் ஏழைகளுக்கு ஒரு கல்வி; பணம் படைத்தவர்களுக்கு ஒரு கல்வி என கல்வியிலேயே வித்தியாசம் காட்டும் அவலத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் இந்தப் படம் இருக்கும்.
பாரதி, பெரியார் இருவரின் வாழ்க்கையையும் தனிப்பட்ட மனிதப் போராட்டமாகப் பார்க்க முடியாது.... ஒரு சமூகத்துக்கான போராளியாகவும் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் அவர்கள்... ராமானுஜம் கதையை அந்த அளவுக்கு எடுத்துக் கொள்ள முடியுமா...?
எல்லா திறமைகளும் நிறைந்த ஒரு மனிதனை நாம் கணித மேதையாகப் பார்த்தோமா? என்கிற கேள்விதான் கதையின் பிரதானம். புத்திசாலி ஒருவனைப் பார்த்து ""நீ என்ன பெரிய ராமானுஜமா?‘' என்று அமெரிக்கா படத்தில் வரும் கதாபாத்திரம் கேட்கிறது. நூறாண்டு கொண்டாடுகிற இந்திய சினிமாவில் ஓர் இடத்திலாவது அந்த கேள்வியை வைத்தோமா? நமக்கு முன் பல வித திறமைகளோடு வாழ்ந்து, மாய்ந்து போன ஒரு தனி மனிதனின் வாழ்க்கையாக இதைப் பார்க்க முடியாது. அவரது ஆளுமை கண்ட எவரும் அவரது வாழ்க்கையைக் கண்டு வியப்படைந்து பேசுவது சகஜம். உயர்ந்த மேதமை கொண்டிருந்த ராமானுஜம் நிச்சயம் சமூகத்துக்கான விதை.
கும்பகோணம், சென்னை, லண்டன் என ஒவ்வொரு இடத்தையும் கதை நடந்த அந்தக் காலத்துக்கே கொண்டு வருவது சவாலானது... அதைக் கொண்டு வர முடிந்ததா...?
மேற்கத்திய, ஐரோப்பிய படங்களில் 100-க்கு 80 படங்கள் எழுதப்பட்டவைகளாக இருக்கின்றன. அதுதான் கடல் கடந்தும், காற்று கடந்தும் பேச வைக்கின்றன. அந்த பாணி சினிமாக்கள் இங்கே குறைவு. அப்படி வந்த ஒரு சில படங்களிலிருந்து இது மாறுபட்ட இடத்தில் இருக்க வேண்டும் என நினைத்தேன். அந்த நம்பகத்தன்மையை இந்தக் கதையில் கொண்டு வந்திருக்கிறேன். கும்பகோணத்தில் ராமானுஜம் பிறந்து, வளர்ந்த வீட்டில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். சென்னையை விட அந்த கால லண்டனை நினைத்தபடி கொண்டு வருவதில் எனக்கு சிரமம் இல்லை. நம்பகமான உழைப்புக்கு நல்ல இடம் கொடுத்திருக்கிறது இந்த சினிமா. நடிகை சாவித்ரியின் பேரன் அபிநய், தெலுங்கு வரவு பாமா, நிழல்கள் ரவி, சுஹாசினி இவர்கள் எல்லாம் பாத்திரங்களாக வாழ்ந்து உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
தனி மனித வரலாற்றைப் படமாக்குவது பெருங்கலை... எந்த இடத்திலும் துளி கூட பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்... இப்படியான சிரமங்களுக்கு இடையே உருவாகும் இது மாதிரியான படங்களுக்குச் சமீபத்திய தமிழ் சினிமா சூழல் உதவிகரமாக இருக்கிறதா...?
கொரியா, ஈரானிய படங்களுக்கு ஏகப்பட்ட சென்சார் கெடுபிடிகள் இருக்கின்றன. அந்த வரைமுறைகளுக்கு உட்பட்டுதான் உலக அரங்கில் முதன்மையான சினிமாக்களை அவர்கள் கொடுக்கிறார்கள். சின்ன சின்ன உணர்வுகளுக்கு பக்கத்தில் போய், உறவுகளை முதன்மைப்படுத்தி சினிமா எனும் கலையைச் செய்கிறார்கள். ஆனால் இங்கே கேமிராக்கள் அந்தப் பக்கமே போகவில்லை. பாலுமகேந்திராவின் "தலைமுறைகள்' மாதிரி ஒவ்வொன்று அவ்வப்போது வருவது ஆறுதல். இங்குள்ள ஹீரோயிஸத்தில் உண்மை இல்லை.
ஆனாலும் அதைத்தான் நாம் ரசிக்கிறோம். தனி மனித உளவியலைப் பாதிக்கிற சினிமா, சமூகத்தையும் பாதிக்கும் என்பதை நாம் உணராமல் கலையை வளர்க்கிறோம். நன்றாக உடைகள் அணிந்த நவ நாகரீக ரவுடிகள்தான் இங்கே ஹீரோக்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சினிமாக்களை பொழுதுபோக்கு என நினைப்பது பெரும் ஆபத்து. வன்முறை செய்கிறவனை விட வன்முறையை அங்கீகரிப்பவன் ஆபத்தானவன் என மகாத்மா சொல்லியிருக்கிறார். அதை உணராத குறைதான் கல்வி, சினிமா, அரசியல் என எல்லாவற்றிலும் நாம் சராசரித் தன்மையை எதிர்பார்ப்பதற்குக் காரணம். வேலை வேண்டும் என்பதற்காக நான் சினிமா எடுக்கவில்லை. சினிமா மீது காதல் இருக்கிறது. அதனால் அதில் நியாயம் வைக்க ஆசைப்படுகிறேன். உயிரோட்டமுள்ள கதைகளுக்கு நுட்பமான உணர்வுகள் கிடைக்கும் போதுதான் நல்ல சினிமா கிடைக்கும். அப்படியொரு சினிமா இது. எனக்கென சில பார்வையாளர்களை இந்த தமிழ் சமூகம் வழங்கியிருக்கிறது. அது நிஜமாகவே மகிழ்ச்சி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...